Wednesday 28 November 2018

மாவீரர் நினைவுகளும் மாவீரர் நாளும்.


மாவீரர் நினைவுகளும் மாவீரர் நாளும்.
             தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் போது, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சார்பில், தமது இன்னுயிர்களை இழந்த போராளிகளுக்கும், தாமே விரும்பி தமதுயிரைத் தற்கொடை செய்துகொண்ட புலிப் போராளிகளுக்குமான வீரவணக்கத்தை தோழமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
        அவர்கள் தமது இலட்சியத்தை நிறைவேற்ற, பின்பற்றிய கொள்கைகளும் நடைமுறைகளும் என்னவாக இருந்தாலும் சரி, அவர்களின் இலட்சியம் உயர்வானது; அவர்களின் ஈட்டல்கள் வளர் திசைத்தன்மைபெற்றவை. தமிழீழத் தேசம் நடைமுறைக்கு வரும்வரை நிலைத்து நிற்கக்கூடியவை.
    ஆனால், அவர்களின் இலட்சியம் இன்னமும் நிறைவேறவில்லை. அவர்கள் விட்ட இடத்தில் இருந்து, அவர்கள் விட்ட தவறுகளைத் தவிர்த்து, தமிழீழ இலட்சியம் நிறைவேற உளைப்பதுதான் அவர்காலத்திய போராளிகள் அனைவரினதும் சமுக மற்றும் தேசியக் கடமையாகும். முன்னோர்களினது மட்டுமல்ல, புதிய தலைமுறையினரது கடமையும் இதுதான். இதற்காக சபதமெடுக்கும் நாளாக, மன உறுதியைப் பலப்படுத்தும் நாளாக இந் நாளை எடுத்துக் கொள்வோம்.
அனைதுத் தமிழீழ மாவீரர்களா அல்லது புலி மாவீரர்களா?
      ஆனால், இவ்வித சபத மெடுக்கும் நாளாக, புலி மாவீரர் நாள் அமைந்திருப்பது தவறு  என்பதுவே எனது கருத்தாகும். காரணத்துக்குள் செல்கிறேன். இலங்கைத் தமிழ்த் தேசியத்தின் போராட்டம் தனது வளர்ச்சிப் போக்கில் பல்வேறு வளர்திசைத் திருப்புமினைகளைக் கண்டுள்ளது. அவையாவன:
1)  1-வது வளர்திசைத் திருப்புமுனை:            இலங்கைத் தேசியத்தில் இருந்து தமிழ்த் தேசியம் பிரிந்து, தனி அரசியல் அணியாக மாறியது. பெயர்: தமிழ் காங்கிரஸ். இத் திருப்புமுனைத் தலைவர் ஜி.ஜி. பொன்னம்பலம்.
2) 2-வது வளர்திசைத் திருப்புமுனை:                    முழு இலங்கையிலும் 50க்கு50 எனும் நிலையில் இருந்து சமஸ்டி எனும் கோரிக்கையாக மாறியது. இத் திருப்புமுனைத் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம்.
3)  3-வது வளர்திசைத் திருப்புமுனை:          பாராளுமன்ற எல்லைக்குள் மட்டுப்பட்டிருந்த சமஸ்டிக்கான போராட்டம், வெகுஜனப் போராட்டமாக மாறியது. இத் திருப்புமுனைத் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம்.
4) 4-வது வளர்திசைத் திருப்புமுனை:   சமஸ்டிக்கோரிக்கை தனிநாடுக் கோரிக்கையாக மாறியது. வெகுஜனப் போராட்டம் பாரளுமன்றத் தன்மையில் இருந்து விடுபட்டது. வட்டுக்கோட்டை மாநாட்டை அதற்கான நாளாக வைத்துக்கொள்ளலாம். இத் திருப்புமுனைத் தலைவரும்  எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்கள்தான். இம் மூன்று மாபெரும் திருப்புமுனைகளுக்கும் காரணமாய் இருந்தது தந்தை செல்வாதான்.
5)   5வது வளர்திசைத் திருப்புமுனை:     போர்க்குண்மிக்க வெகுஜனப் போராட்டம், ஆயுதப் போராட்டமாக பரிணாமம் பெற்றது. இத் திருப்புமுனைத் தலைமை தமிழீழ மாணவர் பேரவையாகும்.
