https://poovaraasu.blogspot.com/2020/04/blog-post_13.html?showComment=1586782426177
பிரித்தானிய பிரதமரிடம் கொரோன நோயாளிகளிடம் பணி புரியும் மருத்துவ பணியாளர்களிற்கு முழுமையான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் போதிய அளவிற்கு கிடைக்க வழி செய்யுமாறு மன்றாடி கோரிக்கை வைத்த மருத்துவர் அப்துல் மாபூத் சவுத்திரி கொரோன நோய்க்குள்ளான நிலையில் மரணத்தை தழுவிய துயரம் கொடுமையானது.
இந்த மருத்துவர் மட்டுமல்ல, பல மருத்துவ பணியாளர்கள் தமக்கு மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதில் அரசாங்கம் எத்தகைய நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என தொடர்ச்சியாக குற்றச்சாட்டிய வண்ணம் உள்ளனர். தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமையால் இதுவரை 20ற்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் மரணத்தை தழுவிக் கொண்டுள்ளனர்.
அண்மையில் லண்டன் மருத்துவமனை ஒன்றில் பணிபுரியம் எனது நண்பரான மருத்துவர் ஒருவருடன் தொலைபேசியில் உரையாடிய போது; அரசாங்கத்தின் பொறுப்பற்றதன்மை, பொதுமக்கள் மீதான அலட்சியம் காரணமாக மனம் வெறுப்புற்ற நிலையில் காணப்பட்டார்.
தினமும் வேலைக்கு போவது என்பது தனக்கும் சக பணியாளர்களிற்கும் கொலைக்களத்திற்கு போவது போன்ற அச்சத்துடனேயே இருப்பதாகவும், தம்மை மட்டுமல்ல தமது குடும்ப உறவுகளின் உயிர்களையும் பணயம் வைத்தே தாம் பணியை தொடர்வதாக தெரிவித்தார்.
பல வாட்டுகளில் (Wards) முகமூடிகள், கையுறைகள் என்பன இருப்பில் கிடையாது. தாம் வெறும் பிளாஸ்ரிக் (Plastic) மேலுறையினை அணிந்தே கொரோனா நோயாளிகளை பார்வையிடும் நிலைமை இருப்பதாகவும், இதனால் தாம் இலகுவாக நோய்த் தொற்றுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது என கவலைபட்டுக் கொண்டார்.
அரசாங்கம் இந்த தொற்று நோய் குறித்து எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருந்ததுடன் மட்டுமல்ல, தற்போதைய நெருக்கடி வந்த பின்னரும் முழு முயற்சியுடன் செயலாற்றவில்லை என தெரிவித்தார். தொலைக்காட்சியில் வந்து அமைச்சர்கள் கூறுவது போல வைத்தியசாலைகளில் மருத்துவ பணியாளர்களை இந்த கொடிய தொற்று நோயிலிருந்து பாதுகாக்க எத்தகைய முன்னெடுப்பு நடவடிக்கைகள் எதுவும் கிடையாது என தெரிவித்ததர்.
ஒரு சில வைத்தியசாலை நிர்வாகத்தினர் அரசின் பொறுப்பற்ற தனத்தை மூடி மறைக்கும் முகமாக பணியாளர்களை “முகமூடிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து வாட்டுகளிற்குள் போக வேண்டாம், இதனால் நோயாளிகள் பதற்றமடைந்து விடுவார்கள்” என அறிவுறுத்தல்களை வழங்கி இருப்பதாகவும் விசனப்பட்டுக் கொண்டார். தானும் சக மருத்துவர்களும் இதனை மீறி பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து நோயாளிகளை பார்வையிட சென்ற போது வாட்டு (Ward) பொறுப்பாளர், தங்களை இடைமறித்து வாட்டினுள் செல்ல அனுமதியை மறுத்ததாகவும், நிர்வாக அறிவுறுத்தலை மீறுவதாகவும் எச்சரித்த போது; தான் குறித்த வாட்டு பொறுப்பாளரிடம் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் இருப்பதானல் அவருக்கும் ஏற்படக் கூடிய தொற்று நோய் அபாயம் குறித்து எச்சரித்த போதும் வாட்டு பொறுப்பாளர், நிருவாகத்தின் கட்டளையினை மீற முடியாது என தம்முடன் முரண்டு பிடித்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் கோரோனா நோயின்றி வேறு நோய்களிற்கு சத்திர சிகிச்சைக்காக வாட்டுகளில் உள்ள சாதாரண நோயாளிகளும் வைத்தியசாலையில் கொரோன நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும், இது அங்கு நிலவுகின்ற தொற்று நோய்கான பாதுகாப்பு உபகரணங்களின் குறைபாடுகளின் வெளிப்பாடே எனத் தெரிவித்தார்.
