Tuesday 29 January 2019

புலிகளின் தலைவர் பிரபாகரன் பிரிவினைவாதியா?


புலிகளின் தலைவர் பிரபாகரன் பிரிவினைவாதியா?

        விடுதலைப் புலிகள் இயக்கமும், அதன் தலைவர் பிரபாகரனும் தமிழீழத்திற்கான தமது போராட்டங்களின் போது பல்வேறு தவறுகள் இளைத்துள்ளார்கள் என்பது மறைக்கவோ, மறுக்கவோமுடியாத உண்மை. இத் தவறுகளுக்கு காரணமான அரசியல் பார்வைக்கு எதிராகப் போராடவேண்டியது அனைத்துவகை ஜனநாயக சக்திகளினதும் கடமையாகும். இப்போராட்டம் புலிகளின் தலையில் மண்ணை அள்ளிக் கொட்டுவதற்காக அல்ல. புலிகளின் மீழெழுச்சியை சாத்தியப்படுத்துவதற்காக. ஆகவே, இத்தவறுகளுக்கு எதிரான அரசியல் விமர்சனங்களையும் கருத்துப் போராட்டங் களையும் “பிரிவினைக்கு” எதிரான தீவிர, குள்ளநரித்தனமான பிரச்சாரமாக முன்னெடுத் துச் செல்வது தவறானது. இது தமிழீழ அரசியலுக்கு இழைக்கும் மிகபெரும் தீங்காகும். தமிழ் மிதவாதிகளும் (Moderatists not liberalists), தமிழ்தேசிய எட்டப்பரிஸ்டுகளும், மஹாவம்சப் பேரகங்கார வாதிகளும் இவ்வித நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது யாவரும் அறிந்ததே. இவ்வித பிரச்சாரங்களின் விசமத்தனதை வெளிக்கொணர்வது மட்டுமே இக்கட்டுரையின் குறிக்கோளாகும்.
       பல்-தேசஅரசில் ஜனநாயக பூர்வமாக இணைந்துகொள்ளும் உரிமை மறுக்கப்படும் ஒரு தேசிய இனம், சுதந்திரத்  தனித்-தேசஅரசு கேட்பதெல்லாம் என்றும் எப்போதும், எங்கும், எவராலும் பிரிவினைவாதமெனக் கருதப்படுவதில்லை.
       சுயநிர்ணய உரிமை இரு வகைப்படும்.

அகவய சுயநிரணய உரிமை:

        ஒன்றுக்கு மேற்பட்ட, பல்வேறு மட்டத்திலான, இனக் குழுமங்கள் வாழும் ஒரு நாட்டில், அனைத்து இனக்குழுமங்களும் சம உரிமையுடன் வாழக்கூடியதொரு அரசியல் கட்டுமானம் நிலவுமானால்; அதாவது மத்தியில் கூட்டரசும் மாநிலத்தில் சுயாட்சியரசுமாக வாழ்வதற்கான உரிமையைக் கொண்டதொரு அரசியல் கட்டுமானம்.  இவ்வித கட்டுமானத்தைக் கொண்டுள்ள அவ் அரசு, தேசிய ஜனநாயகப் பல்-தேசஅரசு என அழைக்கப்படும். சமஸ்டி ஆட்சிமுறை இவ் அகவய சுயநிர்ணய உரிமையின் ஒரு வடிவமாகும். இக் கூட்டரசின் அமைப்பு வடிவமும், கூட்டரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையேயான அதிகாரப் பகிர்வு முறைமையும், இக் கூட்டரசில் அங்கம் வகிக்கும் எதன் மீதும் திணிக்கப்படுவதாக இருக்கக்கூடாது; அனைத்துக் குழுமங்களினதும் கூட்டு முடிவாகவும், சுய விருப்ப முடிவாகவும் இருக்கவேண்டும். இதுதான் அகவய சுயநிர்ணய உரிமையாகும். இவ் உரிமையின் அடிப்படையில் அமைக்கப்பட்ட அரசுதான் தேசிய ஜனநாயகப் பல்-தேசஅரசு எனப்படும். இவ்விதமானதோர் அரசில்தான் பாராளுமன்ற ஜனநாயகம் உயிர்த் துடிப்புடனும், ஜனநாயகத்தின் நிஜ அங்கமாகவும், அதிகாரப்பகிர்வின் செயலரங்கமாகவும் செயற்படும். இவ்வித அரசுக்கான பொதுப்பெயர் Confederate state.
"உலக மக்கள்தொகையில் 40% சமஸ்டி அமைப்பின் கீழேயே வாழ்கிறார்கள். இவ்வித சம்ஸ்டி மாநிலங்கள், சுயாட்சி பொருந் தியவையாக இருக்கலாம்; ஒரு பெரிய நிலப்பரப்பாகவோ அல்லது நாடாகவோ இருக்கலாம்; இவ்வித சமஸ்டிஅமைப்புகள் பல்வேறு வகைகளில் இருக்கின்றன. புவியியல் ரீதியாகவோ அல்லது சிக்கல்பிக்கலாக ஏனைய விடயங்களிலோ பிரிக்க முடியாதபடி ஒரு நாடு இருக்கும் என்றால் அங்கு பொருளாதார அடிப்படை யிலோ இன அடிப்படையிலோ, மொழி அடிப்படையிலோ அல்லது வேறு ஏதாவது அடிப்படையிலோ பாகுபாடு இருக்குமா- னால் அதற்கான தீர்வாக சுயாட்சி முறையை அறிமுகப்படுத் தலாம்"
       இதனால், சமூகப்புரட்சியை விரும்புபவர்கள், இன, மத, மொழி, மாறாமரபியல் வெறித் தனங்களையும்(fanatism)1, அவ்வெறித்தனங் களின் அடிப்படையில் அமைந்த தேசியவாதங்களையும் வெறுப்பவ -ர்கள், சமதர்மப் புரட்சியாளார்கள், யுத்தங்களை முடிந்தவரை தவிர்க்க விரும்புபவர்கள், உளைக்கும் மக்கள் அனைவரும் ஒன்றுபடவேண்டு- மென விரும்புவர்கள் அனவரும் எவ்வளவுக்கு முடியுமோ அவ்வள- வுக்கு அகவய சுய நிர்ணய உரிமைக்காகவே போராடவேண்டும். அதாவது, தேசிய ஜனநாயகப் பல்-தேச அரசின் உருவாக்கத்துக்காகவே போராடவேண்டும். இதுதான் அவர்களின் பொதுப்பார்வையாக இருக்க வேண்டும். ஆனால், அது அவர்களின் விருப்பத்தை மட்டும் சார்ந்த தல்ல. இன, மத, மொழி, மாறாமரபியல் பேரகங்காரவாதிகளின் செயற் பாட்டையும் சார்ந்ததாகும். ஆகவே, இப் புரட்சிகரமான பொதுப் பார்வை, இறுகிப் போன பொதுபுத்தியாக மாறிவிடக்கூடாது.
      இலங்கை, இந்திய முதல் மற்றும் இரண்டாம் தலைமுறை இடதுசாரிகள்2 இன்றுவரை இதே தவறைத்தான் செய்துவருகிறார்கள். இலஙகை அரசை ஒரு பல் தேச அரசாக உருவாக்கும் முயற்சியில் இவ் இடதுசாரி இயக்கங்கள் எந்த முன்னேற்றத்தையும் இன்றுவரை ஏற்படுத்தவில்லையென்பதை இங்கு குறிப்பிடவேண்டியது அவசியமாகி -ன்றது.     .

