RACISM =நிறவெறி + சாதிவெறி +இனவெறி
எந்த
ஒரு மனிதனும் இன வெறியனாக பிறப்பதில்லை பெற்றோரும், சுற்றியுள்ள
சமூகமுமே ஒரு பிள்ளையின் மனதில் இனவெறிக் கருத்துகளை பதிக்கின்றனர்.” முன்னாள் ஐ.நா.சபை பொதுச்
செயலாளர் கோபி அனன்.
2001ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் ஐக்கிய நாடுகள் சபையால்
கூட்டப்பட்ட “இனவெறிக்கு எதிரான உச்சி மகாநாடு” உலகளவில் சலசலப்பை
தோற்றுவித்தது. 166 நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபற்றிய சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த
மகாநாட்டை உலக வல்லரசான அமெரிக்கா புறக்கணித்தது. இறுதி நேரத்தில் தாழ்நிலை அரச
பிரதிநிதி ஒருவரை அனுப்பி வைத்து, அவர் அங்கே வாயே திறக்கக் கூடாது
என்று கூறி விட்டு ஒதுங்கி விட்டது. அமெரிக்கா மட்டுமல்ல, இஸ்ரேலுக்கும் மகாநாடு தர்மசங்கடமான நிலையை தோற்றுவித்தது. தென்
ஆப்பிரிக்காவில் தமக்கு எதிரான காற்று வீசும் என உணர்ந்து பின் வாங்கி விட்டனர்.
இம் மகாநாடு,
அமெரிக்காவையும், இஸ்ரேலையும், இந்தியாவையும் எதிரணியில் தள்ளிவிட்டது. இம் மூன்று நாடுகளையும் ஒன்று
சேர்க்கும் புள்ளி எது?
நிறவெறியில் வளர்ந்தது அமெரிக்கா, இன/மத வெறியில் வளர்ந்தது
இஸ்ரேல், சாதிவெறியில் வளர்ந்தது இந்தியா. அமெரிக்கா கலந்து கொள்ளாமைக்கு இன்னொரு
காரணமும் கூட சேர்ந்து கொண்டது. அமெரிக்க பொருளாதார வளம் ஆப்பிரிக்க அடிமைகளால்
கட்டி எழுப்பப்பட்டது. அடிமைகளை பயன்படுத்தியதற்காக கடமைப்பட்டுள்ள அமெரிக்கா
இன்று வரை மன்னிப்புக் கூட கேட்கவில்லை. இந்நிலையில் அதற்காக நஷ்டஈடு வழங்க
வேண்டுமென ஆப்பிரிக்க நாடுகள் கோரி வருகின்றன.
ஆப்பிரிக்க
அடிமைகளின் நூறாண்டு கால உழைப்பில் பணக்காரனான அமெரிக்கா, அதற்காக நஷ்டஈடு வழங்க இன்றுவரை தயாராக இல்லை. அமெரிக்கா மட்டுமல்ல, காலனிய காலகட்டத்தில் அடிமை வியாபாராத்தாலும், காலனிய
நாடுகளை சுரண்டியதாலும் செல்வந்த நாடுகளாக மாறிய மேற்கு ஐரோப்பிய நாடுகளும்
நஷ்டஈடு பற்றிய பேச்சை எடுத்தால் ஓடி விடுகின்றன. நஷ்டஈடு விவகாரத்தை சர்வதேச
மட்டத்தில் பிரஸ்தாபித்த ஆப்பிரிக்க நாடுகள், தமது வாதத்தை
நியாயப்படுத்த,
நடைமுறையில் இருக்கும் “யூத நஷ்டஈடு” விவகாரத்தை எடுத்துக்காட்டின. ஜெர்மனியில் நாசிச ஆட்சிக் காலத்தில்
கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட யூதர்களுக்காகவும், வதை
முகாம்களில் கட்டாயவேலை வாங்கியதற்காகவும் ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலுக்கு நஷ்டஈடு
வழங்கி வருகின்றன. இஸ்ரேல் அரசுக்கு கிடைத்துவரும் வருடாந்த வருமானத்தில்
பெரும்பங்கு இந்த தொகையாகும.
