இன்று மாமேதை, பேராசான் மார்க்ஸின் 202 ஆவது பிறந்த நாள். உலகை புரட்சிகரமாக மாற்றியமைக்க விரும்பிய அந்த மாபெரும் மேதையின் கனவு இன்னும் நனவாகவில்லை. அதை நோக்கிய நகர்வில் இருக்கிறோமா என தன்னைத் தானே ஆய்வு செய்வதும், அந்த திசையில் பயணிப்பதை உறுதி செய்வதுமே நம்மையும், சமூகத்தையும் மேன்மைப் படுத்தும்.
கயூனிஸ்டுகள் யாரும் மார்க்ஸை கடவுளாக கருதுவதில்லை. மூலதனம் நூலை வேதமாக கொள்வதில்லை. ஏனென்றால் கடவுள், வேதம் போன்ற சொற்களின் பொருள், நடப்பு உலகை அப்படியே தக்க வைப்பதிலும், அதை புரட்சிகரமாக மற்றியமைப்பதை எதிர்ப்பதிலுமே தங்கி இருக்கிறது. அதனால் கம்யூனிஸ்டுகள் மார்க்ஸை கடவுளாகவும், மூலதனம் நூலை வேதமாகவும் ஒருபோதும் கருதுவதில்லை. ஆனால் கம்யூனிஸ்டுகள் அல்லாத மக்கள் சொற்களுக்கு இவ்வளவு நுணுக்கமாக பொருள் நுணுகி தெளிவதில்லை. அதேநேரம், ஒரு மனிதனின் மேன்மையைக் குறிக்க அதிகஅளவாக கடவுள் எனும் சொல்லால் குறிப்பது மக்களின் நடப்பில் இருக்கிறது. இந்த அடிப்படையில் மட்டுமே இந்தக் காணொளியின் தலைப்பு பொருத்தப்பாடு உடையது.
வேண்டுமானால் கம்யூனிசத்தின் உயிர் என்று கொள்ளலாம். மார்க்ஸின் உயிர் அல்ல, அது 65 ஆண்டுகளில் முடிவுக்கு வந்து விட்டது. ஆனால் அந்த ஆண்டுகளில் அவர் கைக்கொண்டிருந்த கண்ணோட்டம், ஆய்வுமுறை, அதற்காக படிக்க, அறிந்து கொள்ள அவர் செலவிட்ட உழைப்பு ஆகியவையே கம்யூனிசத்தின் உயிராக இருக்கிறது. அந்த உயிர் வளர்ந்து கொண்டிருக்கிறது, மலர்ந்து கொண்டிருக்கிறது, மணம் வீசிக் கொண்டிருக்கிறது.
மார்க்ஸும் மூலதனம் எனும் நூலும், முதலாளித்துவவாதிகளாலேயே தவிர்க்கவே முடியாமல் உச்சரிக்கப்படும் பெயர்களாக இருக்கின்றன. ஏனென்றால் அவரின் சமூக அறிவியல் கண்டுபிடிப்புகள், தப்பிக்கவே முடியாதபடி கற்பனாவாதிகளின், தனியுடமைவாதிகளின் உச்சந் தலைகளில் கூர்மையாய் இறங்குகிறது. வரலாற்றியல் பொருள்முதல் வாதம் அவர்களை நிலைகுலைய வைக்கிறது. அது எப்படி என்று அறிய வேண்டுமானால் மார்க்சியத்தை பயில்வது மிகவும் இன்றியமையாதது. புதியவர்களுக்கு, இளைஞர்களுக்கு மார்க்ஸை அறிவதற்கான தொடக்க அறிமுகம் தான் இந்தக் காணொளி.
பாருங்கள், பரப்புங்கள்.
https://senkodi.wordpress.com/2020/05/05/v7-2020-marx-bd/
No comments:
Post a Comment