Monday, 19 August 2019

காந்தியின் கொலை இரு கோட்பாடுகளின் மோதல்...!


இந்துக்களுக்கென்று ஒருநாடு வேண்டும்
“இந்துக்களுக்கென்று ஒருநாடு வேண்டும்; இந்துக்களாகிய நாம் நமக்கென்று ஒரு நாட்டை கொண்டிருக்க வேண்டும்; அந்த இந்துக்களுக்கான நாட்டை உருவாக்க ஒரே வழி வன்முறையும், பழிக்குப் பழிவாங்குவதலும், ரத்த அபிஷேகமும் ” என்று சொன்னார் சாவர்க்கர். “ இது அநீதியை ஒழிக்க இயற்கை வழங்கியுள்ள கருவிகள் ” என்று மேலும் சொன்னார். சாவர்க்கர் விரும்பிய இந்து ராஷ்டிராவை உருவாக்க ‘இந்துத்துவா ’ என்ற நூலை எழுதினார்.
இந்த நூலைப்படித்து பெரிதும் உத்வேகம் அடைந்த டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவர் உருவாக்கிய அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ் என்று அழைக்கப்படுகிற ‘ ராஷ்ட்ரீய சுயம்சேவக் சங்’ என்கிற இந்து மதவெறி அமைப்பு. இந்த அமைப்பிற்கு சாவர்க்கர் பெரிதும் ஆசிவழங்கினார். இந்த அமைப்பின் மூலம் சாவர்க்கரும், கோட்சேயும் மிகவும் நெருங்கிப் பழகினார்கள்; நெருக்கமான தொடர்பிலும் இருந்தார்கள்.
இவர்கள் தான் 1947ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ஆம் நாள் அன்று, தேசமே உற்சாகமாக சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, புனாவில் 500 பேர் ஒன்று திரண்டு நாஜிகளின் ‘ ஸ்வஸ்திக் ’ சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றிக் கொண்டிருந்தார்கள். ‘ஸ்வஸ்திக் ’ சின்னம் என்பது ஆரியர்களின் சின்னம். அதற்கு வணக்கம் செலுத்தவே அங்கு கூடியிருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் கோட்சே பேசினான், “ இந்திய பிரிவினையானது கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு பயங்கரமான துன்பங்களைத் தந்துள்ள பேரழிவு; இதைச் செய்தது காங்கிரஸ் கட்சி; அதிலும் குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் காந்தி ”. இப்படி பேசிமுடித்ததும் கோட்சே மற்றவர்களுடன் சேர்ந்து கொடிக்கு எதிரே நின்று, நெஞ்சில் ஒரு கையை வைத்து வணக்கம் செலுத்தினான். இந்த பழக்கத்தைத்தான் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் இப்போதும் பின்பற்றுகிறார்கள்.
கோட்சேயின் கொதிப்பு
கோட்சே ஆசிரியராக இருந்து நடத்தி வந்த ‘ இந்து ராஷ்டிரா ’ பத்திரிகையின் பங்குதாரர்கள் கூட்டத்தில் கோட்சே பேசினான், “ தனது பிணத்தின் மீதுதான் இந்தியாவை பிளக்க முடியுமென்று காந்தி சொன்னார்; இந்தியா பிளக்கப்பட்டுவிட்டது; ஆனால், காந்தி இன்றும் உயிரோடிருக்கிறார்!” காந்தியை தீர்த்துக் கட்ட வேண்டுமென்று கோட்சே தன் ஆழ்மனதில் தீர்மானித்து விட்டான். இதையே பின்னாளில் நிகழ்த்திக் காட்டினான்.
ஒன்றுபட்ட இந்தியதேசம் பாகிஸ்தான் என்றும் இந்தியா என்றும் பிரிந்து போனதற்கு காந்தியே காரணம் என இந்து மத வெறியர்கள் சொல்கிறார்கள். இது உண்மையே அல்ல. பிரிவினை சிந்தனையை கோட்பாட்டு ரீதியில் விதைத்தவர்கள் இந்துமத வெறியர்களே. “ இந்துக்கள் என்பவர்கள் தனிதேசம்; இதில் இஸ்லாமியர்களுக்கு இடமில்லை ” என்று முதலில் சொன்னவர் சாவர்க்கரே. அவரின் ‘ இந்துத்துவா ’ என்ற நூல் இதற்கு சாட்சியாக உள்ளது.