6) 6-வது வளர்திசைத் திருப்புமுனை:           மஹாவம்சப் பேரகங்காரவாத அரசியல் அணியினருக்கு எதிராக நடந்துவந்த ஆயுதப் போராட்டம் அரச படைகளுக்கு எதிரான ஆயுத நடவடிக்கைகளாக மாறியது. 1983 இல் யாழ்/ திந்நவேலியில் நடந்த இராணுவத் தாக்குதலை திருப்புமுனையாகக் கொள்ளலாம். திருப்புமுனைத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனேயாகும்.
7)    7-வது வளர்திசைத் திருப்புமுனை:           முறைசாரா யுத்தம் (கொரில்லா யுத்தம்), முறைசார் யுத்தமாக (நிரந்திர படைகளினூடான யுத்தம்) மாறியது இதுதான் தமிழீழப் போராட்டத்தின், இதுவரை இல்லாதளவிற்கான மிக உயர்ந்த திருப்புமுனையாகும். இப்போதுதான் தமிழீழ அரசுக்கான அத்திவாரம் அமைகின்றது.
. ஆனையிறவு மூகாமின் மீதான தாக்குதலை இத் திருப்புமுனைக்கான நிகழ்வாகக் கொள்ளலாம். இத் திருப்புமுனைத் தலைவரும் பிரபாகரன்தான்.
8)   8-வது வளர்திசைத் திருப்புமுனை:                    1970 களில் இருந்தே சிறி லங்கா அரசுடன் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்துவந்த அரசியல் இராணுவ மோதல்கள் கூர்மையடைந்து இந்திய அரசுடனான மோதலாக மாறியது. ஸ்ரீ லங்கா அரசால், இலங்கைக்கு வரவழைக்கப்பட்ட இந்திய சமாதானப் படையுடனான மோதலைத்தான் குறிப் பிடுகிறேன். இத் திருப்புமுனைத் தலைவர் பிராபகரன் மட்டுந்தான் என்றோர் கருத்து உருவாக்கப்பட்டுள்ளது. அது தவறு, இத் திருப்புமுனைத் தலைவர்கள் பிரபாகரனும், ஜே வி.பிஇயக்கத் தலைவரும், ஸ்ரீ லங்கா அரசின் அப்போதைய ஜனாதிபதி பிரேமதாசாவுமே ஆகும். இப்போராட்டத் தையொட்டிய மூவரின் கண்ணோட்டமும் வெவ்வேறாக இருந்தாலும் மூவரும் இந்தியாவின் இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்த்தனர். இவ் இருவரில் ஜே.வி.பியின் போராட்டந்தான் அதிக அரசியல் தாக்கத்தை உருவாக்கியது.
9)   9-வது வளர்திசைத் திருப்புமுனை:     இந்தியாவுடனான யுத்தம் முடிந்தது. விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் ஒரு தற்காலிக இணக்கம் ஏற்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கான ஒரு அரசியல் உடன்பாடு உருவானது. அக் கட்சியின் தலைமையில் தமிழீழ அரசாங்கம் ஒன்று உருவானது. இதுதான் இலங்கை தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளின் உயர்ந்த கட்ட வழச்சியாகும். உயர்ந்த கட்டம் என்பதற்க்குப் பதிலாக உச்ச கட்டமெனக் கூறலாம். பாதுகாப்பானதொரு இயக்கம்-தீர்மானகரமான(decisive) சக்தி; அவ் இயக்கத்தின் கீழானதொரு இராணுவம்-அடிப்படை basic சக்தி; இவ் இரண்டின் அனுசரணையுடனான ஒரு அரசாங்கம்-பிரதான main சக்தி. வேறென்ன வேண்டும். பிரதான சக்தியான அரசாங்கம் இராணுவத்தால் நியமிக்கப்பட்ட அரசாங்கமாகவே இருந்தது; அது ஆரம்பத்தில் அவ்விதந்தான் இருக்கும். இவ் ஒன்பதாவது வளர்திசைத் திருப்புமுனைத் தலைவரும் பிரபாகரனேயாகும்.
