`நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே!’’
சீமானின் மீது அக்கறையுடன்
ஒரு கடிதம்
சீமான் நான்கு விவகாரங்களை
வைத்தே எப்போதும் முன்னே வருகிறார். காவிரி, முல்லைப் பெரியாறு, மீனவர்கள், ஈழம்! இந்த
நான்கு பிரச்னையும் தீர்ந்துவிட்டால் சீமானும் தீர்ந்துவிடுவார்.
`நாம் தமிழர்’ கட்சியின் பொறுமையான வளர்ச்சி,
எதிர்பார்த்ததுதான்... ஆனால், எதிர்பாரா திசையில் நடக்கிறது. அதை ஆரம்பத்திலேயே
சுட்டிக்காட்ட வேண்டும் என்ற அக்கறையுடன்தான் இந்தக் கட்டுரை. எனவே, கட்டுரை முழுமையும்
பொறுமையாகப் படித்துவிட்டு விவாதிக்கத் தொடங்குங்கள், தமிழ்ப் பிள்ளைகளே!
`அடக்க முடியாத கோபத்தினை உன் ஆழ்மனதினுள் தேக்கி வை. ஒரு காலம் வரும்.
அப்போது ஒருவனையும் விடாதே. மொத்தமாய்க் கருவறு!’ - அடால்ப் ஹிட்லர்
இந்தப் பொன்மொழியைச் சமூக வலைதளத்தில் பதிவேற்றி இருக்கிறார், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி.
அவர் பெயரெல்லாம் அநாவசியம். ஏனென்றால், நாம் தமிழர் கட்சியில் இருக்கும் எல்லோரும்
சீமானின் வடிவங்களே! எல்லோரும் ஒரே முகம் காட்டுவார்கள், ஒரே குரலில் ஒலிப்பார்கள்,
ஒரே விளைவை கொண்டுவருவார்கள். இப்படியிருக்க, தனியாக ஒருவரை மட்டும் அடையாளப்படுத்திப்
பேசுவதால் என்ன ஆகிவிடப்போகிறது?
சமூக வலைதளத்தில் மட்டுமே தாக்கம்
செலுத்திவந்தவர்கள், சமீபகாலமாகச் சமூகத்திலும் தாக்கம் ஏற்படுத்துகிறார்கள். தமிழகத்தின்
கடைக்கோடி கிராமங்களிலும் நாம் தமிழருக்குத் தட்டிகள் காணப்படுகின்றன. அவர்கள்
வளர்கிறார்கள். அவர்களின் சித்தாந்தம் வேரூன்றி வருகிறது. அவர்களின் அரசியல் கிளைவிட்டுக்
கொண்டிருக்கிறது.
ஆண்ட, ஆளும் கட்சிகளின்மீது
ஆற்றாமையும் ஆத்திரமும் கொண்டிருக்கும் ஒரு கூட்டம், அவர்களின் பின்னால் திரள்கிறது. அவர்கள் தலைவனின் ஆவேசப்பேச்சுகள்
அதற்கான வழிகளை மேலும் எளிதாக்கிக் கொடுக்கிறது. வளசரவாக்கத்தில் வசிக்கும் ஓர் இளைஞன்,
`அண்ணனின் பேச்சுதான் எனக்குக் காலைவேளை சுப்ரபாதம்’ என்கிறான். அருகிலிருப்பவன், `அண்ணனின் பேச்சுதான் எனக்கு
இரவுநேர தாலாட்டு’ என்கிறான். ஆம், கண்ணுக்குத்
தெரியும் தொலைவுக்கு வந்துவிட்டார்கள், ஒரு முரட்டுச் சித்தாந்தத்தோடு. இனியும், அவர்களை
மையத்துக்கு அழைத்துவந்து விவாதிக்காமலோ,
விமர்சிக்காமலோ கடந்துசெல்வது அறப்பிழை ஆகிவிடும். அறியாமையும் ஆவேசமும் மட்டுமே கொண்ட
ஒரு மேய்ப்பனுக்குப் பின்னால், `ம்மே’வெனக் கத்திக்கொண்டு செல்லும் ஆட்டுக்குட்டிகளைக் கருத்தில் கொண்டேனும், எதிர்க்குரல் எழுப்பவேண்டியுள்ளது.