புறவய சுயநிரணய உரிமை:

           ஒன்றுக்கு மேற்பட்ட இனக் குழுமங்கள் வாழும் ஒரு நாட்டில், அனைத்து இனக்குழுமங்களும் சம உரிமையுடன் வாழக்கூடியதொரு தேசிய ஜனநாயகப் பல்-தேசஅரசை எவ்வளியிலும் உருவாக்க முடியாது போகும் பட்சத்தில்,  குறிப்பிட்டதொரு, அல்லது பல இன-குழுமங்கள் ஒன்று சேர்ந்து சுதந்திரப் பல்-தேச அரசாக அல்லது சுதந்திரத் தனி-தேச அரசாக (Independent Mono-Nation State), பிரிந்து செல்வதற்கான உரிமையே புறவய சுயநிர்ணய உரிமை யெனப்படும்.
    காலனியல் அரசுகளின் காலனியல் அடக்குமுறை, காலனியல்&நவகாலனியல் அரசுகளின் நவ-காலனியல் அடக்குமுறை,தேசிய முதலாளித்துவ அரசுகளின் மறுகாலனியல் அடக்குமுறை, ஆகிய மூன்று அடக்குமுறைகளுக்கும் தொடர்ந்து உள்ளாகி வரும் ஒரு இனக் குழுமம், இம் மூவகை அடக்குமுறைகளின் போதும், தான் வாழும் நாட்டின் ஆட்சியில் இருக்கும், பெயரளவிற்கான பல்-தேச அரசின் கீழ், அகவய சுயநிர்ணய உரிமையுடன் வாழ எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வி -காணும் பட்சத்தில், சர்வதேச ஒழுங்குமுறை எதுவும் அகவய சுயநிர்ணய உரிமையை ஏற்படுத்தித்தர முன்வராத அல்லது முன்வர முடியாதநிலை தொடரும் பட்சத்தில், அவ் தேசிய இனக்குழுமம் பொதுவழமையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட புறவயசுயநிர்ணய உரிமையைப் பின்பற்றி சுதந்திரத் தனித்-தேச அரசைக் (Independent Mono-Nation State) கோருவது பிரிவினைவாதமல்ல. அது ஒவ்வொரு தேசிய இனத்தினதும் பிறப்புரிமை. அதுவும், மிகக் கொடூரமானதும், அதிக அரசியல் ஏமாற்றுத்தன்மை மிக்கதுமான மறுகாலனியல் அடக்குமுறையும் தேசிய இனஒடுக்குமுறையும் இணைந்து செயற்படும் காலத்தில் ஒவ்வொரு தேசிய இனங்களும் தமது இப் பிறப்புரிமைக்காக போராடுவது அத்தியாவசிய வரலாற்றுக் கடமையாகிறது.
       இந்திய அரசியல் சாசனத்தின்படி இந்திய அரசு ஓர் பல்-தேச அரசேயாகும். ஆனால், நடைமுறையில் அவ்விதமல்ல. இவ்வித பல்-தேச அரசுதான் “பெயரளவிலான பல்-தேச அரசாகக் கருதப்படுகிறது. பல்-தேச அரசுகள் இருவகைப்படும் ஒன்று, தேசிய அதிகாரத் துவ (bureaucratic)பல்-தேச அரசு, மற்றையது தேசிய ஜனநாயகப் பல் தேச அரசு. தேசிய அதிகாரத்துவ பல்-தேச அரசே பெயரளவிலான பல்-தேச அரசென” அழைக்கப்படுகிறது. இதுதான் இந்தியரசு.
      அதே வேளை இலங்கை, பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், மியான்மர் ஆகிய நான்கு தெற்காசிய நாடுகளும் மறுகாலனியல் அடக்குமுறையின் ஆரம்பித்திலேயே பல்-தேச அரசுகள் எனும் கருத்துக் கட்டுமானத்தையே தமது மண்ணில் இருந்து தூக்கியெறிந்து விட்டன. இதன் விளைவுதான், இலங்கை, ஸ்ரீ லங்காவாகவும் தமிழீழமாகவும் ஆகியது; பர்மா, மியாமராகவும் றோஹின்யாஆகவும் உருவாகின. சிந்துக்களின் பாக்கிஸ்தான், இன்னமும் சிந்துஸ்தானெனப் பெயர்மாற் றம் பெறவில்லை, ஆனால் பாக்கிஸ்தானாகவும், வங்காள தேசமாக வும், பலுஸ்திஸ்தானாகவும் மாறியுள்ளது. இவற்றுள், தமிழீழம், றோஹின்யா, பலுஸ்திஸ்தான் ஆகியவை தனித்-தேச அரசு எனும் நிலையை அடையாவிட்டாலும், தனித் தேசியங்கள் எனும் அங்கிகாரத்தை உலகளாவியஅளவில் பெற்றுவிட்டன. இந்தியாவின் தேசிய அதிகாரத்துவ பல்-தேச அரசின் கீழுள்ள காஷ்மீரையும், பஞ்சாபையும் இங்கு சேர்த்துக்கொள்ளவேண்டும்.
        பிரிவினைவாதிகள் எனும்  சொல்லாடல் (பிரிவினைவாதம். பிற்போக்குத்தனம். பிற்போக்குவாதிகள், சமூகசமநிலை(அமைதி) குழப்பவாதிகள், தேசத்துரோகிகள் பயங்கரவாதிகள் போன்ற பல வசைமொழிகளை உள்ளடக்கியதாகும்) ஒரு நாட்டின் நீதியான சமாதான வாழ்விற்கு அவசிமான ஐக்கியத்தை அதாவது வளர்திசை சமூக சமநிலையைக்(positive social equilibrium) குலைப்பதே பிரிவினைவாதமாகும். இவ்வித நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களே பிரிவினைவாதிகளாகும். இப்பிரிவினை வாதம் இனப் பிரிவினை, மதப்பிரிவினை, மொழிப்பிரிவினை, சாதிப்பிரிவினை எனப் பல்வேறு வகைப்படும். சமூகக் குழுமங்களின் மீதான அடக்குமுறைகள் மூலம் பேணப்படும் சமூக சமநிலை ஒடுக்கு முறையாளர்களின் சமநிலை -யாகும் இது அநீதியான சமூகச் சமநிலையாகும்(negative social equilibrium). இச் சமநிலை குலைக்கப்பட்டே ஆகவேண்டும்.
