https://senkodi.wordpress.com/2020/04/06/c13-2020-corona-who/
கொரோனா: WHO வை நம்பலாமா?
கொரோனா: WHO வை நம்பலாமா?
உலகம் முழுவதையும் கொரோனா பயம் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் ஊரடங்கு அதாவது சமூக விலக்கம் அறிவிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் மார்ச் 25 தொடங்கி ஏப்ரல் 14 வரை இருபத்தியோரு நாட்கள் ஊரடங்கு ஆறிவிக்கப்பட்டு நடமுறைப்படுத்தப்படுகிறது. இந்த 21 நாட்களை கொண்டாட்டமாக செல்பி எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிடுவது. என்ன சாப்பிட்டோம் என்பது தொடங்கி என்ன படம் பார்த்தோம் என்பது வரை பதிவிட்டு, பதிவிடத் தூண்டி ஆறாத காயத்தில் சீழ் போல் பீடித்துக் கொண்டிருக்கிறது. மறுபக்கம் ஆயிரம் கிமீ என்றாலும் நடந்தேனும் சொந்த ஊர் சென்று சேர்ந்து விடுவோம் என்று நடந்து கொண்டிருக்கும் ஆயிரக் கணக்கான குடும்பங்கள். அதிலும், உணவில்லாமல் பசியாலும், இயலாமையாலும் ஏற்படும் மரணங்களும், காசில்லாத நேரத்தில் வரும் பசியை அவமானமாக உணர்வோரின் தற்கொலைகளும் மனதை காயப்படுத்துகின்றன. கொரோனா முடிந்து விடுமா? அல்லது, ஊரடங்கு நீட்டிக்கப் படுமா? எனும் கேள்வியை சிந்திக்கவே நடுக்கமாக இருக்கிறது.
இதற்கிடையில், வாட்ஸ் ஆப்பில் ஒரு செய்தி உலவிக் கொண்டிருக்கிறது. அதை ஏற்பதற்கு ஐயமாக இருக்கிறது ஏனென்றால் எந்தவித உறுதிப்படுத்தலும் அதில் இல்லை. ஆனால் சமூக நிகழ்வுகளோடு ஓரளவிற்கேனும் ஒத்துப் போகிறது. கொரோனாவிற்கு முன்னால் பேசு பொருளாக இருந்தது, இந்தியாவின் சில காலாண்டுகளாக தொடரும் பொருளாதார வீழ்ச்சி. அதை முன்வைத்து பல நிறுவனங்கள் ஆட்குறைப்பிலும், லாக் டவுனிலும் இறங்கியிருந்தன. அரசின் நிதி உதவியை கோரியிருந்தன. இதனுடன் தொடர்பு படுத்தித் தான் அந்த செய்தி இருந்தது. அதாவது, இந்தியப் பெருநிறுவனங்கள் அரசிடம், மூன்று கட்டங்களாக தேசிய லாக்டவுனை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தன. அந்தக் கோரிக்கை ஜனவரி முதல் வாரத்தில் இந்திய அரசிடம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதில் முதல் கட்டம் மார்ச் 2ம் வாரத்தில் தொடங்கி ஏப்ரல் இரண்டாம் வாரம் முடிய இருக்கிறது. தொடர்ந்து அடுத்தடுத்த இரண்டாம் மூன்றாம் கட்டங்கள் தொடர்கின்றன.
இது உண்மை என ஏற்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. ஏனென்றால், அதில் எந்த நிறுவனமும் ஒப்பமிடவில்லை, அசோசம் போன்ற இந்திய முதலாளித்துவ நிறுவனங்களின் கூட்டமைப்பின் எந்தப் பெயரும் அதில் பயன்படுத்தப் பட்டிருக்கவில்லை. மட்டுமல்லாமல், தேசிய லாக்டவுன் அறிவிக்கும் அளவுக்கு இந்தியப் பொருளாதாரம் இன்னும் வீழ்ச்சியை சந்திக்கவில்லை. எனவே, அதை ஏற்பதற்கில்லை என்றாலும், பெருமுதலாளித்துவ நிறுவனங்களின் சிந்தனை இப்படித்தான் இருக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை. சரக்கு தேங்காமலும், தேவை அதிகமாவும் இருக்கும் காலங்களில் அரசு எந்த தொழிலையும் நடத்தக் கூடாது என்றும், தொழில்களை நடத்துவதிலிருந்து அரசு ஒதுங்கி இருக்க வேண்டும் என்றும் கூறும் அவர்கள்; தேவை குறைந்து சரக்கு தேங்கி, உற்பத்தி செய்ய முடியாத நிலை வந்தால் மக்கள் வரிப்பணத்தைக் கொண்டு அரசு எங்களை கைதூக்கி விட வேண்டும் என்பார்கள். இது தான் அவர்கள் சிந்தனைமுறை.
