Sunday, 13 May 2018


மே 18ஐ துக்கதினமாக்காதீர்கள்!
 துக்கதின’-மிதவாதப் பொதுப்புத்தி
பல்லாயிரக் கணக்கானோர் ஒரேநாளில் கொன்றொழிக்கப்பட்டது துக்கநிகழ்வில்லையா? இதைத் துக்கதினமாகக் கருதாமல் வேறெவ்விதம் கருதுவது? என வாதம்புரிவோரின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கிறது. இவ்விதம் வாதம் புரிவோர் இலங்கைவரலாற்று நாட்காட்டியில், இத்தினத்தை ஒரு துக்கதினமாகப் பதிவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறாரகள். இம்முயற்சிக்கு சிறிலங்கா அரசின் மறைமுக ஆதரவும் உண்டு. பயங்கரவாதத்தால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவென வியாக்கியானம் கொடுத்து இது ஸ்ரீ லங்காவின் துக்கதினமாக ஆக்கப்பட்டாலும் வியப்பதற்கில்லை. பரபரப்புகளோ, ஆரவாரங்களோ எதுவுமின்றி, கமுக்கமாக, கபடத்தனமாக, வாழைப்பழத்தில் ஊசியேற் றுவது போல் நடந்துவந்த துக்கதினமாக்க முயற்ச்சி, தற்போது வெளிப்படையான அரசியலாக நடைபெறத்தொடங்கியுள்ளது. இமுயற்சியின் குறிக்கோள் மே18 இன ஒழிவையொட்டி தமிழ்தேசிய மிதவாத பொதுப்புத்தியை உருவாக்குவதேயாகும்.  தமிழீழ ஆதரவாளர்களின் ஒரு பகுதியினர், இப் பொதுப்புத்தியால் ஏற்பட்டுள்ள, ஏற்படவுள்ள அரசியல் தீமைகளைப் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர். இதனால், இப்பொதுப் புத்தியை நிறுவனமயமாக்கலுக்கு எதிரான அரசியல் போராட்டமொன்று கூர்மையடைந்து வருகிறது. தமிழ்பேசும் மக்களின் அரசியல் அரங்கில், தமிழ்த் தேசிய மிதவாதத்திற் கெதிரான போராட்டம், சுமார் 25 வருடங்களுக்குப்பின்னர் மீண்டும் ஆரம்பித்து விட்டதற்கான அறிகுறியே இவ் அரசியல் போராட்டமாகும்.
1983இல் இருந்து 2009வரையான காலப்பகுதியில், தமிழீழ அரசியல் அரங்கம், தமிழ்த் தேசிய மிதவாதம் அற்ற அரங்கமாகவே காணப்பட்டது. இக்காலப்பகுதியில், அனைத்து வகைத் தமிழ்த்தேசிய மிதவாதிகளும் தமது அரசியல் நடவடிக்கைகளை நிறுத்திக்கொண் டார்கள் அல்லது ஒழிவுமறைவானதாக ஆக்கிக்கொண்டாரகள், அதாவது தலைமறை வாகச் செயற்பட்டுவந்தார்கள். மே18 இனஒழிப்புக்குப் பின்னால் உருவான அரசியல் நிலை இம்மிதவாதிகள் மீழவும் செயற்படுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது. தமிழீழத்தின் இரட்சகர்களாக தம்மைக்காட்டிக்கொண்ட இவர்கள் சுதந்திரமாக வலம் வரத் தொடங்கினார்கள். இனஒழிப்பு இவர்களுக்கு வளங்கிய வாய்ப்புக்கள் இரு வகைப்படும். முதலாவது: தமிழீழப் போராளிகள் பாரியஅழிவுக்கும், பின்னடைவுகளுக்கும் உள்ளானமை; இரண்டாவது: தமிழீழ மக்களின் பெருவாரியானோரின் மரணத்தை முன்வைத்து, தமிழீழப் போர்க்குரலை அழுகுரலாக மாற்றக்கூடியதாய் இருந்தது. இவ்விதம் நோக்கில் சாராம்சத்தில் மே18 இனஒழிப்பு நடவடிக்கை தமிழ்த் தேசிய மிதவாதிகளுக்கு ஓர்பெரும் வரலாற்று நன்கொடையாகும். இவர்களுக்கான அரசியல் களம் தங்குதடை எதுவுமின்றி திறந்துவிடப்பட்டதைக் கண்டு மகிழ்ந்து, “நல்லான் செத்தத்து நல்லது நல்லது, நாலுகாசுக்கு நல்லது நல்லதுஎன சாவு ஒப்பாரி மேளம் கொட்டத் தொடங்கிவிட்டார்கள்.   