         இதற்க்கு மாற்றாக வளர்திசை சமூக சமநிலையை உருவாக்க முன்வருபவர்கள் பிரவினைவாதிகளல்ல, மாறாக அநீதியான மூக சமநிலையை உருவாக்குபவர்களும், பேணிப் பாதுகாப்பவர்களுந்தான் பிரிவினைவாதிகளாகும். அதிகாரத்தில் இருக்கும் உண்மைப் பிரிவினைவாதிகள் தமது பிரிவினைத் திணிப்பை எதிர்ப்பவர்களை பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள் எனப் பிரச்சாரம் செய்கின்றனர்.
       சுதந்திரஇலங்கையின் முதற்த்தலைமுறை பிரிவினைவாதியும், தலைமைப் பிரிவினைவாதியும் ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்கா வேயாகும்3. பௌத்த மதத்தை அரச மதமாக கொண்ட அரசியல் சாசனத்தை நடைமுறைக்கு கொணர்ந்தவர் இவரேயாகும்.
      அடுத்த பிரதான தலைவர், அமெரிக்கக் கைக்கருவியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவே4 ஆகும். பாராளுமன்றத்தின் அதிகாரத்தைப் பின்தள்ளி, இராணுவ அதிகாரத்தை தலைமையாகக் கொண்ட அரசியல் சாசனத்தை நடைமுறைக்குக் கொணர்ந்தவர் இவர்தான்.
     அனைத்துலக நிலைப்பாட்டில், அமெரிக்க எதிர்ப்பாளராக இருப்பதனால், ஜே.ஆரிடம் இருந்து வேறுபட்டாலும், இவ் வேறுபாடு வளர்திசைத் தன்மைபெற்றதாக இருந்தாலும், அடுத்த தலைமுறைப் பிரிவினைவாதி மஹிந்த ராஜபக்‌ஷவாகும்5. இவர் ஜே.ஆறிலும் விட வீறுகொண்டவர். ஜே.ஆற் இப்பிரிவினைக்கு அவசியமான முறையில் ஆட்சிக் கட்டுமானத்தை இராணுவமயமாக்கினார். மஹிந்த இவ் இராணுவக் கட்டுமானத்தை பயன் படுத்துவதில் வலுவுள்ளவராக மேலும் மேலும் வளர்ந்து வருகிறார்.
     பிரிவினைவாதத் தன்மைபெற்ற அநீதியான சமூகச் சமநிலையின் உருவாக்கிகளாகவும், அதனை மேலும் மேலும் வளர்த்து வருபவர்களு மாகிய இப் பிரிவினை ஊக்கிவிப்பாளர்கள், விடுதலைப் புலிகள் இயக்கத்தை பிரிவினைவாத இயக்கமெனச் சித்தரிப்பது உண்மைக்குப் புறம்பானதாகும். இது தமது சொந்த ரூபத்தை மறைப்பதற்கான முயற்சிகளாகும்.
      ருஷ்யசார்பு, சீனசார்பு என அழைக்கப்பட்ட முதலிரு தலைமுறைக் கம்யூனிஸ்டுகளும், ட்றொக்ஸியவாதிகளும் கூட இதே சித்தரிப்பை இன்றுவரை முன்வைத்து வருவதுதான் கவலைக்கிட மானது. அது மட்டுமல்ல பிரிவினை ஊக்கிவிப்பாளர்களின் ஒரு பகுதியினரை இன்றும் ஆதரித்துவருவது கண்டனத்துக்குரியதாகும்.
        நிலவும் அநீதியான சமூக சமநிலையையும், அதைப் பாதுகாத்துவரும் பிரிவினைவாதிகளின் ஆட்சியதிகாரத்தையும் தூக்கி- யெறிந்து, அதற்குப் பதிலாக, புதியதோர் சமூக சமநிலையையும், அதைப் பாதுகாப்பதற்கான அரசு அதிகாரத்தையும் உருவாக்குவதற்- கான போராட்டங்கள், அவசியம். இம் முயற்சியில் ஈடுபட்ட விடுதலைப் புலிகள் இயக்கம் பாராட்டப் படவேண்டியதே.
       ஆனால், இவ்வித அநீதியான சமூக சமநிலைகள் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையிலேயே குலைக்கப்பட வேண்டும். அதாவது இவ்விதக் குலைப்புகள் நீதியான சமூக சமநிலை என்ற குறிக்கோளை அடையக்கூடிய முறையில் ஒழுங்குபடுத்தப் பட்டதாக அமையவேண்டும். இப் போராட்டங்கள், ஒழுங்கு படுத்தப்பட்ட அரசியல் வியூகங்களுக்கு அமையாது நடைப்பெறுமானால், அவை விரும்பியோ விரும்பாமலோ பாதகமான எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும். நினைத்தது ஒன்றாகவும் நடந்தது வேறொன்றாகவும் ஆகிவிடும். நிலவும் வளர்தடைச் சமூக சமநிலையை மேலும் வளர்ப்பதாக அமைந்துவிடும். அதுவும் நீடித்ததோர் யுத்ததிற்காக ஆயுதம் ஏந்தத் துணிந்த விடுதலைப் புலிகள், எந்த வல்லரசுகளின் தாக்குதலையும் எதிர்கொள்ள தயாராக இருந்த விடுதலைப் புலிகள், இது விடயத்தில் மிகவும் விழிப்பாக இருந்திருக்க வேண்டும் இனியும் இருக்கவேண்டும். இல்லையேல், புலிகளின் நடவடிக்கைகள் இன்றைய இலங்கையின் பிரிவினைவாத ஊக்குவிப்புத் தலைவரான, மஹிந்த -வின் கரங்களைப் பலப்படுத்துவதாக அமைந்துவிடும்.
        அதாவது, பிரபாகரனும் விடுதலைப் புலிகள் இயக்கமும் தமீழீழத்துக்குக் கிடைத்த பெரும் வரங்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவ்வரங்கள் சாபமாக மாறிவிடக் கூடாது. மாறிவிட்டதா அல்லது மாறுவதற்கான குறியீடுகள் எதுவும் தென்படுகிறாதா என நீங்கள் கேட்கக் கூடும். ஆமாம்! மாறிவிட்டது, என்பதே அதற்கான பதிலாகும். இம்மாற்றங்கள் திருத்தப்படமுடியாதது என நிச்சயப்படுத்த வில்லை. இஇதனால்தான் இக்கட்டுரையின் எவ்விடத்திலும் சரி, எனது பிற எப்படைப் புகளிலும் சரி  பிரபாகரனை தமிழீழத் தலைவர் என்று குறிப்பிடவில்லை. அதேவேளை அவரையும், விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் தமிழீழப் போராட்டக் களத்தில் இருந்து தனிமைப் படுத்தவும் முற்படவில்லை.