அதைப்படிப்படியாக மக்கள் ஜனநாயக அரசாங்கமாக மாற்றுவதுதான் புலிகள் இயக்கத்தின் முன்னால் இருந்த கடமையாகும். இவ்விதம் நடந்திருந்தால் தமிழீழத் தேசியம் தனது வழர்ச்சியின் இரண்டாம்கட்ட உச்ச நிலையை அடைந்திருக்கும்.
ஆனால், அவ்விதம் நடக்கவில்லை. மாறாக தலைவர் பிரபாகரன் அவர்களால் தொடங்கப்பட்ட இரண்டாவது உள்நாட்டு யுத்தம் இவ்வளர்ச்சியைத் தடுத்தது. புலிகளின் இராணுவம் பிரபாகரன் தலைமையில், தமிழீழ அரசாங்கத்திற்கு எதிரான ஒரு உள்நாட்டு யுத்தத்தை நடத்தியது. தமிழீழ அரசாங்கத்தின் பிரதானிகள் அனைவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டு முகவரிநீக்கமும் செய்யப்பட்டனர்; சிலர் உயிர் நீக்கமும் செய்யப்பட்டனர். உயிர் நீக்கம் செய்யப்பட்டவர்களுள் மாத்தையாவும் ஒருவர். யோகி, மூர்த்தி ஆகியோர் முகவரி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் இந்திய ஏஜெண்டுகள் என குற்றஞ்சாட்டப்பட்டனர். இதற்கான பகிரங்க ஆதரம் எதுவும் முன்வைக்கப்படவில்லை.
தமிழீழ உள்நாட்டு யுத்தத்தை நியாயப் படுத்துவதற்காகவும், அது பற்றிய விமர்சனங்களை அடக்குவதற்காகவும், ஸ்ரீ லங்கா அரச படைகளுக்கு எதிரான முறைசார் யுத்தத்திற்கான சூழல் உருவாக்கப்பட்டது. அவர்களை வலிந்து சண்டைக்கு இழுக்கும் வேலைத்திட்டங்கள் பின்பற்றப்பட்டன. இவ்வித சூளலை எதிர்பார்த்திருந்த ஸ்ரீ லங்கா இராணுவம் முழு மூச்சுடன் யுத்தத்தில் இறங்கியது, அடிவாங்கிய இந்தியா இலங்கை இராணுவத்துக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுத்தது. விடுதலைப் புலிகள் இயக்கத்தை முடமாக்கியது, பிரபாகரனை அரசியல் கோமா நிலைக்கு உள்ளாக்கியது, தமிழ் மக்களிடையே அச்சத்தை ஆழப்பதிப்பதற்காக தெற்காசியாவே இது  வரை கண்டிராத ஒரு இனஒழிப்பையும் நடத்தி முடித்தது.
         மாவீரர் பட்டியலுக்கு உரியவர்கள்யார்?
        இக் கேழ்விக்குப் போகுமுன்னர், 9வது திருப்புமுனை எனும் பகுதியில் பிரபாகரனால் நடத்தப்பட்ட இரண்டாவது தமிழீழ உள்நாட்டு யுத்தம்பற்றிக் குறிப்பிடிருந்தோம், அவ்விதமானால் முதலாவது உள்நாட்டு யுத்தம் எது? 7-வது வளர்திசைத் திருப்புமுனை. எனும் பகுதிக்குச் சென்று தொடரவும்.
        கொரில்லா யுத்தத்தை மரபுவழி யுத்தமாக மாற்றியது காலப் பொருத்தமானதா என்றோர் கேள்வியை எழுப்பித் தொடர்வோம். அதாவது 7வது திருப்புமுனைக்கு இட்டுச்சென்ற காலம் பொருத்தமானதா? இல்லை. இங்கோர் அவசரத்தன்மை காட்டப்பட்டுள்ளது. எவ்விதம்?