சீமான் எவர், எப்படிப்பட்டவர்,
எத்தகைய பின்புலம்கொண்டவர் என்ற ஆராய்ச்சியும் அநாவசியம். `அடையாள அரசியல்’ என்ற ஒன்றை
மட்டுமே படைக்கலமென ஏந்தி களத்துக்கு வந்திருக்கிறார். ஒருவகையில், சீமான் `குட்டி மோடி'. சந்தேகமா? மோடிக்கு மதம்.
சீமானுக்கு இனம். மோடிக்கு பாகிஸ்தான். சீமானுக்கு கர்நாடகம். மோடிக்கு அத்வானி. சீமானுக்கு
பாரதிராஜா. மோடிக்கு மோகன் பகவத். சீமானுக்கு மணியரசன். மோடிக்கு ராஜாக்கள். சீமானுக்கு
கார்த்திகள். மோடி, சீமான் இருவருமே `கண்மூடித்தன கனவுகளும், இல்லாத இலக்குகளும்' கொண்டவர்கள்.
உசுப்பேத்தி உயர்வதையே உயரிய நோக்காகக் கொண்டவர்கள்.
நாம் தமிழர் கட்சியைக் `காலத்தின்
கட்டாயம்’ என்கிறார்கள், சிலர். ஆம், இதுநாள்வரை இங்கே ஆதிக்கம் செலுத்திவரும் அரசியல்
கட்சிகளுக்கு, ஒரு மாற்று தேவைப்படுகிறது என்பது உண்மையே. இப்போது எழுந்துவரும் ஒரு
தலைமுறை புதிதாக ஒரு சக்தியை எதிர்நோக்குகிறார்கள் என்பதும்கூட உண்மையே. ஆனால், அதற்காகச்
சர்வாதிகாரத்தையும் வெற்றுப்பீற்றலையும் சாதிப்பற்றையும் மட்டுமே அச்சாகக் கொண்டு சுழல்பவர்களை
`மாற்று’ என்று எப்படி ஏற்பது?
`நாம் தமிழர் அவசியமான தமிழ்ச்
சீர்திருத்த அமைப்பு’ என்றும் சொல்கிறார்கள், சிலர். இதையும் ஏற்க முடியாது. தமிழ்மீது
அளவற்ற பற்றுக்கொண்டவர்களாகக் காட்டிக்கொள்ளும் நாம் தமிழர்கள், இதுவரை தமிழுக்காகச்
செய்த அளப்பரிய பணிகள் எத்தனை? அவர்களின் வேகமும் செயல்திறனும், தமிழ் வளர்ச்சியிலும்
பண்பாட்டு மீட்பிலும் கொஞ்சமேனும் இருந்திருந்தால், நாம் தமிழரைச் சீர்திருத்த அமைப்பாக
ஏற்கலாம். ஆனால், இவர்களின் தமிழ்ப் பற்றெல்லாம் மேடையோடு இறங்கிவிடுகிறதே! பண்பாட்டு
மீட்பும், `முப்பாட்டன் முருகன்’ என்பதோடு முடிந்துவிடுகிறதே! அதிலும், மாற்றுத்தரப்பை
வசைபாடுவதற்கும், இளைஞர்களின் இதயங்களில் வெறியுணர்ச்சியை வளர்ப்பதற்குமே, அந்தத் தமிழ்ப்பற்று
பயன்படுகிறது. இவர்களுக்கு, `தமிழ்ப்பற்று’
ஓர் அரசியல் முகமூடி. அவ்வளவுதான்! ஆக, நாம் தமிழரைச் சீர்திருத்த அமைப்பு என்று சொல்வது,
அண்ணனின் ஆமைக்கறி, அரிசிக்கப்பலைவிடப் பெரிய நகைச்சுவை ஆகும்.
திராவிடச் சித்தாந்தம் பேசினாலும்,
`தமிழ்நாடு தமிழருக்கே’ என்று முழங்கினார் பெரியார். கொள்கை முழக்கமாக அல்ல, அரசியல்
முழக்கமாகவே அதை முன்வைத்தார். ஆனால், நாம் தமிழர்கள் அந்த நிலைப்பாட்டைக்கூட எடுப்பதற்கு,
அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எப்படித் தமிழினத்தை
விடுவிப்பார்கள்? அதுவும் இல்லாமல், எப்போது `மாநிலத்தில் தன்னாட்சி, மத்தியில் கூட்டாட்சி'
எனச் சொன்னார்களோ, அப்போதே `திராவிட இயக்கங்களின் நீட்சிதான் நாங்களும்’ என்று காட்டிவிட்டார்கள்.
அதையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமா கேட்டார், `மாநிலச் சுயாட்சிக்குத்தான்
ஏற்கெனவே இங்கொரு கட்சி இருக்கிறதே. நீங்கள் எதற்கு?’ என்று.
ஆயிரம் இருந்தாலும், திராவிட
இயக்கங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, அத்தனை சமூக மாற்றங்களைச் செய்தன. இவர்களிடம், இப்போதுவரை வெறும் காத்து மட்டும்தான் வருகிறது!
நாம் தமிழர் கட்சியின் பிரதான பிரச்னையே, சீமான்தான்! ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாடு கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட்
அணியுடன் மோத விடுவாராம். ஆட்சிக்கு வந்தால், தனி நீதிமேலாண்மை செய்வாராம். காக்கிச்சட்டையைக்
கழட்டிவிட்டு, நீலச்சட்டை கொடுத்துவிட்டால் குற்றங்கள் குறைந்துவிடுமாம். இதெல்லாம்
கம்மி. மற்றதை எல்லாம் கேட்டால் இன்னும் சிரிப்பு வரும்.
தன்னை `அடுத்த பிரபாகரன்’ என்று
அறிவித்துக்கொள்வதிலும், அவருக்கு அலாதிப்பிரியம். அவர் அறிய வேண்டியது ஒன்றுண்டு.
ஒரு சூரியன்... ஒரு சந்திரன்... ஒரே ஒரு பிரபாகரன்தான்! பிரபாகரன் `தனிநாடு' கேட்டார்.
விடுதலை வேட்கை சூடினார்; படை உருவாக்கினார்; போர்க்களம்
கண்டார். இலங்கை அரசின் அங்கமாக இருக்க முயன்றவரில்லை, அவர். அதாவது, ஒருசில மாகாணங்களுக்கு
மட்டும் முதலமைச்சராக முயலவில்லை, அவர். ஆனால், அண்ணன் இங்கே முதலமைச்சர் வேட்பாளராகவே
களமிறங்குவாராம். புலம்பெயர் தமிழர்கள் தரப்பில், `புலிகளின் தொடர்ச்சியாக இருக்க நீங்கள்
புலிகளாக இருக்கவேண்டும்’ என்ற குரல்கள் கேட்கின்றன. அண்ணன் அதற்கு என்ன சொல்லப்போகிறார்
என்பதைக் கேட்க ஆவலாக இருக்கிறது.
இன்னொருவரின் அடையாளத்தை அபகரிப்பது,
கயமைத்தனம். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வேடம் போட்ட அவரின் உடன்பிறவா சகோதரியான
சசிகலாவுக்கும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வேடம் போடும் சீமானுக்கும் பெரிய
வித்தியாசமில்லை.
சீமானுக்கு உண்மையிலேயே சமூக மாற்றத்தின் மீது விருப்பம் இருந்தால், தமிழகத்தின் சாதிநிலை பற்றிப்
பேசவேண்டும். சும்மா, `எல்லோரும் தமிழர்கள்' என்று ஜல்லியடிக்கவோ, ஜகா வாங்கவோ கூடாது.
முதலில், தமிழனைத் தமிழன் சுரண்டுவதை
நிறுத்தட்டும், சீமான். தமிழனைத் தமிழன் தாக்குவதைத் தடுக்கட்டும், சீமான். தமிழன் என்பதற்காகவே அடாவடி கந்துவட்டி ஆசாமியை
ஆதரித்த சீமான், தமிழன் என்பதற்காக எவ்வளவு கொடியவனையும் ஆதரிக்கமாட்டார் என்பதற்கு
என்ன நிச்சயம்? ஏன்... தமிழன் தப்புப் பண்ணவே மாட்டானா? தமிழனைத் தமிழனே ஒடுக்குவதுதான்,
இங்கே பெரிய பிரச்னையே!
அப்புறம், அந்த `அன்பான சர்வாதிகாரம்’!