           வரம் எவ்விதம் சாபமாகியது என்பதை, புலிகளின் தேசியமும் மஹிந்தவின் தேசியமும் ஒரு ஒப்பீடுஎனும் தலைப்பிலான இரண்டாவது அத்தியாயத்தில் தொடர்கிறேன். நூல் மூன்று அத்தியாயமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது அத்தியாயம் அடிக்குறிப்புகளுடன் வெளியாகும்.


எழுதப்பட்டது 2015இல். திருத்தப்பட்டது 29?01/2019- நீங்கள் படித்தது அல்லது வாசித்தது, 2015 எழுதப்பட்ட நூலின் நுளைவாயிலாகும்.







    
          

Thursday 17 January 2019

தேசியம், மதநீக்கம் செய்யப்படவேண்டும்




புதிய திசைகள்பதிவுக்கான எனது பின்னூட்டல். மிகப்பலனுள்ள ஒரு பதிவு.

          மதவாதமும்-தேசியவாதமும் தொடர்பான ஒரு விவாதத்தைத் தொடங்கிவைக்க முன்வந்தமைக்காக புதிய திசைகளுக்கும், மதவாத பயணத்தைத் தொடங்கிவைத்ததன்மூலம் மதவாதம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட உதவிய மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்கட்கும் எனது நன்றிகள்.

            மதவாதமும்–தேசியவாதமும் பற்றிய கருத்துக்களை சிங்கள மார்க்ஸி யர்கள் பலவருடங்களுக்கு முன்னரேயே முன்வைத்திருந்தனர். மார்க்ஸியர்கள் எதைக் கூறினாலும் அது தீட்டானதாகவே இருக்கும் என்ற பொதுப்புத்தியுடைய தமிழ்த் ‘தேசியர்கள்’ அதைக் கண்டுகொள்ளவில்லை. அம்பேத்கர் மதவாதமும்–தேசியவாதமும் பற்றி பல கருத்துக்களை வைத்திருந் தார் இவையும் யாராலும் கண்டுகொள்ளப்படவில்லை. துரதிர்ஸ்டவசமாக, தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் நடத்திய கம்யூனிஸ்ட் கட்சிகூட மதவாதம் பற்றிய விவாதத்தைத் தொடரவில்லை. இதனால், ஆலய நுளைவுப் போராட்டம் சைவச் சடங்குகளின் சுத்துகரிப்புத் தன்மையையும் பெற்றிருந்தது. இரு வருடங்களுக்கு முன்னர் எதுவரை எனும் இணையச் சஞ்சிகையில் மதமும்-தேசியமும் எனும் தொடர் கட்டுரை வெளிவந்திருந்தது. அதுவும் யாராலும் கண்டுகொள்ளப்படவில்லை. சச்சிதானந்தன் மதவாதத்திசையில் பயணிக்கத் தொடங்கியபின்னர்தான் தமிழீழ தேசியத்தில் மதவாதத்தின் பங்களிப்புபற்றிய விழிப்புணர்வு ஆரம்பமாகியுள்ளது.
          காலச்சுணக்கத்திற்கான காரணம் என்னவாக இருக்கும்? இவ்விவாத த்தில் இதையும் சேர்த்துக் கொள்ளலாம்.
         முதலாவது காரணி:-1950களில் இருந்து தமிழ்த் தேசியவாதப் பொதுப் புத்தி சைவ-வெள்ளாள சித்தாந்த வகைப்பட்டதாகவே இருந்துவருகின்றது. சைவம் பிராமணிய மதக் குடும்பத்தில் ஒன்றேதவிர  சைவமும் இந்துவும் ஒன்றல்ல. இரண்டுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உண்டு. சைவ-சித்தாந் தமே மேலானது என்பதே சைவ-சித்தாந்திகளின் கருத்தாகும். ஒப்புநோக்கில் அதில் உண்மையில்லாமலில்லை. இதனால் இந்துத்துவத்துடனான தொடர்பை தமிழ் ‘தேசிய’ பொதுப்புத்தி தவிர்த்தே வந்தது.
                2வது காரணி:- தமிழீழத்தை வெள்ளாள ஆதிக்கத்தின் கீழ் வைத்திருப் பதைத் தொடரவேண்டுமானால், சைவ-சித்தாந்தத்தை தீட்டுப்படவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகின்றது. இதனால் தேசியவாதத் திற்கும் மதவாதத்திற்கும் இடையேயான தொடர்புகள் பற்றிய தர்க்கத்தை வெளிக் கொணர்வதை முடிந்தவரை தடுத்தே வருகிறார்கள். சிங்கள மார்க்ஸியர்களில் சிலரும், இனசமத்துவத்தை விரும்பும் சிலரும் ஸ்ரீ லங்கா அரசை சிங்கள-பௌத்த பேரினவத அரசு என்று வியாக்கியானம் கூற ‘தமிழ் தேசியவாதிகளோ’ அவ் அரசை சிங்கள பேரினவாத அரசு என்றே வியாக்கியானம் செய்தனர். அதன் மத அத்திவாரம் மிகத் தெழிவாகத் தெரிந்தும் அதை எடுத்துக்காட்டுவதைத் தவிர்த்தே வந்தனர். தேசியவாதத்திற்கும் மதத்திற்கும் இடையேயான தொடர்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுவிடக் கூடாதென்பதில் அவர்கள் மிகவும் ஏச்சரிக்கையாக இருந்துவருகிறார்கள்.
 
            மூன்றாவது காரணி
    பௌத்த இந்தியாவின் வீழ்ச்சிக்குப் பின் பௌத்தம் பிராமணிய மதத்தால் உள்வாங்கப் பட்டுவிட்டது. புத்தர் விஷ்ணுவின் அவதாரமாக்கப்பட்டார். அதன்படி புத்தர் இராமனின் தம்பியாகிறார். பௌத்தம்  பிராமணிய மதத்தின் தாய்க் கிளைகளில் ஒன்றாகிறது. ஆனால், சைவம் பார்ப் பிராமணிய மதத்தின் கிழையல்ல, அது பிராமணிய குடும்பமதங்களில் ஒன்றா கும். ஆகவே பௌத்த மதவாதத்துடன் மோதுவதென்பது இந்துத்துவத்துடனான மறைமுக மோதலிலேயே முடிவடையும். அது மட்டுமல்ல சித்தாந்தத்தத் துறையில் பௌத்தம் முற்போக்கானது. ஆகவே தோற்க்கப்போவது சைவமாகவே இருக்கும். பௌத்தம் பிராமணிய நால்வர்ணக் கோட்பாடுகளுக்கு எதிரான போராட்டத்தின் ஊடாக வளர்ந்த மதம, இஸ்லாம் Tribalisim ட்றைபலிஸத்திற்கு எதிரான போராட்டத்தின் ஊடாக வளர்ந்த மதம் ஆகவே இவ்விரு மதங்களினது சித்தாந்தங்கள் முற்போக்கானவை. இந்து, சைவ மதங்களோ வ்ர்ணாச்சிரமத்தை பாதுகாப்பதற்காக பிறந்த மதம், ஆகவெ இவற்றின் சித்தாந்தங்கள் பிற்போக் கானவை.
         இன்னும் பல காரணங்கள் உண்டு. தொடர்வோம். இவ்விடத்திலல்ல, வெவ்வேறு இடங்களில்.
                               இக்கட்டுரை மதவாதங்களுக்கு எதிரான போராட்டத்துக்கு அறைகூவல் விடுத்துள்ளது. சோஷலிசப் புரட்சியன் போது முனவைக்க வேண்டிய வேலைத் திட்டதை இன்றைய நிலையில் முன்வைப்பது காலப்பொருத்தமற்றது. இன்றைய அறைகூவல் தேசியம், மதநீக்கம் செய்யப்படவேண்டும் என்பதேயாகும். அதாவது மதவியத் தேசியவாதமே இன்றைய எதிரியாகும்; மதமல்ல. புதிய திசைகள் தனது இவ்வேலைத்திட்டத்தை மேலும் நெறிப்படுத்தி முன்னெடுத்துசெல்ல வாழ்த்துக் கள்.