ஒவ்வொரு
இனமும் தான் பாதிக்கப்படும் பொது மட்டும் இனவெறி எதிர்ப்பு கூச்சல் போடுவதும், அதே இனம் பிறிதொரு இனத்தை அடக்குவதை தனது உரிமை என நியாயப்படுத்துவதும் உலகில்
நடப்பது தான். நாசிச அடக்குமுறையில் இருந்து விடுபட்டு, தமக்கென இஸ்ரேல் என்ற தேசத்தை உருவாக்கிய யூதர்கள், அப் பிரதேசத்தில் பெரும்பான்மையாக இருந்த பாலஸ்தீன அரபு மக்களை அடித்து
விரட்டி, தற்போது ஒரு சிறுபான்மை இனமாக மாற்றிவிட்டனர். அம்மக்கள் மீது அடக்குமுறையை
பிரயோகிப்பதை ஜனநாயகம் என்கின்றனர். எத்தனை சமாதானப் பேச்சுவார்த்தைகள் வந்தாலும், வீடு திரும்ப முடியாத பாலஸ்தீன அகதிகள். இலட்சக்கணக்கில் அயல்நாடுகளில் உள்ள
அகதி முகாம்பளில் 60 வருடங்களாக அல்லலுறுகின்றனர். இஸ்ரேலினுள் வாழும் பாலஸ்தீனர்கள், சரளமாக ஹீப்ரூ மொழி பேசிய போதிலும் இரண்டாந்தரப் பிரஜையாக நடத்தப் படுகின்றனர்.
அதே நேரம் முன்னாள் சோவியத் குடியரசுகளில்
இருந்து வந்து குடியேறும்,
ஹீப்ரூ மொழியோ, யூத மத அனுஷ்டானங்களோ
அறியாத யூதர்களுக்கு இலகுவில் இஸ்ரேலிய பிரஜைவுரிமை கிடைக்கின்றது.
இவற்றை
தென் ஆப்பிரிக்காவில் முன்பு நிலவிய அப்பார்ட்ஹைட் (Apartheid) நிறவெறி ஆட்சி முறையுடன்
ஒப்பிட்டு,
பாலஸ்தீன மக்கள் மீதான இனப்படுகொலையையும் கண்டித்த அரசுசாரா
நிறுவனங்களின் டர்பன் மகாநாட்டு அறிக்கை இஸ்ரேலையும், அமெரிக்காவையும் உலுக்கி விட்டது. யூகோஸ்லேவியா மற்றும் ஈரான் மீதான மோதல்களின்
போது வாயில் வந்தபடி பேசிய அமெரிக்கா, தனது நண்பனான இஸ்ரேலை
விமர்சிப்பது என்றால் மட்டும் “பொருத்தமான வார்த்தைகளை” பாவிக்கும் படி வலியுறுத்தி வருகின்றது. இதுவரை காலமும் வழக்கில் இருந்த
சொற்கள் பல யார் யாருக்கு எதிராக பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தே அர்த்தம்
கற்பிக்கப்பட்டன.
துருக்கியில்
கமால் பாஷாவின் லிபரல் பாசிஸ்ட்கள் ஆர்மேனிய மக்கள் மீது நடத்திய இனப்படுகொலையை
உலகம் நினைவுகூர்வதில்லை. ஆனால் ஜெர்மனியில் ஹிட்லரின் நாசிகளின் யூத மக்கள்
படுகொலை ஆண்டுதோறும் தவறாமல் நினைவுகூரப்படுகின்றது. கம்போடியாவில் பொல்பொட்
மில்லியன் மக்களை இனப்படுகொலை செய்ததை விசாரிக்க நீதி மன்றம் அமைக்கும் ஐ.நா.சபை, இந்தோனேசியாவில் சுகார்ட்டோ நடத்திய படுகொலைகளை பற்றி விசாரிப்பதில்லை.