இவர்களால்-இவ் ஒப்பாரி பாசாங்கர்களால்- வளர்க்கப்பட்டுவரும் துக்கதின’-மிதவாதப் பொதுப்புத்தி இரு விதமான தீங்குகளைக் கொண்டுள்ளது; ஒன்று வரலாற்று வளர்ச்சியைப் பற்றிய மிகத் தவறானதோர் கண்ணோட்டம், மற்றையது மே18 இனப்படுகொலைபற்றிய உண்மை மறைக்கப்படல்; மூன்றாவது இவ் அழிவின்போதான அனர்த்தங்கள் எதற்கும் எதுவித நிவாரணமோ, தீர்வுகளோ ஏற்படுத்தப்படாமை. இவை  மூன்றையும் தனித்தனியாக நோக்குவோம்.
I  முதலாவது தீங்கு: வன்முறைகள்பற்றிய தவறான பார்வை:
I-1) சமூக வளர்தடை வன்முறை:
                         வர்க்கப்போராட்டங்களிலும், தேசிய அல்லது தேசியஇன விடுதலைப் போராட்டங்களிலும் , சாதிய சமத்துவத்திற்கு எதிரான போராட்டங்களிலும், அனைத்து மக்கள் போராட்டங்களிலும் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்படுவது வளமை.
கம்யூனிஸ்டுகளைத் தோற்கடிக்கவும்(இது வர்க்கப் போராட்டம்), யூதர்களை ஒழித்துக்கட்டவும்(இது குருதியின அழிப்பு) பாசிஸவாதிகள் செய்த கொலைகள் சாதரணமானவையா? ஆபிரிக்க எழுச்சியை அடக்கியொடுக்க பிரித்தானியர்களால் நடத்தப்பட்ட போயர் யுத்தத்தின்போது ஆபிரிக்கர்கள்மீது ஏவிவிடப்பட்ட கொலைவெறித் தாக்குதல்கள் சாதாரணமானவையா? அமெரிக்காவை உழைப்புவள நாடாக ஆக்குவ தற்காக ஸ்பெயின் போன்ற நாடுகளால், கடலில் வைத்துக் கொல்லப்பட்ட கறுப்பின மக்களும், பின்னர் அமெரிக்காவில்வைத்து அமெரிக்கர்களால் கொல்லப்பட்ட கறுப்பின மக்களும் மறக்கப்படக்கூடியவர்களா? இந்திய உபகண்டத்தில் ஆரிய ஆக்கிரமிப் பாளர்களால் கொன்றொழிக்கப்பட்டவர்களும், அழித்தொழிக்கப்பட்ட நாகரிகங்களும் மறக்கக்கூடியனவா? இந்திய சுதந்திரத்தின் போது, இந்தியாவில் அரங்கேற்றப்பட்ட இந்து-இஸ்லாம் மோதல் சிறியவிடயமா? 1950களில் இந்தோனேசிய நாடுகளிலும், கொறியாவிலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்திய ஈவிரக்கமற்ற கொலைகளும், மனித சித்திரவதைகளும், உயிருடன் இருக்கும்போதே மனித ஈரல்களை வெட்டியெடுத்துத் தின்ற அமெரிக்கக் கொடுமைகள் மறக்கக்கூடியனவா?  1970களில், இந்தோனேசிய அமெரிக்கத் தாசர்கள், இந்தோநேசிய கம்யூனிஸ்டுகளை அழிப்பதற்காக இலட்சக்கணக்கான மக்களை ஓரிருநாட்களில் கொன்று குவித்தது சாதாரணமானதா? இதே காலப்பகுதியில் எகிப்து, சிறியா, லிபியா ஆகிய நாடுகளிலும் இது நடந்தது. சென்ற நூற்றாண்டின் இறுதியில் இராசயன ஆயுதங்களைத் தேடுவதாகக் கூறி, ஈராக்கில் நுளைந்த அமெரிக்க இராணுவம்  நடத்திய அனர்த்தங்கள் கொஞ்சநஞ்சமா? ஆபிரிக்கநாடுகளில் பெருகிவரும் அகதி முகாம்களும், அம்முகாம்களில் நடக்கும் குருதியினப் படுகொலைகளும் சாதரணமான வையா? இறுதியாக, மைமரில் றோஹின்ய இஸ்லாமியர்களுக்கு எதிராக உலகமே கண்டிக்கக்கூடிய முறையில் நடந்த இனப்படுகொலை சாதரணமானதா? சிரியாவில் தற்பொது நடப்பதுவும் இதுதான். ஏற்கனவே வகைதொகையின்றி அரேபியர்களுக்கு எதிரான இன ஒழிப்பில் ஈடுபட்டுவந்த இஸ்ரவேல் தற்போது மீண்டும் அம்முயற்சியில் இறங்கத் தயாராகிவருகிறது. இவ்வித எடுத்துக்காட்டுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இவை எடுத்துக்காட்டுவது என்ன?