இந்து மதவெறியர்கள் ‘ இந்துஸ்தான் ’ என்று சொல்ல, இஸ்லாமிய மதவெறியர்கள் பாகிஸ்தான் என்று சொன்னார்கள். இந்த பிரிவினை சிந்தனையை ஆங்கிலேய ஏகாதிபத்தியம் மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டது. வலுவான இந்தியா, என்றும் தங்களுக்கு இடையூறு செய்யும் என்று கணக்குப்போட்டு, கடைசி வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் மிகத் திறமையாக இந்தியாவை பிரித்தார். 1947 மார்ச் 8 அன்று நடைபெற்ற காங்கிரஸ் காரியக்கமிட்டிக் கூட்டத்தில் சர்தார் படேல் ஒரு தீர்மானத்தை முன்வைத்தார்.
பஞ்சாபை ‘ முஸ்லிம் பஞ்சாப் ’ என்றும், ‘ இந்து பஞ்சாப் ’ என்றும் பிரித்து தனிநாடாக அங்கீகரித்துவிடலாம் என்றது அந்த தீர்மானம். இந்த தீர்மானம் ஏகமனதாக ஏற்கப்பட்டது. அந்த சமயத்தில் பீகாரில் இருந்த காந்தி பத்திரிகைகள் மூலம் இச்செய்தியை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இது பட்டேலின் வேலையாகத்தான் இருக்கும் என எண்ணி, அவருக்கு கோபமாக ஒரு கடிதம் எழுதினார் காந்தி.
துணையாய் இருந்த தாகூரின் பாட்டு
தேசப்பிரிவினையை மகாத்மாகாந்தி கடைசிவரை ஏற்கவே இல்லை. அதுமட்டுமல்ல, தேசப்பிரிவினையை கடைசிவரை ஏற்காத காங்கிரஸ் தலைவர் மகாத்மா காந்தி மட்டுமே. பிரிவினையை தடுத்து நிறுத்த கடைசிவரை முயன்றார். வேதனையில் துடித்தார். பிரிவினையை முதலில் ஆதரித்த வல்லபாய் படேல் போன்றோரை விட்டுவிட்டு, காந்தியை மட்டும் இந்துமகாசபை, ஆர்.எஸ்.எஸ் கூட்டம் குறிவைத்தது ஏனென்றால், காந்திஜி இந்து- முஸ்லிம் ஒற்றுமைக்கு தொடர்ந்து பாடுபட்டார் என்பதால்.
பிரிவினையைத் தொடர்ந்து வரலாறு காணாத வன்முறை பஞ்சாபிலும், வங்காளத்திலும் வெடித்துக்கிளம்பியது.
78 வயதான அந்த மகத்தான மனிதர் மகாத்மா காந்தி, நிலைகுலைந்து போனார். அந்த தள்ளாத வயதில் உண்ணா நோன்பைத் துவக்கினார். தன் முன்னால் கூடியிருந்தவர்களைப் பார்த்து, தாகூரின் பாடல் ஒன்றை பாடச் சொன்னார் காந்தி. “ உன்னுடைய அழைப்பிற்கு எவரும் செவிசாய்க்கவில்லையெனில், தனியாகவேணும் நட! தனியாக வேணும் நட! ” நாட்டு பிரிவினையால் காந்தியின் மனம் நொந்து நூலாகிப்போயிருந்தது. தனது சகாக்களே தன்னை கைவிட்டுவிட்ட சோகம் காந்தியை பிடித்து ஆட்டியது. உண்ணாவிரதமிருந்த காந்தியைப் பார்க்க நேரு, படேல் முதலியோர் சென்றனர்.
நானறிந்த சர்தார் அல்ல…
ஒருநாள் உண்ணாவிரதத்திலேயே மிகவும் சோர்ந்து போயிருந்த காந்தி, படேலை பார்த்ததும் புருவங்களை உயர்த்தி, “ நான் அறிந்திருந்த சர்தார் நீங்கள் அல்ல ” என மெதுவாக முணுமுணுத்துக் கொண்டே தலையணையில் சரிந்து விட்டார் காந்தி. காந்திஜி உண்ணாவிரதமிருந்த பிர்லா மாளிகைக்கு வெளியே கூட்டமாக நின்று ஏதோ சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள். காந்திஜி தனது உதவியாளரிடம் “ என்ன சத்தம்? ’‘ என்று கேட்டார். முதலில் சொல்லத்தயங்கிய தனது உதவியாளர் பியாரிலால் சொன்னார், “ காந்திஜி செத்துப் போகட்டும் ” என கோஷம் போடுகிறார்கள் என்றார். எவ்வளவு ஆத்திரம் இந்து மதவெறியர்களுக்கு காந்திஜி மீது!