குருதியினவாத, பணநாயக, தொழிற்சங்கவாத சிமிழ்கள்



மிக மலினப்படுத்தப்பட்டதோர் ஆய்வு.
   
                1960களின் முற்பகுதிவரை இந்தியாவில் பாரளுமன்ற ஜனநாயகம்(PD) என்றொன்று இருந்தது. முதலாளித்துவ ஜனநாயக சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு இது(PD)  நிறையவே உதவியுள்ளது. ஆனால் 60களில் இந்திய முதலாளித்துவமானது, நிதிமூலதனத்தின் ஆதிக்கத்தின் கீழ் செல்லத் தொடங்கியது. உலகள விலான சமதர்ம கட்டுமானத்தின் வீழ்ச்சி இவ் நகர்வை வேகப்படுத்தியது. இந்திய முதலாளித்துவம் உலக ளாவிய நிதிமூல தனத்தின் எடுப்பார் கைப்பிள்ளையானது. 1990வரையான கட்டம் இந்திய தேசிய முதலாளித்துவம்!?” காப்ரேட் முதலாளித்துவமாக மாறுவதற்கான மாறுநிலைக் கட்டமாகும். மன்மோகன் சிங்கின் புதிய பொருளாதரக் கொள்கையானது முழுமைபெற்ற காப்ரேட் முதலாளித்துவத்தை தோற்றுவித்தது. காங்கிரஸ் கட்சியும், பிஜேபியும் இம் முதலாளித்துவத்தை பேணிப்பாதுகாத்து வளர்த்துவருகிறார்கள்

         பொருளாதார அரங்கிலான இம்மாற்றம் அரசியல் அரங்கையும் பண்பாட்டரங் கையும் முற்றாக மாற்றிவிட்டது. அம் மாற்றம் எது?

         முதலாவது: பாரளுமன்ற ஜனநாயகம் இருந்த இடத்தில் காப்ரேட் பணநாயகம் ஆட்சிக்கு வந்துள்ளது. பாரளுமன்றம் திருடர்கள் குகையாகவும், காப்ரேட்களால் இயக்கப்படும் அரசியல் கட்சிகளின் போலி வாய்த்தர்க்கக் களமாகவும் மாறியுள்ளது. அரசியல் கட்சிகளுக்கும் மக்களுக்கும் இடையே நிலவுகின்ற உறவானது வாக்குப் பொறுக் கித்தனமானதாகவும், மக்கள் சுவைகவர்(Populist) அரசியலாகவும் தரந்தாழ்ந்துவிட்டது. கட்சிகள் வள்ளல்களாவும் மக்கள் பிச்சைக்காரர்களாவும் ஆக்கப்பட்டுவிட்டார்கள். கோட்பாடு, கொள்கை, அரசியல் வேலைத்திட்டங்கள், விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் ஆகிய இத்தியாதிகளெல்லம் வழக்கொழிந்து போய்விட்டன. கட்சிகள் தம்மைத்தாமே போற்றிக்கொள்வதுவும், ஒன்றையொன்று தூற்றிக் கொள்வதுவும் மாத்திரமே வழமையாகிவிட்டன.

       இரண்டாவது: ஆரம்பத்தில் பிரித்தானிய காலனியலாதிக்கத்தை எதிர்த்தும் அதன் பின்னர் ஏகாதிபத்தியங்களின் நவ-காலனியல் ஆக்கிரமிப்புக்களை எதிர்த்தும், பிராமணிய-பனியார்ஸ் ஆதிக்கத்தை எதிர்த்தும்(அரசியல், பொருளாதார, சமூக அரங்கு களில்) நடந்த போராட்டங்கள் அனைத்தும் காணாமல் போய்விட்டன. அவற்றின் இடத்தில் நாடு முழுமையும் பல்தர குருதியினவாதங்கள்(blood related racism)ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இவற்றின் இந்திய வடிவங்களாவன: மதக் குருதியினவாதம், ஆண் அகங்காரவாதம், மரபுவழி(மனுநீதி)க் குருதியினனாதம், சாதியவாதம்,   நிறக் குருதியின அஹங்காரவாதம், மொழிவளிக் குருதியினவாதம், குருதியின வாதத்தை அடிப்படையாகக் கொண்ட நாட்டுப்பற்றுவாதம் (தேசபக்திவாதம்), சாதியஅகங்கார வாதம், ஆகியனவே அவையாகும். நேரு, சுபாஸ் சந்திரபோஷ், பகவத் சிங், வாஞ்சிநாதன், வ.உ.சி, சுப்ரமணி சிவா, பாரதி, அரவிந்தர், விவின் சந்திரபோஷ், காம்ராஜர் ஆகிய ஏராளமானோரால் அடையாளப் படுத்தப்பட்ட சுதந்திரத் தேசிய இயக்கம் தொலைந்து போய்விட்டது; அதுபோல், அயோத்திதாஸர், ஐயங்காளி, அம்பேத்கர் ஆகிய பெரும் படையினரால் அடையாளப் படுத்தப்படும் பிராமணிய எதிர்ப்பு இந்தியத் தேசியமும் தொலைந்து போய்விட்டது; அதே போல் “தேசிய முதலாளித்துவ” வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருந்த நிலபிரபுத்துவ விழுமியங்களை வீழ்த்துவதற்காக நாரணய குருசாமி, ஈ.வே.ரா பெரியார், இரவீந்திரநாத் தாகூர், ஜோதிலால் பூலே போன்ற பெரும் படையணியால் நடத்தப் பட்டுவந்த பகுத்தறிவுப் போராட்டமும் தொலைந்து போய்விட்டன. இவ் அனைத்து போராட்ட அரங்குகளிலும் போராடிவந்த இடதுசாரிக ளும்கூட தொழிற்சங்வாதத்தால் தொலைந்து போய்விட்டனர்.