கம்யூனிய எதிர்ப்பு என்ற பெயரில் சுகார்ட்டோ லட்சக்கணக்கான இந்தோனேசிய மக்களை
கொன்று குவித்தமை இனப்படுகொலை இல்லையாம், அது “ஜனநாயக
மீட்பு” என்று விளக்கமளிக்கின்றனர்.
கொசோவோ
மக்களின் போராட்டத்தை நசுக்கிய காலஞ்சென்ற செர்பிய ஜனாதிபதி மிலோசொவிச்சை
இனப்படுகொலை குற்றச்சாட்டின் கீழ் விசாரித்தனர். மறுபக்கம் லெபனான் படையெடுப்பின்
போது, பெய்ரூட் நகரில் 2000 பாலஸ்தீன அகதிகளை கொன்ற இஸ்ரேலிய படைத்தளபதி ஷரோன் பின்னர் பிரதமராகி
அமெரிக்காவிற்கும் சென்று வந்தார். அவரை யாரும் இனம்படுகொலை குற்றச்சாட்டின் கீழ்
கைது செய்து விசாரிக்கவில்லை. இங்கே ஒரு நடைமுறை தத்துவத்தை மறக்கக் கூடாது.
எல்லோரும் தான் கொலை செய்கிறார்கள். ஆனால் கொலை செய்தவர்கள் எதிரியா, நண்பனா என்பதைப் பொறுத்தே நீதி வழங்கப்படுகின்றது.
டர்பன்
மகாநாட்டில் எந்த சொற்களை யாருக்கு பாவிப்பது என்று மயிர்பிளக்கும் விவாதம்
நடந்தது. இறுதித்தீர்மானத்தில் எந்த சொற்களை தவிர்க்க வேண்டும் என்று சர்ச்சை
எழுந்தது. வெறும் சொற்கள் பலரை அச்சமடைய வைப்பதன் காரணம், அவற்றின் எதிர்கால விளைவுகளையும் கருதித்தான். “நடந்தவற்றை
செய்தியாக தரும்”
மக்கள் தொடர்பு சாதனங்கள், உண்மையில்
அரச கொள்கைகளை மக்களிடம் பரப்புரை செய்யும் பிரச்சார சாதனங்களாகவே செயற்பட்டன.
ஆங்கிலத்தில் “Racism”
என்றழைக்கப்படும் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல் இல்லை. “நிறவெறி” அல்லது “இனவெறி”
என்று இடம், பொருள் கருதி பயன்படுத்தப்
படுகின்றது. இதனால் தான் “சாதிவெறி”
Racism அல்ல
என்று இந்தியா வாதிட்டது.
இன்றும்
பலர் Racism என்றால்
அது நிறவெறியைக் குறிக்கும் என கருதுகின்றனர். இந்தக் கற்பிதம் உண்மையில் மேற்குலக
நாடுகளில் இலகுவில் அறியப்படும் கருப்பு-வெள்ளை வேற்றுமை பற்றி கூறுகின்றது.
மேற்குலக நாடுகளில் சூழலுக்கேற்ப பயன்படுத்திய அந்த சொல்லை தமிழில் அப்படியே
இறக்குமதி செய்து பயன்படுத்துகின்றனர். “மேற்குலக சூழலுக்கேற்ப” என்பதில் அர்த்தம் உண்டு. ஐரோப்பிய இனங்களுக்கு இடையில் எத்தனை வேறுபாடுகள், பகை முரண்பாடுகள் இருந்த போதிலும், வெள்ளையினம் என்ற
அடிப்படையில் ஒன்றிணைக்கும் முயற்சிகள் நீண்ட காலமாக நடந்து வருகின்றன. அமெரிக்க
ஆங்கிலம் பேசும் வெள்ளையினத்தவரின் மூதாதையர் பல்வேறு ஐரோப்பிய இனங்களை
சேர்ந்தவர்கள். தோல் நிறம் காரணமாகவும், அடிமைகளின் சந்ததி
என்பதாலும் கருப்பர்களை இலகுவில் பாகுபடுத்தி, அதிகார பீடத்தை நெருங்க
விடாமல் தடுக்கின்றனர். (ஒபாமா போன்றவர்கள் விதிவிலக்குகள். வேறொரு நாடாக
இருந்தால் அதிகாரத்திற்கு சேவை செய்யும் இனத்துரோகிகள் என தூற்றப்பட்டிருப்பர்.)