அனைத்துவகை ஆக்கிரப்பாளர்களும், தமது ஆக்கிரமிப்பில் வெற்றிபெறவும், பெற்றவெற் றியைத் தக்கவைக்கவும், பல்வேறு விதமான மனிதப்படுகொலைகளை நடத்துவது இயல்பானது, அவர்களின் இருத்தலுக்கும் வளர்ச்சிக்கும் இது அவசியமானது. இவ்வித அநர்த்தங்கள் இன்றேல் மூலதனக் குவியல்சாத்தியமில்லை. ஆக்கிரமிக்கப்பட்ட அல்லது ஆக்கிரமிக்கப்படவுள்ள மக்கள் எதிர்த்துப் போராடினாலும்சரி போராடமல் விட்டாலுஞ்சரி, ஆக்கிரமிப்பாளர்கள் மக்களை கொல்வார்கள், இன ஒழிப்புகளை நடத்துவார்கள். இதில் சந்தேகமிருக்க முடியாது, சந்தேகம் இருக்கவும் கூடாது. மூலதனக் குவியலுக்கு அத்தியாவசியமான  இவ்வித வன்முறையை வளர்தடை வன்முறை என்போம்.
I-2) சமூக வளர்திசை வன்முறை:
மறுபக்கத்தில், ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடுபவர்கள் ஆயுதம் ஏந்தாது விடுகிறார் களா? ஏந்த மாட்டார்கள் என எதிர்பார்க்கத்தான் முடியுமா? ஏந்துவார்கள், ஏந்த வேண்டும், ஏந்துகிறார்கள்; இது அவர்களின் விருப்புவெறுப்புக்கு அப்பாற்பட்டது.  “ஒவ்வொரு முதல்வினையும், தனக்கெதிரான சமமான பதில்(எதிர்)வினையைக் கொண்டதுஎன்ற விதி பொய்த்துப்போய்விடுமா என்ன? இவ்விதி பொய்த்துப் போவதை இயற்கை அனுமதியாது. ஆனால், மக்களின் வன்முறை தற்பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டதே தவிர எவரையும் அழிப்பதை நோக்கமாகக் கொண்டதல்ல. இதை வளர்திசை வன்முறை என்போம். இவ் வளர்திசை வன்முறையானது, வர்க்கஎதிரிகளையும், அனைத்துவகைப் பேரகங்கார எதிரிகளையும் அரசியல் ரீதியாகத் தனிமைப்படுத்தி, அவர்களின் ஆட்சி யதிகார வல்லமையை முறியடித்து, அதற்க்குப் பதிலாக தமது ஆட்சியதிகாரவல்லமையை நிறுவுவதைக் குறிக்கோளாகக் கொண்டதாகும். மூலதனக் குவியலின் பின்னால் நடைபெற்ற வளர்திசை வன்முறைகளுக்கான சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.