       இவற்றை சுருக்கமாகச் சொல்லப்போனால், இந்திய சமூகசிந்தனையும், இந்திய அரசியலும், இந்திய பண்பாட்டு விழுமியங்களும், குருதியினத் தேசியவாதம், பணநாயகம், தொழிற் சங்கவாதம் ஆகிய சிமிழ்களுக்குள் அடைக்கப்பட்டுவிட்டன. மக்கள் எப்போது இச்சிமிழ்களுக்குள் இருந்து வெளிவந்து உணர்வு பூர்வமாக போராட முன்வருகிறார்களோ அதுதான் இந்தியப் புரட்சியின் பிரசவக் குரலாக இருக்கும்.

      இது கீழ்வரும் யு.ஆர்.எல் உள்ள கட்டுரை பற்றிய மதிப்பீடாகும்.

http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/16-2017/32662-2017-03-14-04-43-9?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+keetru%2FmAfm+%28Keetru+RSS+Feed%29


Saturday 5 January 2019

2018 இன் மகிழ்வுகளும் துயரங்களும் - இந்தியளவில்


2018 இன் மகிழ்வுகளும் துயரங்களும் இந்தியளவில்
I- அக உறவுகளில்
I-) வளர்திசை        நிகழ்வு
2018 இல் நடைபெற்ற தேர்தல்களின் முடிவுகள், தீவிரவாத சதுர்வர்ண இந்தியத் தேசியம் தேர்தல் அரங்கினில் இந்தியா எங்கணும் பரவலாக வீழ்ச்சியடைந்து வருவதை எடுத்துக் காட்டுகிறது. வரவேற்கத் தக்கது, மகிழ்ச்சிக் குரியது.
I-) வளர்தடை நிகழ்வு
ஆனால், அடுத்த பக்கத்தில் இவ்வீழ்ச்சி தேர்தல் அரங்கிற்குள் மட்டுப்படுத்தபட்டதாகவே காணப்படுகின்றது. தேர்தல் அரங்கிற்கு அப்பாலுள்ள அரசியல் அரங்கினில், சதுர்வர்ணத்துவா / சனாதனத்துவா வீரியம் பெற்று வருகிறது. சபரிமலை நிகழ்வுகள், பாபர் மசூதி அழிப்புக்கான எழுச்சிகள், முத்தலாக் சட்ட மசோதா விவகாரம் ஆகியவை அகிலேஷ் யாதவின்  அடா வாடித்தனங்கள், மாட்டு இறைச்சி தடை விவகாரங்கள், தீண்டாமை சட்ட மசோதா விவகாரம், ஆகியவை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எடுத்துக் காட்டுதளாகும். பாராளுமன்ற ஜனநாயகத்தால் எம்மை ஒன்றும் செய்துவிட முடியாது என்று சதுர்வர்ணத்துவாவால் / சனாதனத்துவாவால் சவால் விடப் பட்ட ஆண்டாக 2018ஐக் கருதலாம். இச் சவாலை பாராளுமன்ற ஜனநாயக் கட்சிகளால் சமாளித்த முடியாது என்பதுவும் நிரூபிக்கப் பட்டுவிட்டது. சபரிமலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி நடந்துகொண்ட முறை இதற்கோர் எடுத்துக் காட்டாகும். 2019-ஆம் வருடம், சதுர் வர்ணத்துவாவிற்கு எதிரான வீதிச் சண்டைகள் நடைபெறும் ஆண்டாக அமையப்போவது நிச்சயம். சபரிமலை அதற்கோர் எடுத்துக்காட்டு. ஒரு வளர்திசை நிகழ்வுப்போக்கு தன்னுடன் கூடவே ஒரு வளர்தடை நிகழ்வுப் போக்கையும் அழைத்து வந்துள்ளது. சவாலை ஏற்றக்கொள்வோம்.
I-) வளர்தடை நிகழ்வு 
சதுர் வர்ண தேசியவாதத்தின் (ச.தே) தீவிரவாத அணியான பி.ஜே.பி பாராளுமன்ற ஜனநாயக அரங்கினில் பலவீனப்பட்டாலும், அதற்க்கு மாற்றாக சதுர் வர்ண தேசியவாதத்தின் மிதவாத அணியான காங்கிரஸ்தான் வருமோ என்ற நிலை தோன்றியுள்ளது. இவ்விதம் நடந்தால் பாராளுமன்ற ஜனநாயக அரசியல் மேடை துன்பியல் மேடையாக மாறிவிடுவது நிச்சயம்.
I-) வளர்திசை நிகழ்வு      
இருந்தும், இத் துன்பியலை எதிர் கொள்வதற்கான மிகப் பெரும் சவாலும் இவ்வாண்டில் தோன்றியுள்ளது. மாநிலக் கட்சிகள் ஒன்றி ணைந்து இந்தியத் தேசிய அரசியல் அரங்கமாக மாறுவோம் என்பதே அச் சவாலாகும். இது சதுர் வர்ண தேசியவாதத்தின் இரு அணிகளுக்கும் எதிரான மிகப் பெரும் கவாலாகும். சதுர் வர்ண தேசியவாதத்திற்குப் பதிலாக இந்தியத் தேசியத்தை உருவாக்குவதற்கான முயற்சியாகும். இந்திய அரசியல் சாசனத் தின்படி இந்தியாவை வழிநடத்திச் செல்வதற்கான முயற்சியாகும். இந்தியா பல தேசிய இனங்களின் கூட்டமைப்பு என்பதை நோக்கிய பயணம் ஆரம்பிக்கப் போகிறது என மகிழலாம்.