ஆகவே
Racism என்பதை
எப்படி வரையறுப்பது?
இரண்டாம் உலகயுத்ததிற்கு பின்பே Racism என்ற
சொல் உலகில் பரவலாக பயன்பாட்டில் உள்ளது. இதன் அர்த்தம் அதற்கு முன்னர் நிற/இனவெறி
இருக்கவில்லை என்பதல்ல. நவீன உலகம் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் பல மாற்றங்களை
கண்டது. மேலும் எப்போது வெல்பவர்கள் அகராதியை நிரப்புகிறார்கள். ஜெர்மனியில்
ஹிட்லர் “பந்தவம்”
அல்லது “இனம்” (Race) என்ற அடிப்படையை
வைத்து மக்களை வேறுபடுத்தினான். நாசிச சிந்தாந்தம் ஏற்கனவே ஐரோப்பியர் மனதில்
இருந்த வெள்ளையர் இனம் உலகில் சிறந்தது என்ற மேலாதிக்க உணர்வின் மேல்
எழுதப்பட்டது. ஆப்பிரிக்காவை அடிமைப்படுத்திய ஐரோப்பியர்கள் கருப்பர்களை
மனிதர்களாக கருதவில்லை. இத்தகைய கருத்தியல்களுடன் யூத மதத்திற்கு எதிரான கிறிஸ்தவ
மதத்தின் காழ்ப்புணர்ச்சியையும் சேர்த்து நிறுவனமயப்படுத்தியத்தில் ஹிட்லருக்கு
பெரும் பங்குண்டு.
ஐரோப்பிய
காலனிகள் எங்கும் நிற ரீதியிலான பாகுபாடு நிலவியது. கிறிஸ்தவ ஐரோப்பா முழுவதும்
ஆயிரம் ஆண்டுகளாக யூதர்கள் இழிவுபடுத்தப்பட்டனர். இதனால் மற்ற ஐரோப்பிய நாடுகளின்
கனவான்கள் ஹிட்லர் மீது பழி போட்டு விட்டு தப்பி விட முடியாது. பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் தமது கடந்தகால
நிற/இனவாத ஒடுக்குமுறையை மறைத்துக் கொண்டு, நாசிகளை மட்டும்
இனவெறியர்களாக காட்டுகின்றனர். எது எப்படி இருந்த போதிலும் நவீன
சரித்திரவியலாளரும்,
அரசியல்வாதிகளும், சமூக விஞ்ஞானிகளும்
ஹிட்லர் காலத்தில் இருந்து தான் Racism என்ற சொல்லின் பயன்பாட்டை
ஆரம்பிக்கின்றனர்.
இங்கே
கூர்ந்து நோக்கினால் இன்னொரு விஷயம் தெளிவுபடும். ஹிட்லரின் இன ஒடுக்குமுறைக்கு
பலியானவர்கள் வெண்ணிறத் தோலுடைய யூதர்கள். அவர்கள் ஒரு மதத்தை சேர்ந்தவர்கள்
என்பதால்,
தாம் வாழ்ந்த நாட்டு மொழிகளையே தாய்மொழியாக கொண்டிருந்தனர்.
மேலும் ஐரோப்பிய யூதர்களை,
பிற ஐரோப்பிய மக்களிடம் இருந்து பிரிந்தறிய முடியாது.
