Tuesday, 5 May 2020

மார்க்ஸை ஒதுக்கிவிட்டு வாழமுடியுமா?

மார்க்ஸை ஒதுக்கிவிட்டு வாழமுடியுமா?

karal marks 2

அவன்
மானுடத்தின் வக்கீல்
அன்று
அவன் பெயரை
எழுதக் கூட
அனுமதிக்காமல்
மொழி
முடமாக்கப்பட்டது
இன்றோ
சூரியன் கூட
அவன் பெயரை
உச்சரிக்காமல்
உதிக்க முடியவில்லை
அவன் இருந்த போதோ
தூசிக்கப்பட்டான்
இன்று
அவன் புதைகுழியின்
புல்லும் கூட
பூஜிக்கப்படுகிறது.
அழகைப் பார்த்து நான்
பிரமித்திருக்கிறேன்
என்னை
அறிவால் பிரமிக்கவைத்தவன்
அவன் தான்
அவன் கண்களில்…
உலகின் இருட்டையெல்லாம்
விரட்டியடிக்கும்
வெளிச்சம்
அவன் தான்
மனிதகுலத்தின்
இறந்த காலத்தையெல்லாம்
ஜெயித்து முடித்த சிந்தனையாளன்
கடவுளின் சிறைச்சாலையிலிருந்து
மனிதனை விடுவித்த
மகான்
அவன் தடுத்திராவிட்டால்
சரித்திரம்
தற்கொலையின் விளிம்புக்குத்
தள்ளப்பட்டிருக்கும்
பழைய சித்தாந்தங்கள்
முதலாளித்துவத்தின் புண்களை
முத்தமிட்டன
நிகழ்காலத்தின்
நிர்வாணம் மறந்து
அடுத்த ஜென்மத்திற்க்கு
ஆடை நெய்தன
ரொட்டியை இறைவன்
தயாரிக்கிறான்
அதில் புசிப்பவன் பெயரையும்
பொறிக்கிறான் என்றன
இலக்கியமும் கலையும்
இந்த
ஓட்டைச் சமூகத்தோடு
ஒத்துப்போகத்தானே
ஓதின ?
நீதி நூலெல்லாம்
கொழுந்து விட்டெரியும்
கோபத்தின்
இடுப்பை ஒடிக்கும்
ஏற்ப்பாடல்லவா ?
சிருஷ்ட்டிக்கப்பட்ட
செயற்கை இருட்டு
மனிதனைப்
பிறவிக் குருடென்றே
பேசவைத்தது
மார்க்ஸின்
சம்மட்டி அடியில்
மனிதகுலம்
தன்
துருக்கள் உதிர்ந்து துலங்கியது.
எழுந்திரு மனிதனே
உனக்கு
முன்னும் பின்னும்
இன்னொரு பிறவி
என்பதே இல்லை
நீ என்பதன்றோ
நிஜம்
சொர்க்கச் சிந்தனையை
நிறுத்தி விடு
வர்க்கச் சிந்தனையை
வளர்த்துவிடு
வியர்வைக்கு விலை
பரலோகத்தில்லை
இகலோகத்தில் உண்டென்று
இயம்பு”-
அவன் குரல்
அகிலத்தின் சுவர்களைஅசைத்தது
பழைய விருட்சங்களின்
விஷவேர்களைச் சென்று
விசாரித்தது
அவன்
பட்டபாடுகள் எத்தனை ?
அதோ
அந்த
அறிவின் பிதாமகன்
வறுமையின் மடியில்
வசித்த நாட்கள்…..
இரைப்பையைப்
பசிக்கு விற்றுவிட்டு
அவன்
அறிவுக்குச் சாப்பாடு போட்ட
அந்த நாட்கள்
ஜென்னியின் மார்பில்
பாலையும் துக்கத்தையும்
சேர்த்துப் பருகும் அந்த சின்னக் குழந்தை
கட்டுரை அனுப்புவதற்காய்
அடமானம் கிடக்கும்
குழந்தையின் காலணிகள்
உலகத்து வறுமையை
ஒழிக்க வந்தவனுக்கு
சுயவறுமை என்ன
சுடவா செய்யும் ?
அவனுக்கு
அஞ்சலி செலுத்தினால்
இருதய ரத்தம்
இன்னும் சிவக்காதோ ?
இனி எந்த தேசமும்
மின்சாரத்தையும்
மார்க்சையும்
ஒதுக்கி விட்டு
உயிர்வாழ முடியாது.

பாட்டாளி வர்க்கத்தின் ஒப்புயர்வற்ற ஆசான் கார்ல் மார்க்ஸ் குறித்து கவிஞர் வைரமுத்துவின் கவிதை.

இருநூறாவது பிறந்த நாள் நிறைவை முன்னிட்டு.

முகநூல் பதிவிலிருந்து
https://senkodi.wordpress.com/2018/05/05/karl-markx-200/

No comments:

Post a Comment

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...