               ஆனால் இம் மகிழ்வுக்கு எதிரான ஓர் துயர சம்பவம் தமிழ்நாட்டில் நடந்துள்ளது.  வளர்ந்து வந்த மதசார்பற்ற தமிழ்த் தேசியத்தை, சதுர்வர்ண / மதவாத இந்தியத் தேசியத்துடன் இணைத்துவிட்ட அண்ணாவின் பாதையில் தம்பி ஸ்ராலினும் பயணிக்கத் தொடங்கியுள்ளது தான் அத் துயர் சம்பவ மாகும். தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இருகட்சிகளும் இவர்களுடன் இணைந்துள்ள கூட்டணிகளும் சதுர் வர்ண / மதவாத இந்தியத் தேசியத்துடன் தம்மை இணைத்துக் கொள்வதில் போட்டா போட்டி போடுவதே தமிழ்நாட்டின் அரசியலாக மாறியுள்ளது.
            இவர்களுக்கிடையேயான மோதலில் பக்கம் சாராமல் மூன்றாவது அரசியல் அணி ஒன்று வளர்வது நிச்சயம் என்பதை 2018ஆம் ஆண்டு நிச்சயம் செய்துவிட்டது. அதுதான் பா.ம.க-வாகும். ஆனால், சதுர்வர்ண/மதவாத தேசியவாதத்திற்கும் பா.ம.கவுக்கும் உள்ள தொடர்பின் தன்மையை புரிந்து கொள்ளக்கூடிய நிகழ்வுகள் எதுவும் 2018ல் நடைபெறவில்லை. சபரிமலை விவகாரத்தில் இவர்களின் நிலைப்பாடும் அடக்கி வாசிப்பதாகவே இருந்து ள்ளது. மதவாத / சதுர்வர்ணத் தேசிய வாதத்திற்கு எதிரானதோர் அரசியல் அணியாக எழும் என எதிர்பார்க்க முடியாதுள்ளது.
               அவ்விதமானால் தமிழ்நாட்டின் பாராளுமன்ற ஜனநாயக அரசியல் மேடையில் மதசார்பின்மைத் தேசியத்தின் பிரதிநிதிகள் யாருமே இல்லை என்ற நிலை உருவாகுமா? அல்லது புதிய அரசியல் அணி தோன்றுமா? புதிய அணிகள் தோன்றுவதற்கான முனைகள் வெளிவர ஆரம்பித்து விட்டன, ஆனால் அவை தனித்துவமாக வளரக்கூடிய ஆற்றல் உள்ளவை என்பதை நிச்சயப் படுத்துவதற்கான அடையாள்ங்கள் எதுவும் 2018-இல் தெரியவில்லை. ஆகவே 2019, மதசார்பற்ற தமிழ் தேசியத்தின் கைக்குழந்தை நிலையாக இருக்கலாம். குழந்தையின் வளர்ச்சி எவ்விதம் இருக்கும் என்பதை 2020 இல் நிச்சயமாக கூற முடியும்.
               இதன்படி, ப.ஜ., காங்கிரஸ் ஆகிய இரு  சதுர்வர்ண / மதவாத இந்தியத் தேசியக் கட்சிகளுக்குபம் பதிலாக மாநிலக்கட்சிகளின் கூட்டமைப்புத்தான் இந்திய தேசியக் கட்சியாக மாறும் நிகழ்வில் தமிழ்நாடு எதிர்பாத்திரமே வகிக்கப் போகிறதெனக் கூறலாம். இதற்காக, 2019 மாநில கட்சிகளின் கூட்ட மைப்பு முயற்சி தோல்வியுறும் ஆண்டாக அமையுமென அறுதியிட்டுக் கூறமுடியாது.
               பாராளுமன்றமும் மக்களும் எதிர் எதிர் நிலையில் எனும் பகுதி (I-2) இதை விளக்குகிறது.
I-) வளர்திசை நிகழ்வு பாராளுமன்றமும் மக்களும் எதிர் எதிர் நிலையில்
            I-2-அ) இந்தியா எங்கணும் ஏறத்தாழ அனைத்து பாராளுமன்ற ஜனநாயகக் கட்சிகளும் அறங்கெட்ட கட்சிகளாக மாறிவிட்டன. தமிழ்நாட்டிலேயே பெரியார், காமராஜர், கக்கன், அண்ணா போன்ற தலைவர்கள் நிரந்தர இறந்த காலமாக மாறிவிட்டார்கள். கட்சிக்காகாவும், தலைவர்களுக்காகவும், அவர்களுக்கு துணைபுரியும் அதிகாரிக்களுக்காவும் தவறான வழியில் பணம் திரட்ட (ஊழல், லஞ்சம், கொள்ளை) வடிமையாகிவிட்டன; மக்களுக்கான அனைத்துத் திட்டங்களிலும் ஊழல், பொறுப்பின்மை சர்வ சாதாரணமாகி விட்டன; நீதி, நியாயம், நடுநிலை உண்மை பேசல், பொறுப்புக் கூறல் என்பன இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டன; ஆட்சிபீடங்கள் கொள்ளையர்களும், காமுகர் களும், ஏமாற்றுப் பேர்வழிகளும் ஒளிந்துகொள்ளும் இடங்களாக மாறிவிட்டன.