வெள்ளையின யூதர்கள் மட்டுமல்ல, வெள்ளையின ஸ்லாவிய மக்களும் (ரஷ்யர், செர்பியர்) நாசிச இனவெறிக் கொள்கைக்கு பலியானார்கள். ஆகவே Racism என்பது
“நிற”வெறியை மட்டுமே குறிக்கும் எனக் கருதுவது தவறானது.
இதுவரை
காலமும் பலரால் வேண்டுமென்றே மறைக்கப்பட்ட உண்மை ஒன்றுண்டு. ஹிட்லரின் ஆரிய
சித்தாந்தத்திற்கும்,
இந்திய (மற்றும் ஈரானிய) ஆரியத்திற்கும் இடையிலான தொடர்பு
தான் அது. ஆரியனிசமும்,
ஸ்வாஸ்திகா சின்னமும் ஹிட்லரின் மூளையில் உதித்த சிந்தனை
அல்ல. இந்தியாவில் “தெயோசோபி”
அமைப்பை ஸ்தாபித்த அன்னி பெசன்ட் அம்மையார் ஹிட்லர்
தோன்றுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அத்தகைய கருத்துகளை கொண்டிருந்தார்.
ஹிட்லருக்கு ஆரியனிசத்தை கற்பித்த அமைப்பு, இன்றும் சென்னை நகரில்
அடையார் பகுதியில் இயங்கி வருகின்றது. ஹிட்லர் காலத்தில் இத்தாலியில் ஆட்சிக்கு
வந்த பாசிச முசோலினி பண்டைய ரோமர்களின் சின்னங்களுக்கு புத்துயிர் கொடுத்தான். அதே
போல ஹிட்லரும் வெள்ளையினத்தவரின் மூதாதையர் மத்திய ஆசியாவில் இருந்து
புலம்பெயர்ந்த ஆரியர்கள் என்ற கருத்தைக் கொண்டிருந்தான். மத்திய ஆசியாவில்
காணப்பட்ட (இன்று இந்துக்களால் பயன்படுத்தப்படும்) ஸவாஸ்திகா சின்னத்தை நாசிச
அமைப்பின் சின்னமாக்கினான்.
சரித்திர
ஆசிரியர்கள்,
ஐரோப்பிய இனத்தவர்களினதும், வட-இந்தியர்களினதும்
முன்னோர்கள் ஆரியர்களே என்றும், அதற்கு ஆதாரமாக மொழியியல்
ஒற்றுமைகளையும் எடுத்துக் காட்டுகின்றனர். “திபெத்தில் ஏழு வருடங்கள்” என்ற அமெரிக்க திரைப்படம் வெளியானது. சரித்திர சம்பவங்களை அடிப்படையாக கொண்ட
திரைக்கதை அது. ஒரு சாதாரண சாகசக்காரனாக திபெத்தினுள் நுழையும் கதாநாயகனை பற்றி
கூறுகிறது திரைப்படம். கதாநாயகன் நாசிக்கட்சி உறுப்பினர் என்பதும், ஹிட்லரின் உத்தரவின் பேரில் ஆரிய இனத்தின் தோற்றம் பற்றி ஆராய திபெத்திற்கு
அனுப்பபட்டவன் என்பதையும் அந்த திரைப்படம் சொல்லாமல் மறைத்துவிட்டது. திபெத்திய
பௌத்தம் பல இந்து மதக் கூறுகளை கொண்டுள்ளது. ஸ்வாஸ்திகா சின்னமும் அவற்றில் ஒன்று.
இந்து மதத்தினதும்,
திபெத்திய பௌத்த மதத்தினதும் மூலம் ஒன்றாக இருக்க வேண்டும்.
இந்துக்கள் சிவபெருமானின் வதிவிடமாக நம்பும் கைலாச மலை திபெத்தில் அமைந்துள்ளாமை
குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில்
உள்ள சாதியமைப்பு ஆதிகால வர்ணாச்சிரம முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது. ஆரியரின்
வரலாற்றைக் கூறும் வேதமான ரிக்வேதம் சாதிகளைப் பற்றி எங்கேயும் குறிப்பிடவில்லை.