மதுவில் நல்ல மது கெட்ட மது உண்டா? வன்புணர்வில் நல்லதென்றும் கெட்டதென்றும் உண்டா?
அப்புறம் எப்படிச் சர்வாதிகாரத்தில் மட்டும் அன்பான சர்வதிகாரம்... அன்பற்ற சர்வாதிகாரம்
இருக்க முடியும்? சர்வாதிகாரம் என்றாலே அன்பற்றதுதான், அழிவை நோக்கியதுதான்!
`எதுவும் சரியில்லை, அனைத்தையும்
மாற்ற வேண்டும்' எனக் கிளம்புபவனின் நோக்கமும், பாதையும் இங்கு நிச்சயம் ஆராயப்பட வேண்டும். காரணம், சர்வாதிகாரிகளின் வரலாறு அப்படி. சர்வநாசம் என்பதே
சர்வாதிகாரிகள் அளிக்கும் விளைவு. அதுவும் சீமானுக்கு, தன்னைச் சர்வாதிகாரி என அறிவித்துக்கொள்வதில்
எந்தத் தயக்கமும் இல்லை. இது, இன்னும் ஆபத்து! `நான் சர்வாதிகாரிதான். நேர்மையாளன்
சர்வாதிகாரியாகத்தான் இருப்பான்’ என்று பேசுகிறார். மறைந்த தலைவர்களான தேசப் பிதா காந்தி
சர்வாதிகாரியா, பண்டிட் ஜவஹர்லால் நேரு சர்வாதிகாரியா, இல்லை, லோக் நாயக் ஜெயப்பிரகாஷ்
நாராயணன்தான் சர்வாதிகாரியா? என்ன பிதற்றல் இதெல்லாம்?! நாட்டை நல்வழியில் செலுத்தத் தேவையான கொள்கை 'நவீன ஜனநாயகம்'
என்பதே. அத்தனை முன்னோர் இன்னுயிர் ஈந்தளித்த 'ஜனநாயகத்தை' இழப்போமானால், அழிவை வம்படியாக
வரவேற்கிறோம் என்றே அர்த்தம்.
சீமானைச் சில கேள்விகள் மூலம்
தர்க்கமாக அடிக்கும் நபர்களை, கண்டபடி திட்டித் தீர்க்கிறார்கள். உடனே, `தமிழனல்ல'
எனும் பிரசாரத்தை ஆரம்பிக்கிறார்கள். தம்பிகளே... உங்களுக்கு ஒரு கேள்வி... கருத்தைக்
கருத்தால் எதிர்கொள்ள முடியாதவன் தலைவனா?!
சரி, எவர் தமிழர், எவர் வந்தேறி?
எதைவைத்து அதை அறிந்துகொள்வது என்று எவரும் குழம்ப வேண்டாம். அதாவது, நாம் தமிழர் கட்சிக்காரர்கள்
மட்டுமே தமிழர்கள். மற்றவர்களெல்லாம் வந்தேறி! இனிமேல் யாராவது, `நான் தமிழன்' என்பதை
நிரூபிக்க வேண்டுமானால், `நாம் தமிழர்' கட்சியில் சேர வேண்டும். அண்ணனும் போனால் போகிறதென்று
`தமிழன்' எனும் அந்தஸ்தை அருள்வார்! இதெல்லாம் அந்த முப்பாட்டன் முருகனுக்கே அடுக்காது!
எப்போதோ ஓர் இளைஞன் எழுதியிருந்தான்,
`வேண்டுமானால் பாருங்கள், சீமான் எதிர்காலத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர்
வேல்முருகனையும் தமிழனல்ல என்பார். இயக்குநர் அமீரையும் வந்தேறி என்பார்’ என்று. இதோ,
சரியாக `சாப்பிடும்’ இடத்திற்கு வந்து சேர்ந்துவிட்டார்கள். இயக்குநர் சமுத்திரக்கனியைத் தமிழனல்ல
என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். நாளை வேல்முருகனாக இருக்கலாம், நாளை மறுநாள் அது
அமீராக இருக்கலாம். என்றாவது ஒருநாள், தம்பிகள் அண்ணனையே `தமிழனல்ல’ என்று முத்திரை
குத்தப்போகிறார்கள். `என் வினையே என்னைச் சுட்டது’ என்று, `புஹாஹாஹா’ சிரிப்புடன் புலம்பப்போகிறார்.