ருஸ்யாவில் கம்யூனிஸம் ஆட்சிக்குவந்தபோது(இது தான் உலகின் முதல் கம்யூனிஸ அரசு) ருஷ்யாவில் நடந்த குறுகிய கால உள்நாட்டு யுத்தத்தின் போதும், பாசிஸத்திற்கு எதிராக கம்யூனிஸ்ட் ருஷ்யா நடத்திய போராட்டத்தின் போதும் நடத்தப்பட்ட கொலைகள் சாதாரணமானவையல்ல. இதனால்தான் ஸ்ராலினின் முறுக்குமீசைக்கு உலக முதலாளித் துவமே அஞ்சியது. அதேபோல், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியை அமைப்பதற்காக நடத்திய சுமார் முப்பது வருடகால வரலாறுள்ள சீன உள்நாட்டு யுத்தத்தின் போதும் நடத்திய கொலைகள் சின்னஞ்சிறு சம்பவங்களல்ல. நகர நடுத்தரவர்க்கத்தின் புதிய ஜனநாயக விரோதப்போக்கை அடக்குவதற்காக, கம்பூச்சிய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய கொலைகள் வருத்தப்படவேண்டிய அனர்த்தங்களாகும். இந்தோனேசியாவிலும், கம்போடியாவிலும் அமெரிக்கர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பூகோளப்பரப்புகளை மீட்டெடுப்பதற்காக இந்தோனேசியாவும், கொரியாவும் நடத்திய படுகொலைகள் உதாசீனபடுத்தக் கூடியதொன்றல்ல. சுமார் எழுபது வருடங்களாகியும் கொறியப் பிரச்சனை இன்னமும் தீரவில்லை. தென்கொரியாவில் இருந்து அமெரிக்கா வைத் துரத்துவதற்காக வடகொரியா ஒரு ஆணுஆயுத யுத்தத்திற்குத் தயாராகவும் உள்ளது. இவ் யுத்தம் மிகப் பெருமளவு அழிவுகளை ஏற்படுத்தும் என்பது உண்மை. அமெரிக்க இதைப்புரிந்துகொண்டு தென்கொரியாவில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும். அதேபோல், சீனாவில் இருந்து தப்பியோடிய சீன முதலாளிவர்க்க்கம், பிரித்தானியரின் ஆழுமையின் கீழிருந்த ஹொங்ஹொங்கில் சரணடைந்தது, இன்னோர்பிரிவு தைவானில் சரணடைந்தது. தைவான தற்போது அமெரிக்கப் பாதுகாப்பில்(மறைமுகமாக) உள்ளது. ஹொங்ஹொங்கை சீனா ஓரளவிற்கு மீட்டுவிட்டது. தைவான் இன்னமும் மீட்கப்பட வில்லை. அனால், இரு பூகோளப்பரப்புகளையும் மீட்போம் என சூசகமாக அறிவித்துள்ளது. அமெரிக்காவும் ஜப்பானும் தாமாக விலகிக்கொள்ளாது விட்டால், சீனாவின் முயற்ச்சி பேரழிவுகளை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். அதற்க்கு சீனா பொறுப்பல்ல. எடுத்துக்காட்டுகள் போதுந்தானே? தற்போது தொகுப்போம்.
I- 3) அழிவுகளுக்கு இல்லை நடுவுநிலை:
வன்முறைகள் எவ்விதம் இருவகைப்படுமோ, அதேபோல் அழிவுகளும் இருவகைப்படும். ஒன்று ஆக்கிரமிப்புக்கான அழிவு, மற்றையது ஆக்கிரமிப்பை முறியடிப்பதற்கான அழிவு. மூலதனக் குவியலை பாதுகாப்பதையும், முன்னெடுத்துச் செல்வதையும் குறிக்கோளாகக் கொண்ட(அது தனியார் மூலதனமாக இருக்கலாம், அரச மூலதனமாக இருக்கலாம்) வல்லரசுக்கட்டுமானங்கள் இருக்கும்வரை(அது உலகளாவிய வல்லரசாக இருக்கலாம், பிராந்திய வல்லரசாக இருக்கலாம்.) இருவகையான அழிவுகளும் இருக்கவே செய்யும். முன்கூறியவகையிலான வல்லரசியக் கட்டுமானங்கள் என்று முடிவுக்கு வருகின்றதோ அன்றுதான் மனித அழிவுகளும் முடிவுக்குவரும். ஆகவே உலகில் வாழும் அனைத்து மனிதர்களும் இவ்விருவிதமான அழிவுகளையிட்டும் தனக்கென்று ஒரு நிலைப்பாட்டை எடுத்தேயாகவேண்டும். பேரழிவு விடயத்தில் நடுநிலை வகிக்கக் கூடாதென்பதல்ல, வகிக்க முடியாது. ஏனெனில் இவ்வழிவுகள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நேரடி விளைவுகளை ஏற்படுத்துவது நிச்சயம்.         