ஆனால் வர்ணங்கள் பற்றியும்,
அவற்றிற்கு இடையிலான ஏற்றத்தாழ்வு குறித்தும் பேசுகின்றது.
மேலும் ஆரியக் குழுக்களின் தலைவன் இந்திரனால் தோற்கடிக்கப்பட்ட கருநிற தாசர்கள்
பற்றியும் குறிப்பிடுகின்றது. அடிமைகள் எனப் பொருள்படும் “தாசர்கள்” இன்றைய தாழ்த்தப்பட்ட தலித் சாதியினராக கருத இடமுண்டு. வர்ணம் என்பது நிறம்
என்று கருதிக் கொள்பவர்கள்,
அது நிறவெறி என்பதையும் ஏற்றுக்கொள்கின்றனர். சாதியமும், நாசிசமும் சமூக ஏற்றத்தாழ்வு நியாயம் எனக் கூறுகின்றன. சாதிகளுக்கு இடையிலான
கலப்புமணம் தடைசெய்யப்பட்டதைப் போல, தூய ஆரிய இனம் பற்றி
பேசிய நாசிசம் வேற்றினக்கலப்பை குற்றமாகப் பார்த்தது. நாசிகளின் காலத்தில்
யூதர்களும்,
ஜிம்சிகளும் அசுத்தமானவர்கள், தீண்டத்தகாதவர்கள்
என ஒதுக்கி வைக்கப்பட்டனர். இத்தகைய சிந்தனை இன்றும் கூட இந்திய உயர்சாதியினர்
மத்தியில் உள்ளது.
டர்பன்
மகாநாட்டில் சாதிப்பிரச்சினை இந்தியாவில் இல்லை என்று பூசி மெழுக இந்திய அரசு
பகீரதப் பிரயத்தனம் எடுத்தது. அப்படியே இருந்தாலும் சாதியத்தை Racism என
வரையறுக்க முடியாது என வாதிட்டது. ஆயினும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்திய
அரசின் கூற்றை மறுதலித்தன. மகாநாட்டில் சாதிப் பாகுபாட்டிற்கு எதிரான தீர்மானம்
நிறைவேற்றப்பட்டன. அந்த தீர்மானத்தின் சில பகுதிகள் இவை:
Ø பாகுபடுத்தும் வடிவமான சாதி அமைப்பு சரித்திர ரீதியாக சமூகங்களை பிளவுபடுத்தி
உள்ளது. தீண்டாமை முறையானது மனிதடட உரிமைகளை மீறவும், வன்முறைகளை தூண்டவும் வழிவகுக்கின்றது.
Ø மனிதத்திற்கு விரோதமான சாதிப்பாகுபாடு, மதத்தாலும், கலாச்சாரத்தாலும் அங்கீகரிக்கப்பட்ட பொய்யான சித்தாந்தம் மீது
கட்டப்பட்டுள்ளது. தென் ஆசியாவிலும், ஆப்பிரிக்காவின் சில
பகுதிகளிலும் வாழும் கோடிக்கணக்கான
தாழ்த்தப்பட்ட மக்களை இது பாதிக்கின்றது.
Ø தூய்மையற்றவர்கள் என்று சொல்லி ஒதுக்கும் தீண்டாமை முறையானது. அம்மக்களின்
வழிபாட்டு உரிமையை மறுப்பதுடன், கீழ்த்தரமான வேலைகளை செய்யுமாறு
பணிக்கப்படுகின்றனர்.
Ø தலித் மக்கள் தமது உரிமைகளுக்காக போராடும் போதெல்லாம் அவர்கள் மீது
சொத்துக்களை அழித்தல்,
பாலியல் வன்கொடுமை, கொலை போன்ற வன்முறைகள்
ஏவிவிடப்படுகின்றன.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
“இனி” (அக்டோபர் 09) சிற்றிதழில் பிரசுரமாகியது. படைப்பு கலை
No comments:
Post a Comment