        1983 ஜுலைக் ‘கலவரந்தான்’ இலங்கையில் நடந்த முதலாவது இன ஒழிப்பாகும். இது தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் எதிரான ஒரு தாக்குதலாகும். முஸ்லீம் மக்களும் விதிவிலக்கல்ல. தமிழர்களின் பாரம்பரிய பிரதேசத்தில் மாத்திரமல்ல, இலங்கையெங்கணும் நடந்தவோர் இன ஒழிப்பாகும். 1977 இன் இனத் தாக்குதல் குறிப்பிட்ட, வரையறுக்கப்பட்ட நோக்கத்துடன் அமைப்புரீதியாக நடத்தப்பட்டதாகும். ஆனால், 1983 அவ்விதமல்ல, அனைத்து சிங்கள இனவாதிகளும் களத்தில் இறக்கிவிடப்பட்டார்கள். பௌத்த மதபீடங்கள், பாதுகாப்புப் படையினர், அரசியல்வாதிகள், வர்த்தகர்கள், கொள்ளையர்கள் இத்தியாதிகள் அனைவரும், அவரவர்களுkகு எட்டிய ஆயுதங்களுடன் களத்தில் இறக்கிவிடப்பட்டார்கள். சொந்தக் குரோதங்கள், பொருளாதாரப் போட்டிகள், நில அபகரிப்புகள், காம இட்சைத்தீர்ப்ப்கள், தநிநபர் பழிவாங்கல்கள் அனைத்தும் நிறைவேறின. இலங்கைத் தேசியர்கள் உட்பட இலங்கையர்களிடையே இன, மத, சாதிய ஒற்றுமையை விரும்பும் அனைவரும் திகைத்துப்போய் இருந்தார்கள். இவ்வித ஒரு நிகள்வை யாருமே எதிர்பார்க்கவில்லை. இதனால், இலங்கைத் தேசியர்களிடையேயும் தமிழ்பேசும் மக்களிடையேயும் தமிழீழப் போராளிகளின் ஆயுத எழுச்சிக்கு ஆதரவான போக்குகள் உருவாகின. இது அனைத்துப் பகுதிகளிலும் கொரில்லாத் தாக்க்குதல் அவசியம் எனும் மன நிலையை அனைத்து தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும் உருவாக்கியது. சிங்கள நண்பர்களின் ஆதரவையும் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலை உருவானது. பாதிக்கப்பட்ட ஜே.வி.பி இயக்க நண்பர்களில் பலரும் இதற்குள் அடங்குவர். அதுமட்டுமல்ல, ஜே ஆரால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை எதிர்த்து இயக்கங்கள் உருவாகும் சூளலும் உருவாகிறது.
        இச் சுளலைப் பயன்படுத்தி தென் இலங்கையிலும் தமது அணிகளை உருவாக்கும் பணிகளில் தமிழ் இயக்கங்கள் ஈடுபட ஆரம்பித்தன, வளர்ந்தும் வந்தன. புளட், ஈபிறஎல் எப், ஈறோஸ் ஆகியனவற்றைக் குறிப்பிடலாம். அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆற்.ஜெயவர்த்தனா ஒரு அமெரிக்கப் பற்றாளராக இருந்ததால், இந்திய மத்திய அரசும்,ஸ்ரீ லங்கா அரசுக்கு எதிராகச் செயற்பட ஆரம்பித்தது. முன் கூறிய இயக்கங்களுக்கு ஆதரவு செலுத்தவும்  ஆரம்பித்தன. எதிர்க் கட்சியாகச் செயற்படும் முரிமையும், பாராளுமன்ற உரிமையும் மறுக்கப்படுவதால், தமிழர்விடுதலைக் கூட்டணி இந்தியாசெல்கிறது. இங்குதான் பிரபாகரன் மன அவஸ்தைக்கு உள்ளாகிறார். தன்னால் தொடர்ந்து சீண்டப்பட்டுக் ஒண்டிருந்த இவ் இயக்கங்களுக்கு எதிராக ஒரு உள்நாட்டு யுத்தத்தையே நடத்த விரும்புகிறார். தமிழீழப் பிரதேசத்தை தனது ஆதிக்கத்தின் கீழ் கொணர் வதற்காக தமிழீழத்தை முறைசார் யுத்தப்பிரதேசமாக மாற்றுகிறார். பிற இயக்கங்களின் இருத்தலைச் சாத்தியமற்றதாக்குகிறார்.