இப்போது இன்னொரு செய்தியை பார்க்கலாம். இது வாட்ஸ் ஆப் வதந்தி இல்லை. கடந்த 2017ல் அமெரிக்கன் ஹார்ட் அசோஸியேஷன் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. உயர் ரத்த அழுத்தத்தின் அளவு 140/90 என்பதற்குப் பதிலாக 130/80 என்று குறைக்கப்பட வேண்டும் என்று கோரும் அறிவிப்பு அது. இதையடுத்து மருத்துவ அறிவியல் உலகம் இரண்டு கூறாகப் பிரிந்து விவாதித்தது. முடிவில் WHO (World Health Organaization) குறைக்கப்பட்ட அளவை ஏற்றுக் கொண்டது. மனிதர்களின் வாழ்முறை மாறும் போது அளவுகளை பரிசீலிப்பது சரியானது தான் என்று அதற்கு விளக்கம் கூறியது. 2017ம் ஆண்டுக்கு முன்புக்கும் பின்புக்கும் இடையே என்ன வாழ்முறை மாறிவிட்டது என்பதை அது விளக்கவில்லை. ஆனால் உயர் ரத்த அழுத்தத்துக்கு மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் பல பில்லியன் டாலர்கள் கூடுதல் லாபம் கண்டன. ஒரே இரவில் லட்சக்கணக்கானோர் புதிய உயர் ரத்த அழுத்த நோயாளிகளாக ஆக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கான மருத்துவமும், மருந்துகளும் தொடர்புடைய மருந்து நிருவனங்களை கொழிக்க வைத்திருந்தன.
தற்போது, குளோபல் ரிசர்ச் (CRG – Centre for Research on
Globalization) எனும் உலகமயமாக்கலை ஆய்வு செய்யும் ஊடக நடுவம் WHO குறித்து வெளியிட்டிருக்கும் ஒரு அறிக்கையின் சாரத்தை சுருக்கமாக பார்க்கலாம்.
மார்ச் மாத தொடக்கத்தில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகம் கேவிட் 19 பற்றிய WHOன் தரவுகளை இனி பயன்படுத்துவதில்லை என முடிவி செய்திருக்கிறது. ஏனென்றால், அதில் மலிந்திருக்கும் குறைகளையும் பிழைகளையும், முரண்பாடுகளையும் WHO சரி செய்ய மறுக்கிறது. பின்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கொரோனா வைரஸ் சோதனைகளுக்கான WHO வின் சோதனை நெறிமுறைகளில் குறைபாடுகளும், தவறான உறுதிப்படுத்துதல்களும் உள்ளதாக மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டியுள்ளன.
WHOன் முறைகளில் என்ன குளறுபடி? அது ஏன் திருத்திக் கொள்ள மறுக்கிறது? அதில் இருக்கும் முதன்மையான பிரச்சனை என்னவென்றால், தற்போது WHOன் தலைவராக இருக்கும் டெட்ரோஸ், 2009க்குப் பிறகு கொண்டுவரப்பட்ட உலக மருத்துவ நெருக்கடியை அறிவிக்கும் விதிமுறைகளை மீண்டும் மாற்றி பழைய முறைக்கே திரும்பி இந்த கேவிட் 19 னுக்கான சர்வதேச மருத்துவ நெருக்கடியை அறிவித்திருக்கிறார் என்பது தான்.