I -4) முதலாவது தீங்கு:
                            இவ்விளக்கத்துடன் மே18 பற்றிய துக்கதின’-மிதவாதப் பொதுப் புத்தியின் முதலாவது தீங்கிற்கு வருவோம். வல்லரசுக் கட்டுமானங்களினதும் அதன் எடுபிடிஅரசக் கட்டுமானமான ஸ்ரீ லங்கா அரசினதும், தொடர் நடவடிக்கைகளில் ஒன்றுதான் மே18 நிகழ்வு என்பதை புரிந்து கொள்வதற்கும், புரியவைப்பதற்கும் பதிலாக, இந்நிகழ்வை தனித்ததோர் நிகழ்வாக மட்டும் இனம் காண்பதுவும் இனங்காட்டுவதும்; தமிழீழம் அடக்குமுறையில் இருந்து விடுபடும்வரை இவ்விதமான பேரழிவுகள்  தொடரும் என்பதை புரிந்து கொள்வதற்கும் புரியவைப்பதற்கும் பதிலாக, முடிந்த முடிவாக இதை இனங் காட்டுவதும்; இதன் மூலம், மக்களின் கோபத்தையும் எதிர்ப்புணர்வையும் வளர்ப்பதற்குப் பதிலாக, இறந்தவர்கள் மீதான இரக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு “அந்திரட்டிச் சடங்கு விழாவாக” நடத்துவதுதான் முதலாவதுவகைக் தீங்காகும். இதை இப்படியேவிட்டால் இவ்வித விழாக்களில் காங்கிரஸ் கட்சியினரும், ராஜ்பக்‌ஷ அணியினரும் கூடக் கலந்துகொள்ளக்கூடும்.

II) இரண்டாவது தீங்கு: உண்மை மறைப்பு
மே18 பேரிழப்பை மனிதஉயிகள் ஒழிப்பு நிகழ்வாக மட்டும் பார்ப்பதுவே இவ் உண்மைமறைப்பாகும். மே18 இனஒழிப்பில் மக்கள் திரள்திரளாகக் கொல்லப்படுதுவும் நடந்தது, அது மட்டுமா நடந்தது. மற்றோர் பேரழிவும் நடந்தது. மே18 களத்தில் தமிழீழ அரசும் மரணித்தது. எவ்விதம்?
அரசு என்பதென்ன? அது ஒரு வன்முறைக் கருவி. சமூகத்தில் ஒரு சாரார் பிறிதோர் சாரர் மீது தமது விருப்பையும் தேவையையும் திணிப்பதற்கான வன்முறைக்கருவி. எந்த அரசாக இருந்தாலும் இதுதான் உண்மை. பொருளாதார வன்முறை, அரசியல் வன்முறை, சிந்தனைவன்முறை, பண்பாட்டுவன்முறை, கருத்தியல் வன்முறை, நிர்வாக வன்முறை, நீதியியல் வன்முறை, சிவில் ஒழுங்கு வன்முறை, கருத்தியல் வன்முறை, அறிவியல் வன்முறை ஆகிய இத்தியாதி வன்முறைகளின் கூட்டுத் தொகுப்புத்தான்(comlex) அரசாகும். மிக நுண்ணிய (sophisticated) கூட்டுத்தொகுப்பான அரசென்ற இவ் வன்முறைக் கருவியின் இருத்தலையும், செயற்பாட்டையும் தீர்மானிப்பது ஆயுதப்படைதான், ஆயுதப்படை மாத்திரந்தான். சமூக வரலாற்றின் அனைத்துக் கட்டங்களிலும் அனைத்து வேளைகளிலும் அரசென்ற இவ் வன்முறைக் கருவியை உருவாக்கியதே ஆயுதப்படைதான், அல்லது ஆயுதப்படையூடாகத்தான். ஆயுதப்படையின் செயற்பாடுகள் தடுக்கவோ அல்லது முடக்கவோ படுமானால் அரசென்ற கருவியின் செயற்பாடு தடுக்கவோ அல்லது முடக்கவோபட்டுவிடும். ஒரு தேசிய இனம் தனது சொந்தத் தனித் தேசத்தை உருவாக்க வேண்டுமானால் அது தனக்கென்றோர் படையைக் சொந்தமாகக் கொண்டிருக்கவேண்டும் அல்லது  அவ்விதமானதோர் படையை சொந்தமாக்கிக் கொள்வதற்கான அரசில்வாய்ப்புக் களைக் கொண்டிருக்கவேண்டும். கத்திலினா தேசம் இரண்டாவதுக்கான எடுத்துக்காட் டாகும். ஒரு வர்க்கம் அல்லது ஒரு தேசிய இனம் தனது எதிரியுடன் நேருக்குநேர் எதிர்த்து நிற்கக் கூடிய ஒரு ஆயுதப்படையை உருவாக்கிவிட்டதென்றால் அதன் அர்த்தம், ஒரு புதிய அரசு உருவாகிவிட்டது அல்லது ஒரு புதிய அரசு உருவாவதற்கான அரசியல் களம் திறக்கப்பட்டுவிட்டது என்பதேயாகும்.