தேசத்தை சீர்குலைத்து சின்னாபின்னமாக்கிக் கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ்ஸின் செயல்பாடுகளில் பிரதமர் நேருவுக்கும், உள்துறை அமைச்சர் வல்லபாய் படேலுக்கும் கருத்து வேறுபாடுகள் முட்டிமோதின. இதில், ஆர்.எஸ்.எஸ்ஸின் நடவடிக்கைகளை முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத நேருபக்கமே காந்திஜி இருந்தார்.
காந்திஜியின் உண்ணாவிரதத்தில் படேலை தன்பக்கம் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கமும் இருந்தது. “ காந்திஜி செத்துப்போகட்டும் ” என்ற இந்துமதவெறியர்களின் கோஷத்தைக் கேட்டநேரு, “ மகாத்மா காந்தியின் மரணம் என்பது இந்திய ஆத்மாவின் மரணம் ”என்றார்.தேசத்தில் மதத்தின் பெயரால் கலவரமே நடக்கக் கூடாது என்பதுதான் காந்திஜியின் உண்ணாவிரதத்தின் நோக்கம். காந்திஜி தனது உயிரைப் பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படவே இல்லை.
உயிரைக் குடித்த இரண்டாவது சதி
காந்திஜி உண்ணாவிரதமிருந்த பிர்லா மாளிகை முன்பு ஒருலட்சம் பேர்கொண்ட பெருங்கூட்டம் கூடியிருந்தது. “ காந்திஜி வாழவேண்டும் ” என்ற கோஷம் விண்ணையும் மண்ணையும் பிளந்தது. இந்தக்கூட்டத்திற்கு மத்தியில் நேரு ஒலிபெருக்கியில் மிகுந்த நெகிழ்வோடு பேசினார். “ காந்திஜியைக் காப்பாற்ற எந்த தியாகத்தையும் நாம் செய்வோம். உண்மையான லட்சியத்திற்கு நம்மை அழைத்துச்செல்லக் கூடியவர் காந்திஜி மட்டுமே ” என்றார். நாட்டு மக்களின் கோரிக்கையை ஏற்று ஒருவழியாக காந்தி அரைமனதோடு தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
ஜனவரி 30 பிற்பகலில் கடைசியாக காந்திஜியைப் பார்க்க படேல் வந்தார். வெகுநேரம் படேலோடு பேசிக்கொண்டிருந்த காந்திஜி, “ பிரார்த்தனைக்கு எனக்கு நேரமாகிறது; என்னை போக விடுங்கள் என்று சொல்லிக்கொண்டு வேகமாக நடந்து சென்றார். இந்த நேரத்தில் தான் கோட்சேயின் துப்பாக்கிக் குண்டுகள் காந்திஜியின் மெல்லிய உடலைத் துளைத்தது. கொலைகாரன் கோட்சேவும் பிடிபட்டான்.
நாடுமுழுவதும் இந்து மகாசபைத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தடைசெய்யப்பட்டது. அதன் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். நிலைமை மிகவும் கொந்தளிப்பாகஇருந்தது. இந்துமகாசபை அலுவலகங்களை மக்கள் கண்மூடித்தனமாக தாக்கினார்கள்; அதன் கொடிகளை எரித்தார்கள்; பம்பாயிலிருந்த சாவர்க்கரின் மாளிகையை சுமார் 500 பேர் உடைத்து நொறுக்கி உள்ளே நுழைத்தனர். சாவர்க்கர் தனது அறையில் பதுங்கி ஒடுங்கிக் கிடந்தார். போலீஸ் வந்து அவரைக் காப்பாற்றியது. காந்திஜியின் உயிரைக் குடித்தது இந்துத்துவாவே என்பதை மக்கள் உணர்ந்தனர்.
நாதுராம் கோட்சே, அவனது தம்பி கோபால் கோட்சே, நாராயண ஆப்தே, மதன்லால் பாவா, சாவர்கரே, திகம்பர் பாட்ஜ் ஆகியோர் ஜனவரி 20 அன்றே காந்தியைக்கொல்ல முயன்றனர். பிர்லா மாளிகையில் காந்தியின் பிரார்த்தனைக் கூட்டத்தில் மதன்லால் பாவா குண்டு ஒன்றை வைப்பது எனவும், அந்த க்கலவரத்தில் புகுந்து கார்கரேயும், கோபால் கோட்சேயும் காந்தியை நோக்கி குண்டு வீசுவது அல்லது கைத்துப்பாக்கியால் சுடுவது என்றும் திட்டம் தீட்டினர். ஆனால், கார்கரேயும் கோபால் கோட்சேயும் தங்கள் சதிவேலையை செய்ய முடியாமல் போனது. மதன்லால் போலீஸ் வசம் சிக்கிக்கொண்டான்.