        வெற்றியும் பெறுகிறார், ஆனால் தன்னைப் பொறிக்கிடங்கினுள் அடைத்துவிடுகிறார். கொரில்லா யுத்தத்தை இலங்கையின் சாத்தியமான இடங்களுக்கும் பரப்பி அதன் பலாபலன்களைப்பொறுத்து, பிற இயக்கங் களையும் இணைத்தவண்ணம், முறைசார் யுத்தம் என்ற கட்டத்திற்குச் சென்றிருக்கலாம். அப்போது எதிரி தனது படைகளை ஒரு இடத்தை நோக்கிக் குவிப்பது சாத்தியமாகி இருக்கமுடியாது. கெடுவான் கேடு நினைப்பான் என்பதை நிருபித்துவிட்டார்.
       இப்போது மாவீரர் பட்டியலுள் சேர்த்துக் கொள்ளப்படவேண்டியவர்கள் யார்? எனும் கேள்விக்குச் செல்வோம்.
1)     தாமிழீழ மாணவர் இயக்கக் கால (5வது வளர்திசைத் திருப்புமுனை) உயிர்த்தியாகிகள் விடுபட்டது ஏன்? அனைவரும் அறிந்த உதாரணம் உரும்பிராய் சிவகுமார்.
2)   6வது மற்றும் 7வது காலகட்டங்களில் அனைத்து இயக்கங்களும் பாதுகாப்பு நிலைகளுக்கெதிரான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன. பாதுகாப்புப் படைகளுக்கு சேதங்களை உருவாக்கியுள்ளன. வவுனியா பொலிஸ் தாக்குதல்-புளொட்; யாழ்தேவித் தாக்குதல்-ரெலோ; காரைநகர் தாக்குதல்-ஈபிஆறெல் எஃப் ஆகியவை சில எடுத்துக்காட்டுகள். இவ் உயிர் தியாகிகள் விடுபட்டது ஏன்? தமது துணிச்சலான நிலைப்பாட்டிற்காக உலகமே போற்றிய குட்டிமணி, தங்கத்துரை என்னவானார்கள்.
3)   9வது திருப்புமுனையின் பின்பான காலப்பகுதியில் நடந்த தமிழீழ உள்நாட்டு யுத்தத்தின் போது மரணமடைந்தவர்களை துரோகி பட்டியலுக்குள் உள்ளடக்குவது என்ன நியாயாம். எடுத்துக்காட்டு மாத்தையா?
4)   அதேபோல் முதலாவது உள்நாட்டு யுத்தத்தின் போது மரணித்தவர்களை எந்தக் கணக்கில் வைப்பது? குறிப்பாக ரெலோ இயக்கப் போராளிகள்.
5)   எந்த இயக்கத்தையும் சாராமல் தாம் சாகப்போகிறோம் என்பதைத் தெரிந்தும், போராட்டத்தைக் காட்டிக் கொடுக்கக் கூடாதென்பதற்காக, ஆயுதப் படையினரிடம் தமது இன்னுயிரை இழந்தவர்களும் உள்ளனர்.
      இவ் ஐந்து பிரிவினரின் ஒட்டுமொத்தக் கணக்கு நிச்சயமாக ஆகக் குறைந்தது ஆயிரத்தைத் தாண்டும். தமிழீழ வரலாறு இவர்களை மறந்து விடுதல் நியாயமா? நிச்சயமாக போராளிகளுக்குச் செய்யும் அநீதியேயாகும். ஆகவே நவம்பர்-27 விடுதலைப் புலிப் போராளிகளுக்கான நினைவுநாளே தவிர தமிழீழப் போராளிகள் அனைவருக்குமான நினைவுநாளல்ல. ஆகவே புலிகளிம் மாவீரர் நாளில் நேரெதிரான இரு விடயங்கள் நடைபெறுகின்றன ஒன்று போற்றப்பட வேண்டியவர்களில் தம்மவர்கள் போற்றப்படுகிறாரகள், பிறர் திட்டமிட்டு மறைக்கப்படுகிறார்கள். புலிகள் இன்னமும் தம்மால் கடைப்பிடிக்கப்பட்டுவந்த தமிழீழ உள்நாட்டு யுத்தப்போக்கை இன்னமும் கைவிடவில்லை என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும்.







No comments:

Post a Comment

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...