`ஐ.பி.எல். போராட்டம்’ நினைவிருக்கிறதா?
அப்போது ஒரு முக்கிய வாக்கியம் உச்சரிக்கப்பட்டது. அதாவது, `உள்ளே போனவனெல்லாம் தமிழனல்ல'
என்ற குரல் எழுந்தது. இது, ஒரு சோறுதான். இவர்கள் அதிகாரம் அடைந்தால், இன்னும் அண்டா
அண்டாவாக அதுபோன்ற சோற்றைக் கொட்டுவார்கள். கேட்டால், `சோழன் ஆட்சியில் இப்படித்தான்
நடந்தது உறவே’ என்று சமாளிப்பார்கள். ஆண்ட பரம்பரை பெருமை பீற்றித் திரியும் ஒரு
கூட்டம், அதையும் நம்பிக்கொண்டு தலைகொடுக்கத் தயாராகும். ஆமாம், அதென்ன தியரி?
‘இதைச் செய்தால்தான் தமிழன்... அதைச் செய்தால்தான் தமிழன்...' என்று. தமிழனெனும் உணர்வு
ஒவ்வொரு தமிழனுக்கும் தாய்ப்பாலுடன் கலந்தே ஊட்டப்பட்டது. அந்த உணர்வை, `நிரூபி...
நிரூபி...' என்று கட்டளையிட, இவர்கள் யார்? அனைத்துக்கும் மேலே, தன்னைத் தமிழனாக/தமிழச்சியாக
உணரும் எவரும் தமிழரே. அப்படி உணர்பவரை `தமிழரல்ல' என்பது, மிகப்பெரிய வன்முறை.
ஒரு கூட்டத்தில் சீமான் பேசுகிறார்.
`இந்த மண் எனக்குச் சிக்கினால், செத்தீர்கள்’ என்கிறார். இப்படி, தலைவனே `செத்தீர்கள்’
என்று பேசுவதால்தான், தலைவனைப் பின்பற்றுபவர்கள் `கருவறுப்போம்’ என்று பேசித் திரிகிறார்கள்.
`சத்தமாகப் பேசுபவன் எல்லாம் சரியாகப் பேசுவான்’ என்ற மாயையிலிருந்து விடுபடும்வரை,
இதற்கு விடிவில்லை.
சற்றே கவனித்தால் தெரியும்.
சீமான் நான்கு விவகாரங்களைவைத்தே எப்போதும் முன்னே வருகிறார். காவிரி, முல்லைப் பெரியாறு,
மீனவர்கள், ஈழம்! இந்த நான்கு பிரச்னையும் தீர்ந்துவிட்டால் சீமானும் தீர்ந்துவிடுவார்.
ஆக, சீமான் தீர விடமாட்டார். அவையெல்லாம் எவ்வளவுக்கு எவ்வளவு தீவிரமாகிறதோ, அவ்வளவுக்கு
அவ்வளவு சீமானுக்கு நல்லது. ஆகவே அறிய வேண்டும்... சீமான் தீவிரத்தை விரும்புகிறாரே
ஒழிய, தீர்வை அல்ல!
முடிக்கும் முன், நறுக்கென்றும்
நச்சென்றும் நாலு வரிகள், அன்புத் தம்பிகளான `நாம் தமிழர்களுக்கு’! அன்புகொள்ளுங்கள்.
அரசியல் பழகுங்கள். மாற்றுத்தரப்பை மதியுங்கள். மக்களாட்சியின் மகத்துவத்தை மனதில்
நிறுத்துங்கள்.
டாட்!
`நாம்
நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே!’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்
https://m.facebook.com/story.php?story_fbid=285793732308877&id=100026347567020
https://www.vikatan.com/news/tamilnadu/157630-a-humble-request-to-seeman.html?fbclid=IwAR1KbHM8akhio71Db05WGHlvSfYd4JRJQxRjYlf1L5ILFg-2SGI3V468ikk
https://www.vikatan.com/news/tamilnadu/157630-a-humble-request-to-seeman.html?fbclid=IwAR1KbHM8akhio71Db05WGHlvSfYd4JRJQxRjYlf1L5ILFg-2SGI3V468ikk
No comments:
Post a Comment