          (ஆட்சித் தூண்களில் ஒன்றான) உயர் அதிகாரத்துவ பீடத்தின் உச்சியில் இருந்து - (IPS, IAS, IFS, MS, இத்தியாதிகள்) உள்ளங்கால் வரை (கிளார்க், காவலாளி) அனைவரும் பணம் பிடுங்கிப் பிசாசுரகளாக மாறிவிட்டன. கல்வி நிர்வாகமும் இதேதான். அரசியல் வாதிகள், அதிகாரிகள். பாதுகாப்பிப் பிரிவினர், ஊடகங்கள், அனைவரும் நெருங்கிய கூட்டாளி களாக, தமக்குள் இசைபட வாழ்பவர்களாகவும்; தமக்குக் கிடைக்கும் முறைகேடான வரவுகளை தமக்குள் முறையாக பகிர்ந்து வாழ்பவர்களாகவும் உள்ளனர். ஒட்டு மொத்த நிலைமையும் இதுதான் எனக் கூறமுடியாது, ஆனால் இதுதான் பொதுவானதும் சக்தி மிக்கதவுமான ஓட்டமாக உள்ளது. அனைத்துப் பிரிவிலும் எதிரோட்டங்களும் உள்ளன. ஆனால், அவ் எதிரோட்டங்கள் அரசியல் அதிகாரிகளால் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கப்படுவது ஒரு பொதுவான மரபாக மாறிவிட்டது. இருந்தும் எதிரோட்டங்களும் தொடர்கின்றன.
            இவ் எதிரோட்டங்கள், அரசின் சிவில் நிர்வாகக் கட்டுமானத்தில் வெடிப்பை அல்லது விரிசலை உருவாக்கத் தொடங்கி விட்டன. 2018, இப்போக்கை நிரூபிக்கும் ஆண்டாக அமைந்துள்ளது. இவ் வெடிப்பு ஒட்டப்பட முடியாதது என்பதையும் நிரூபித்து விட்டது. அரசு என்ற ஒட்டுமொத்த கட்டுமானத்துக்கு எதிரான மக்களின் போராட்டத்துக்கு இவ்வெடிப்பு நிச்சயம் துணைபுரியும். இவ் வெடிப்புக்கு காரணமாய் இருக்கும் நல்லறமும், நேர்மையும், துணிச்சலும் மிக்க அதிகாரிகளையும் ஊழியர்களையும் பாராட்டுவோம், அவர்களின் வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள் சொல்வோம். 
            இது விடயத்தில், அரச துறைகளில் புத்தி ஜீவிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் மடிப்புக் கலையா ஆடைத் தொழிலாளர்களின் நிலையோ வரவேற்கக் கூடியதாக இல்லை. தமது துறைகளில் நடைபெறும் அறமீறல்களையிட்டு இவர்கள் கண்டுகொள்வதேயில்லை. எந்தப் புத்திஜீவித்தொழிற்சங்கங்களும் இதுவரை இவற்றிற்கு எதிராகக் குரல் கொடுக்கவே யில்லை. தொழிலாளிவர்க்கத்துக்குரிய வர்க்க உணர்வும், சமூக உணர்வும், அரசியல் உணர்வும் அற்ற சம்பள உயர்வுக்காக அங்கலாய்க்குக் கூட்டமாக காணப்படுகிறார்கள். இக் கூட்டத்தின் இவ்வித சிந்தனைதான் அல்லது சித்தாந்தந்தான் தொழிற்சங்கவாதம்எனப்படுகிறது. இதே நிலைதான் 2019-ற்கும் தொடரும், 2018 இதைத்தான் கூறுகிறது.
               சமூகப் புரட்சியில் நாட்டமுள்ளோர், தொழிற்சங்க வாதத்தின் ஆபத்தைப் புரிந்து கொள்ளட்டும். அதற்கெதிரான வெலைத் திட்டத்தையும் தமது 2019 திட்டத்தில் சேர்த்துக் கொள்ளட்டும். தொழிற்சங்க வாதத்தின் பாசமிகு வளர்ப்புத் தாயாகிய இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் (C.P.I.(M), C.P.I) தம்மைத் திருத்திக் கொள்ளட்டும்.
               தமது, அறநெறி மீறல் நடவடிக்கைகளினால் சிவில் நிர்வாகக் கட்டுமானங்களின் மீதும் இராணுவக் கட்டுமானம் தவிர்ந்த அரச கட்டுமானங் களின் மீதுமான (குறிப்பாக அரசியல் கட்டுமான) வெறுப்பு அதிகரித்து வருகின்றது, இவற்றின் மீதான நம்பிக்கைகள் குறைந்து வருகின்றன இவ் வெறுப்பும், நம்பிக்கை குறைவும் மக்களை அந்நியப்படுத்தி வருவது பொதுவானது. இவ் அந்நியமாதல் துரிதமாக வளர்ந்தும் வருகிறது. 2018 இதற்கான சிறந்த ஆதாரமாக உள்ளது.
              ஆனால் இவ் அந்நியமாதல் மக்களிடையே எவ்விதமான பதில் செயற் பாடுகளை ஏற்படுத்தும் என்பதைத் தெளிவாகக் கூறுவதற்கான நிகழ்வுகள் இன்னமும் போதியளவு நடைபெறவில்லை. இருந்தும் சில பதிற்செயற் பாடுகளை பட்டியலிடலாம்.
(1)   வாக்குகளை விற்றல் (வளர் தடை எதிர்வினை) :
          ஓட்டுக்கு  யார் அதிகம் பண தருகிறானோ அவனுக்கே ஓட்டு என்பது இவ் அந்நியமாதலின் ஒருபதிற் செயல்பாடாகும். இது மக்களின் சமூக வளர்ச்சிக்கு ஒட்டுமொத்தமாகவே தீங்கு விளைவிக்கும் ஒன்றாகும்
 (2) மக்களின் சுய எழுச்சிகள்: (வளர்திசை எதிர்வினை)
            அரசியல் கட்சிகளை எதிர்பார்க்காமலே, ஒரு சில இடங்களில் அரசியல் கட்சிகளை முற்றாக நிராகரித்து நடைபெறும் மக்கள் எழுச்சிகள். மக்கள் தமது பிரச்சனைகளை இனங்கண்டு, எந்த அரசியல் கட்சிகளினது ஆசீர்வாதத்தையோ, துணையையோ எதிர்பார்க்காமல், தமது சக்தியை படிப்படியாக எளர்த்துக் கொள்ளக்கூடிய முறையில் அணிதிரண்டு வருவது.
(3) சுய அரசியல் அமைப்புகள்: (வளர்திசை எதிர்வினை)
      இக்கட்சிகளுக்கு வெளியே தத்தமது சிந்தனைக்கு ஒப்பு அரசியல் பார்வை சிந்தனை உணர்வு உள்ளவர்கள், பாராளுமன்ற அரசியல் கட்சிகளுக்கு அப்பாலுள்ள, இக்கட்சிகளுக்கு வெளியே தத்தமது சிந்தனைக்கு ஒப்பு தனித்தும், இணையக் குழுக்களாகவும், சமூக அரசியல் குழுக்களாகவும் செயற்பட ஆரம்பித் துள்ளமை.
(4) அதிகரிக்கும் கடவுள் நம்பிக்கை: (வளர்தடை எதிர்வினை)
             சமூக சக்திகள் எதிலுமே நம்பிக்கையற்ற நிலையில், தம்மீதும் நம்பிக்கையற்ற நிலையில் கடவுளை நோக்கிச் செல்லும் ஒரு கூட்டம். 2018 இக் கூட்டத்தின் அதிகரிப்பை எடுத்துக் காட்டியுள்ளது. இது ஒன்றும் ஆபத்தானதல்ல. இவர்கள் சமூக உள்ளடக்கம் உள்ள நல்லதுக்கும் வரமாட்டார்கள் கெட்டதுக்கும் வரமாட்டார்கள்.
(5) சமூக உதிரிகளின் வளர்சசி (வளர்தடை எதிர்வினை)
        எந்த சமூகப் போக்கு இவர்களை சமூகத்தில் இருந்து அந்நியமாக்கியதோ, எந்த சமூகப் போக்கால் இவர்கள் அவதிப்பட்டார்களோ, எந்த சமூகப் போக்கின் மீது இவர்கள் கோபங்கொண்டார்களோ, காலப்போக்கில் அதே சமூகப் போக்கை தாமதாக்கிக் கொள்ளல். அறங்கெட்ட சிவில் அதிகாரங்களினதும், அரசியல் அதிகாரங்களினதும் எடுபிடிகளாகவும், பாதந் தாங்கிகளாகவும் மாறுதல். இந்திய சமூகத்தில் இது ஒரு பெரும் அணியாக உள்ளது. இந்த ணி வளர்ச்சியடைந்தும் வருகிறது. இது மிகவும் ஆபத்தான அணியாகும் சமூகத்தின் சாதாரண மட்டத்தில் காணப்படும் கொலை, கற்பழிப்பு, காம வெறியாட்டம், தெருச் சண்டைகள், கட்சிச் சண்டைகள். கருணைக்கொலைகள், கொள்ளைகள், வழிப்பறிகள் இத்தியாதி களுக்கான காரணம் இவ்வணிதான்.
            எதிர்வினை 2-இனதும், எதிர்வினை 3-னதும் வளர்ச்சிதான் எதிர்வினை 4-இன், உதிரிமக்கள் திரளின் வளர்ச்சியைக் கட்டுக்குள் கொண்டுவரும்.
            2018-ம் ஆண்டு உதிரி மக்கள் திரளின் ஆண்டாக இருப்பதை வேதனை யுடன் ஒத்துக் கொள்ளவேண்டும். எதிர் வினை 4-ற்கும், எதிர்வினை 2 மற்றும் எதிர்வினை 3-க்கும் இடையேயான முரண்பாட்டின் ஊடாகத்தான் எதிர்வினை 4, சமூக பலமிழந்த நிலைக்கு உள்ளாகும் என்பதை எதிர்பார்ப்போம்.

தொடரும்.............


In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...