தான் மட்டுமல்ல; ஏழு பேர்கொண்ட கோஷ்டி இச்சதி வேலையில் ஈடுபட்டோம் என்பதையும் போலீசிடம் ஒப்புக்கொண்டான். இப்படி வாக்கு மூலம் கொடுத்த நபர்களை போலீஸ் ஏன் கைது செய்யவில்லை என்பதுதான் தெரியவில்லை. ஆனால், இச்சதிக்கூட்டம் ஜனவரி 30இல் காந்தியை கொன்று தீர்த்தது. இடைப்பட்ட 10 நாளில் தங்கள் சதியை அரங்கேற்றினர்.
சுந்தரய்யாவின் பேச்சும் படேலின் பதவி விலகல் கடிதமும்
ஆகவே, காந்திகொலைக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் சர்தார் படேல் பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கை நாடு முழுவதும் எதிரொலித்தது. இந்நிலையில், சர்தார் படேல் தனது பதவி விலகல் கடிதத்தை நேருவுக்கு அனுப்பியிருந்தார். அதோடு தனிப்பட்ட முறையில் ஒரு கடிதமும் நேருவுக்கு எழுதினார். அந்தக் கடிதத்தில் இரு செய்திகளை சுட்டிக்காட்டியிருந்தார். ஒன்று ‘ஸ்டேட்ஸ்மேன்’ பத்திரிகையில் தான். பதவி விலக வேண்டுமென்று ஒரு வாசகர் எழுதிய கடிதம், இரண்டாவதாக, ‘மெட்ராஸ் மெயில்’ பத்திரிகையில் வெளிவந்த பிரபலமான கம்யூனிஸ்ட் தலைவர் பி.சுந்தரய்யாவின் பொதுக்கூட்ட பேச்சு இந்த இரண்டும் என்னை பதவி விலகத் தூண்டியது என படேல் குறிப்பிட்டிருந்தார்.
சுந்தரய்யா அந்தப் பொதுக்கூட்டத்தில் என்ன பேசியிருந்தார் என்றால், “இந்தியாவில் பாசிச ஆட்சியைக் கொண்டுவர, காந்தியை கொலை செய்ய இந்து மகாசபை, ஆர்எஸ்எஸ், சர்தார் வல்லபாய் படேல் ஆகியோர் திட்டமிட்டிருந்தார்கள்” என பகிரங்கமாக சுந்தரய்யா அன்று பொதுக்கூட்டத்தில் பேசியிருந்தார். ஆனால், படேலின் பதவி விலகலை நேரு ஏற்றுக் கொள்ளவில்லை.
தவிர்க்க முடியாதபடி ஆர்எஸ்எஸ் விஷயத்தில் சில நடவடிக்கைகளை படேல் எடுத்தாலும், இந்து மகாசபை குறித்து மவுனமாகவே நடந்து கொண்டார். “இந்து மகா சபையை அடக்கி ஒடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையைப் பொறுத்தவரை, அது ஜனநாயக கோட்பாடுகளுக்கு இயைந்ததாக இருக்காது” என்றார் படேல். மேலும் சொன்னார், “நமது நகல் அரசியல் சாசனம் முஸ்லிம்களை ஒரு தனிப்பிரிவாக அங்கீகரிக்கிறது. எனவே, இந்துக்களை அரசால் புறக்கணிக்க முடியாது” என்றார். இப்படியான மதவாத சிந்தனை உள்ளவர்தான் அன்றைக்கு நாட்டின் உள்துறை அமைச்சராக இருந்துள்ளார். காந்தியின் கொலைகுறித்து நேரு சொன்னார்,
“பாபுவின் கொலை ஒரு தனிப்பட்ட செயல் அல்ல. ஆர்எஸ்எஸ் செயல்படுத்திய விரிவான இயக்கத்தின் ஒரு பகுதி என்று நான் மேன்மேலும் முடிவுக்கு வருகிறேன்” என்றார். உள்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து படேல் பதவி விலகியது இந்து மகாசபை, ஆர்எஸ்எஸ்காரர்கள் மீது கோபமல்ல; இவர் பதவி விலக வேண்டுமென்ற மக்கள் எழுச்சியே என்பதை, வரலாற்றை உற்று நோக்கினால் புரியும். காந்திஜி உயிரோடு இருக்கும்வரை இந்தியாவில் மதத்தின் பெயரால் மக்களைப் பிளக்கும் தங்களின் சதிவேலை வெற்றியடையாது என்பதாலேயே காந்தியை திட்டமிட்டு ஆர்எஸ்எஸ், இந்து மகாசபைக்காரர்கள் கொன்றார்கள்.