இதில் பல விசயங்கள் இருக்கின்றன. முதலில் 2009ல் என்ன நடந்தது? ஒரு தொற்று நோய் அதிதீவிரமாக உலகம் முழுக்க பரவினாலோ அதன் பாதிப்பு மிகவும் கடுமையானதாக இருந்தாலொழிய அந்நோயை உலகளாவிய நோய் தொற்றாக அறிவிக்கக் கூடாது. ஆனால் WHO பருவகால சளி போன்ற எளிய பாதிப்புகள் உலகம் முழுவதும் பரவலாக இருந்தாலே உலகளாவிய தொற்று நோய் என அறிவிக்க விரும்புகிறது.
அப்போதைய உலக சுகாதார கழகத்தின் தலைவர் டாக்டர் மார்கரெட் சான் பன்றிக் காய்ச்சலை உலகளாவிய தொற்று நோயாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இது தேசிய அவசரகால திட்டங்களைத் தூண்டியது, இதில் பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள எச்1என்1 தடுப்பூசிகள் என சொல்லப்பட்ட மருந்துகளை பல நாட்டு அரசுகள் வாங்கின. 2009 பன்றிகாய்ச்சல் பருவத்தின் முடிவில், எச்1என்1 காரணமாக ஏற்பட்ட இறப்புகள் சாதாரண பருவகால காய்ச்சலுடன் ஒப்பிடும் போது மிகச் சிறியவை என்பது நிரூபணமானது. நுரையீரலில் நிபுணத்துவம் பெற்ற ஜெர்மன் மருத்துவர் டாக்டர் வொல்ப்காங் வோடர்க், அவர் அப்போது ஐரோப்பா கவுன்சிலின் நாடாளுமன்ற சபையின் தலைவராக இருந்தார். ஐரோப்பிய ஒன்றியத்தில் பன்றிகாய்ச்சல் குறித்து பல்வேறு கருத்து வேறுபாடு இருந்ததால் அது குறித்து விசாரணைக்கு அவர் அழைப்பு விடுத்தார். பன்றிகாய்ச்சலை உலகளாவிய நோய் தொற்றாக அறிவித்ததற்கு பின்னனியாக இருந்தவர் பேராசிரியர் ஆல்பர்ட் ஓஸ்டெர்ஹாஸ். எச்1என்1 கிருமி தடுப்பு மருந்தின் மூலம் பல கோடி லாபம் அடைவதற்காகவே இவர் உலகளாவிய நோய் தொற்றாக அறிவிக்க WHO வை தூண்டினார்.
உலகளாவிய தொற்று நோயாக பன்றிக்காய்ச்சலை அறிவிக்க டாக்டர் சானுக்கு அறிவுறுத்திய பிற WHO விஞ்ஞான வல்லுநர்கள் பலர் கிளாசோஸ்மித்க்ளைன், நோவார்டிஸ் மற்றும் பிற முக்கிய தடுப்பூசி தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பெரிய மருந்தகத்திலிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பணம் பெறுகின்றனர். WHO பன்றிக் காய்ச்சல் தொற்று அறிவிப்பு போலியானது. மருத்துவம் அதைக் கண்காணிக்கத் தொடங்கியதில் 2009-10 உலகளவில் லேசான காய்ச்சலையே கண்டது. இந்த செயல்பாட்டில் தடுப்பூசி தயாரிப்பாளர்கள் பல்லாயிரம் கோடிகளில் லாபம் ஈட்டினர்.
2009ல் நடந்த இந்த ஊழலுக்குப் பிறகு தான் உலகளாவிய தொற்று நோய் அறிவிப்பு தொடர்பான விதிமுறைகளை மாற்றியமைத்தனர். (அதிலும் பல குழப்பங்கள் இருக்கின்றன என்பது வேறு கதை) ஆனால் இப்போதைய தலைவரான டெட்ரோஸ் கொரோனா வைரஸை உலகளாவிய தொற்று நோயாக அறிவிக்கும் போது புதிய விதிமுறைகளை கணக்கில் கொள்ளாமல் பழைய முறைகளையே கணக்கில் கொண்டார் என்பது குற்றச்சாட்டு.