ஆனால் அமைச்சரவை சுகாதார செயலாளர் மாட் ஹான்காக், இங்கிலாந்தின் தேசிய மருத்துவ சேவை (National Health Services - NHS) ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்களை அதிகமாக பயன்படுத்த வேண்டாம் என கோரிக்கையினையும் விடுத்திருந்தார். மேலும் கோரோனா காரணமாக மருத்துவ ஊழியர்களின் இறப்புகளுக்கும், பாதுகாப்பு உபகரணங்கள் (Personal Protection Equipment - PPE) பற்றாக்குறைக்கும் எந்த தொடர்பும் இருப்பதாக தெரியாது என பொறுப்பற்றதனமாக பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
உண்மையில் இவர்களிடம் நோயினை கட்டுப்படுத்த எத்தகைய மருத்துவ ரீதியான அணுகுமுறையும் கிடையாது. மருத்துவர்களிடம் ஆலோசனைகளை பெற்று அதன்படி செயற்பட அவர்களிற்கு ஒத்தாசையாக இருப்பதற்கு பதிலாக, மருத்துவத்திற்காக அரசு செலவிடும் பணத்தை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்க முடியும் என திட்டமிடுவதிலேயே குறியாக இருக்கின்றனர். ஆரம்பத்திலேயே பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கூறியதை மீண்டும் இங்கு ஞாபகப்படுத்துவது பொருத்தமானது. “நாங்கள் விஞ்ஞானத்தை நம்புபவர்கள் எனவே விஞ்ஞான முறையில் இதற்கான தீர்வு, கைகளை நன்றாக கழுவி கொண்டால் தற்போதைக்கு தீவிரமாக பரவுவதை குறைக்க முடியும். மேலும் குடும்பங்கள் தமது அன்புக்குரியவர்களை அவர்களின் வாழ்நாளுக்கு முன்னரே இழக்கும் துர்ப்பாக்கிய நிலை உருவாகியுள்ளது”.
அரசாங்கத்தின் இத்தகைய எதேச்சையான செயற்பாடுகள் ஒரு பாரிய மனித அழிவினை பிரித்தானியால் ஏற்படுத்துப்போகின்றது.
பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட எல்லா வல்லரசு நாடுகளிலும் ஆட்சியாளர்களின் ஒரே குறிக்கோள் முதலாளித்துவ நிறுவனங்களின் நலன்களுக்காக சேவை புரிவதும், அவர்களை பொருளாதார ரீதியில் சரிந்து விழாது தூக்கி நிறுத்துவதுமே எப்போதும் நடைமுறை. பொது மக்களின் சுகாதாரம், கல்வி, வாழ்க்கைத்தரம் ஏனைய அடிப்படைத்தேவைகள் குறித்து ஒரு துளியேனும் அக்கறை கொண்டது கிடையாது.
இந்த பேரழிவு கொள்ளை நோயிலிருந்து மக்களை காப்பாற்றும் செயற்பாடுகளிற்கு முன்னுரிமை கொடுத்து சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல், பெருநோய் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து முதலாளித்துவ நிறுவனங்களை காப்பாற்றும் நோக்கில் பல பில்லியன் பணத்தை இந்த நிறுவனங்களிற்கு வழங்க முன் வந்துள்ளதுடன், தனியார் மருத்துவ மனைகளை பொறுப்பெடுத்து மக்களை அதில் சிகிச்சை அளிப்பதற்கு பதிலாக; தனியார் மருத்துவ மனைகளை பாவிப்பதற்கு நாளொன்றிற்கு பல மில்லியன் கணக்கான பொது மக்களின் வரிப்பணத்தை வாரி வழங்குகின்றது.
இந்த பேரழிவு கொள்ளை நோயின் போது எம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் இந்த முதலாளித்துவ முறைமை முடிவுக்கு வந்து விட்டதனை உணர்த்தி நிற்கின்றன. நாம் முதலாளித்துவ முறைமைக்கு மாற்றான பரந்துபட்ட மக்களின் நலனை உயர்த்தி பிடித்து செயற்படும் சோசலிச முறைமையை நோக்கி விரைவாக பயணிக்க வேண்டியது அவசியமாகி விட்டது தெளிவானது.
ஜெகதீசன்
13/04/2020
No comments:
Post a Comment