கோட்சேயின் குற்றச்சாட்டு
காந்தி படுகொலையில் ஒன்பது பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். நாதுராம் கோட்சே, நாராயண ஆப்தே, விஷ்ணு கார்கரே, மதன்லால் பாவா, சங்கர் கிஸ்தயா, கோபால் கோட்சே, டாக்டர் பார்ச்சுரே, சாவர்க்கர், திகம்பர்பாட்ஜ். கடைசி குற்வாளியான திகம்பர் பாட்ஜ் அப்ரூவராக மாறினான். அவனின் வாக்குமூலம் சாவர்க்கரின் ஆசியோடுதான் கோட்சே காந்தியைக் கொன்றான் என்பது உறுதியாயிற்று. காந்திஜி கொலையில் தங்களுக்கு சம்பந்தமில்லை என்று ஆர்எஸ்எஸ் கூறுகிறது. ஆனால் காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சே, ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்ததை மிகவும் பெருமையோடு கூறியிருக்கிறான்.
நாதுராம் கோட்சேயின் தம்பி கோபால் கோட்சே சொல்கிறான், “தனது தமையன் நாதுராம் கோட்சே ஆர்எஸ்எஸ் அமைப்பிலிருந்து விலகவே இல்லை” என்கிறான். காந்தியை ஏன் கொலைசெய்தேன் என நீதிமன்றத்தில் நாதுராம் கோட்சே காந்தி மீது குற்றப்பத்திரிகை வாசித்தான். அதற்கு அவன் கூறிய காரணங்கள், “தேசிய மொழியாக இந்தியை சொல்லவந்த காந்தி, முஸ்லிம் மக்களின் மனம் குளிரச் செய்ய இந்துஸ்தானியை முன்மொழிய ஆரம்பித்துவிட்டார்; வந்தே மாதரம் பாடுவதை காந்தி விரும்பவில்லை; பசு பாதுகாப்பு குறித்து வாயளவில் தான் காந்திஜி பேசினாரே தவிர அதற்காக உருப்படியான எதையும் செய்யவில்லை; காந்தியின் உண்ணாவிரதம் இந்துக்களை மிரட்டி முஸ்லிம்களுக்கு சாதகம் செய்யவே”. சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களை இணைத்துக் கொண்டதில் காந்தி மீது இந்துத்துவா கோஷ்டியினருக்கு மிகுந்த கோபம் இருந்தது.
காந்திஜியின் கொலைக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும் சம்பந்தமில்லை என்று பச்சைப் பொய்யைக் கூறுகிறார்கள். ஆனால், கொலைகாரர்களுக்கு தூக்குத் தண்டனையளித்து, இவர்கள் தூக்குக் கயிற்றில் தொங்குவதற்கு முன்னர், இவர்கள் பாடிய பாடல் என்ன தெரியுமா? நமஸ்தே சதா வாத்சலே மாத்ருபூமி” என்ற பாடலாகும். ஆர்எஸ்எஸ் கும்பல் பாடுகிற அதே பாடலையே காந்தியைக் கொன்றவர்கள் பாடினார்கள்.
காந்தியின் கொலை ஒரு முக்கியமான சரித்திர உண்மையை உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கிறது;அது, காந்திஜி வெறும் தனிமனிதரல்ல; கோட்சேவும் ஒரு தனிமனிதனல்ல; இவர்களுக்குள் தனிமனித பகைமை உணர்ச்சியும் இல்லை; இரண்டு அரசியல் கோட்பாடுகளுக்கிடையில் ஏற்பட்ட மோதல் இது. மனிதநேய அரசியலுக்கும், மதவெறி அரசியலுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் அது. அந்த மோதலை ஒரு கொடூரமான பயங்கரவாதத்தின் மூலம் தீர்த்துவிட முனைந்தது இந்துமதவெறி. அன்றைக்கு இவர்களால் இதில் வெற்றிகாண முடியவில்லை. கோட்சேயின் அதே குருமார்கள் இப்போதும் களத்தில் இருக்கிறார்கள்; அன்றைக்கு இருந்ததைவிட இப்போது தீவிரமாய் இருக்கிறார்கள். அந்த கோட்சேயிடமிருந்து காந்திஜியைக் காப்பாற்ற முடியவில்லை. ஆனால், இந்த கோட்சேக்களிடமிருந்து இந்திய தேசம் காப்பாற்றப்பட வேண்டும்.
நாளை காந்தியடிகள் கொல்லப்பட்ட நாள்
காந்தியின் கொலை இரு கோட்பாடுகளின் மோதல்...! https://theekkathir.in/2018/01/29/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D/

No comments:

Post a Comment

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...