WHOக்கு ஆலோசனை வழங்குவதற்கென்று SAGE என்ற பெயரில் மருத்துவ வல்லுனர்கள் 15 பேர் கொண்ட ஆலோசனைக் குழு ஒன்று உண்டு. இதிலுள்ள 8 பேர் Bill and Melinda Gates Foundation, Merck
& Co. (MSD), Gavi, the Vaccine Alliance (a Gates-funded vaccine group),
BMGF Global Health Scientific Advisory Committee, Pfizer, Novovax, GSK,
Novartis, Gilead போன்ற மருந்து தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து நிதி பெறுபவர்களாக இருக்கிறார்கள் என்பது தான் யதார்த்தம். இது தான் முதலாளித்துவதின் நெறி.
இன்னொரு தவிர்க்க முடியாத செய்தி என்னவென்றால் WHOவின் தற்போதைய தலைவரான டெட்ரோஸ் அதனோம் எப்படி அதன் தலைவரானார் என்பது தான். டெட்ரோஸ் 2016 வரை ஆப்பிரிக்க நாடான எதியோப்பியாவின் சுகாதாரத் துறை, வெளியிறவுத்துறை அமைச்சராக இருந்தவர். 2016ல் பில் கேட்ஸைச் சந்தித்த பிறகு கேட்ஸின் அழைப்பின் பேரில் எச்.ஐ.வி/எய்ட்ஸ், காசநோய் மற்றும் மலேரியாவுக்கு எதிரான உலகளாவிய நிதியத்தின் வாரியத் தலைவரானார். அதன் பின் அங்கிருந்து WHOக்கு தலைவராகிறார். WHOக்கு முதல் மருத்துவரல்லாத தலைவர் டெட்ரோஸ் தான் என்பது குறிப்பிடத் தக்கது. மேலும், ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத்தின் 2018-19 ம் ஆண்டு அறிக்கையில் WHO குறித்து இப்படி குறிப்பிடுகிறது, “முழு அமைப்பிலும் உள் ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளன, சர்வதேச அமைப்பிலிருந்து பெரும் தொகையை மோசடி செய்வதை நோக்கமாகக் கொண்ட பல திட்டங்கள் கண்டறியப் பட்டுள்ளன” இவை அனைத்துக்கும் மேலாக WHO பன்னாட்டு மருந்துக் கழகங்களின் நிதியின் மூலமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை தான் மிகப் பெரும் கொடையாளராக இருக்கிறது.
இந்த அளவுக்கு மோசமாக இருக்கும் WHO தான் உலகின் அனைத்து நாடுகளுக்கும் மருத்துவ ரீதியான ஆலோசனை வழங்கி கட்டுப்படுத்தி வருகிறது. இந்த உலக சுகாதாரக் கழகம் வழங்கும் ஆலோசனைகளும் முடிவுகளும் யாருக்கு சாதகமாக இருக்கும்? பன்னாட்டு மருந்து கழகங்களுக்கா? அல்லது மக்களுக்கா? என்று கேள்வி எழுப்புவது தவிர்க்க முடியாதது தானே. இந்த கழகத்தின் ஆலோசனை தானே சமூக தனிமைப்படுத்தல், ஊரடங்கு. இதை நாம் எப்படி புரிந்து கொள்வது? மக்களை தொற்று நோய் வந்து கொள்ளையடித்துச் சென்றுவிடக் கூடாதே எனும் நம்முடைய தவிப்பு யாருக்கான லாபமாக மாறப் போகிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டாமா?
இவை குறித்த எந்த சிந்தனையும் இன்றி முஸ்லீம்கள் தான் கொரோனாவை பரப்புகிறார்கள் என்றும், கைய தட்டு, விளக்கை அணை, தீபம் ஏற்று என்றும் பசப்பித் திரிபவர்களை எதால் அடிப்பது?
பின்குறிப்பு: இந்த கட்டுரைக்கான உந்துதலையும், உள்ளீட்டையும் தந்தது, Can
we trust the WHO எனும் கட்டுரை தான்.
https://senkodi.wordpress.com/2020/04/06/c13-2020-corona-who/
No comments:
Post a Comment