·
இலங்கை ஈஸ்டர் குண்டு வெடிப்புகள்:
இரத்த சகதியில் கால் பதிக்கப் போவது யார்?
-செந்தில், இளந்தமிழகம்
"இலங்கையில் ஆகச் சிறுபான்மையினரான
கிறித்தவர்களுக்கும் அதற்கடுத்த அளவில் இருக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் குறிப்பிட்டுச்
சொல்லும்படியான சமூகப் பொருளாதார நலன்களுக்கிடையிலான முரண்பாடுகள்
இல்லை. வெளிநாட்டுச்
சுற்றுலாப் பயணிகளை இலக்காக்கி நட்சத்திர விடுதிகள் குறிவைக்கப்பட்டிருப்பது 2008 மும்பை குண்டு வெடிப்புகளை நினைவுப்படுத்துகிறது. இலங்கை தீவுக்குள்ளான
அரசியல் பொருளாதார நிலைமைகளுக்கு அப்பால் இத்தாக்குதல்
அதிகம் சர்வதேச பரிமாணம் கொண்டதாக அமைந்துள்ளது.
இந்த தாக்குதல் ஏகாதிபத்திய மேற்குலகுக்கும் மத்திய கிழக்கிற்கும் எதிரான முரண்பாட்டை
கிறித்தவத்திற்கும் இஸ்லாத்திற்கும்
இடையிலான சிலுவைப் போர் போல் முன்னெடுத்துவரும் ’இஸ்லாமிய அரசு’ ஐ.எஸ். இயக்கப் பாணியிலான தாக்குதலாக அமைந்துள்ளது.
2001 ஆண்டு நடத்தப்பட்ட இரட்டை கோபுரத் தாக்குதல் அதன் தோற்றத்தில் சாகசதன்மை வாய்ந்தாக காட்சியளித்தாலும் அது ஆப்கானிஸ்தானின் கதவுகளை அமெரிக்காவுக்கு
திறந்துவிட்ட நடவடிக்கையே
ஆகும். அரசியல் பொருளில் அமெரிக்க புஷ்ஷின் நண்பனே ஒசாமா பின்லேடன். அதுபோல் இந்த தாக்குதலும்
முதலாவது அர்த்தத்தில்
இலங்கையில் உள்ள இஸ்லாமியர்களின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும்
இருப்புக்கும் ஆப்பு வைக்கக் கூடியது. சிங்கள பெளத்தப் பேரினவாதம் இதையே காரணமாக்கி தனது கோரப் பற்களை இஸ்லாமிய சமூகத்தின் மீது பதித்துவிடும்
அபாயம் உள்ளது. ஆசியாவில் இஸ்லாமியர்கள் மதச் சிறுபான்மையினராக வாழ்ந்துவரும் நாடுகளில் எல்லாம் மதப் பெரும்பான்மைவாத
சக்திகள் இத்தாக்குதலைத்
தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும். தாக்குதல் நடந்த அன்றே பா.ச.க.வை சேர்ந்த சுப்பிரமணிய
சுவாமி, இந்தியாவிலும்
இதுபோல் குண்டுவெடிக்காமல் இருக்க வேண்டும் என்றால் பா.ச.க. ஆட்சியே மேலும் வேண்டும் என்ற பொருள்பட கருத்துக் கூறியுள்ளார். நேற்றைய தேர்தல் பரப்புரையில் மோடி, இந்த குண்டு வெடிப்பைக் குறிப்பிட்டு பயங்கரவாதத்திற்கு எதிராக சண்டையிடுவதற்கு தமக்கு வாக்கு அளிக்குமாறு பேசியுள்ளார்.
மேலும், இலங்கை குண்டுவெடிப்பைக் குறிப்பிட்டு 2014 ஆம் ஆண்டு தாம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இதே நிலைமைதான் இந்தியாவில் இருந்தது என்றும் அவர் பேசியுள்ளார்."
"அமெரிக்க – இஸ்ரேல் – இந்தியா அச்சு அல்லது டிரம்ப் – நெதன்யாகு – மோடி என்ற ரசவாதக் கூட்டணி அப்பாவி மக்களின் ரத்தத்தின் பெயரால் தத்தமது இஸ்லாமிய எதிர்ப்புவாத
அரசியலைக் கொக்கரிக்கத்
தொடங்கிவிட்டன. இத்தாக்குதல்
அதன் இறுதியான அர்த்தத்தில் ஏகாதிபத்திய நலன்களுக்கு
சேவை செய்யக் கூடியது என்பதைப் பார்க்கத் தொடங்கிவிட்டோம். வரலாற்று அர்த்தத்தில்
இரட்டை கோபுரத் தாக்குதல் உலக அரசியலில் ஏற்படுத்திய தாக்கத்திற்கு பாதியளவேனும்
இந்த தாக்குதல் தெற்காசியாவின் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தவிருக்கிறது.
No comments:
Post a Comment