மே18 நிகழ்வின் போது தமிழீழ அரசு என்றோர் வன்முறைக் கட்டுமானம் இருந்து என்பது உண்மை. அது சுமார் 14வருட வரலாற்றைக் கொண்டதாகவும் இருந்தது. இவ் அரசு விடுதலைப்படைகள் எனும் ஆயுதப்படையால் உருவாக்கப்பட்டதாகும். அவ் ஆயுதப்படை மே18 களத்தில் வைத்து தனது துப்பாக்கிகள் மௌனிக்கின்றன எனக் கூறுவதன் அரத்தம் என்ன? தமிழீழ அரசு கலைக்கப்படுகின்றது என்பதுதானே. அயுதங்களை மௌனிக்கச் செய்வதம் மூலம் இயக்கம் கலைக்கப்பட்டது என்று அர்த்தமாகாது. ஆயுதக் களைவு செய்யப்பட்ட அரசியல் அமைப்புகள் மீண்டும் எழுந்துவந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் எத்தனையோ உண்டு. ஆகவே புலிகள் இயக்கம் மீண்டும் தளைக்கலாம், மீண்டும் ஒரு அரசு அமைக்கலாம். அது வேறுவிடயம். ஆனால் இருந்த ஒரு அரசு மர்ணித்துவிட்டது. இது தமீழிழ மக்களுக்கு ஒரு பேரிழப்பும், பெரும் தோல்வியுமாகும். இது பௌத்த சிங்கள பேரகங்காரத்துக்கும், இந்திய தேசவிஸ்தரிப்புவாதத்திற்கும் கிடைத்த ஒரு மாபெரும் வெற்றியாகும். தமிழீழ அரசை இழந்துவிட்டோம் என்ற உண்மையை மூடிமறைப்பதுதான் துக்கதின’-மிதவாதப் பொதுப்புத்தியின் முதன்மைக் குறிக்கோளாகும்.
III) மூன்றாவது தீங்கு: நிவாரணங்களுக்கான போராட்டங்களை மழுங்கடித்தல்.
மக்களின் பல்வேறு பகுதியினர் அனைத்துப் பிரதேசங்களிலும் நிவாரணங்களுக்கா பல மாதக்கணக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். துக்கதின’-மிதவாதப் பொதுப்புத்தி இப்போராட்டங்களைப் புறந்தள்ளியாதாகவே உள்ளது.
V) மே 18இன் குறிக்கோள்கள்/முழக்கங்கள்
இச் சூழலில் மே 18இன் குறிக்கோள்கள்/முழக்கங்கள் என்னவாக இருக்கவேண்டும்.
அ) மிதவாதத்திற்கு எதிரான அரசியல் போராட்டத்துக்கு அறைகூவல் விடுக்கப் படவேண்டும். துக்கதின’-மிதவாதப் பொதுப்புத்தியை செருப்பால் அடித்துத் துரத்த வேண்டும்.
ஆ) நிவாரணங்களுக்கான போராட்டங்களை (அரசியல்+பொருளாதார+ ஜனநாயக நிவாரணங்கள்) ஊக்கிவிப்பதற்கான முழக்கங்களை முன்னெடுக்கும் நாளாக இருக்கவேண்டும்.
இ) தமிழீழ அரச உருவாக்கத்தை நோக்கிய பயணத்தை தொடர்வதற்கான அரசியல் உந்துதலை ஏற்படுத்தும் நாளாக இருக்கவேண்டும்.
ஈ) ஒப்பாரி மனோநிலைக்கு எதிராக முழங்கவேண்டும். இப்பயணத்தின் போது எதிரியால் ஏற்படுத்தப்படக்கூடிய அழிவுகளைத் தாங்கிக் கொள்ளக்கூடிய மனோநிலையையும், அவனுக்கு அழிவை ஏற்படுத்தும் மனோநிலையையும் வளர்க்கும் நாளாக இருக்கவேண்டும்.
13/05/18

  


No comments:

Post a Comment

2018 இன் மகிழ்வுகளும் துயரங்களும் - இந்தியளவில்

2018 இன் மகிழ்வுகளும் துயரங்களும் இந்தியளவில் I - அக உறவுகளில் I - அ ) வளர்திசை        நிகழ்வு 2018 இல் நடைபெற்ற தேர்தல்களின்...