Saturday 24 March 2018


மஹிந்த ராஜபக்‌ஷ பதவி இறக்கப்பட்டாரா? அல்லது
தோற்கடிக்கப்பட்டாரா?

         2005ஆம் ஆண்டிலிருந்து 2015 ஜனவரி வரையான பத்து வருடங்களாக இலங்கையின் முடிசூடாமன்னனாக அதிகாரம் செலுத்திவந்த மஹிந்த ராஜாபக்‌ஷ அவரது பதவியில் இருந்து இறக்கப்பட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் அரசியல் ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டாரா இல்லையா என்பது வெறுங்கண்ணுக்குப் புலப் படாததொன்றாகும். பிரபல்யமான தலைவர்களின் பதவி நீக்கம் அல்லது மரணம் என்பது அவரின் அரசியல் தோல்வியாகத்தான் இருக்கும் என்ற முன் அனுமானமும், இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் காலத்துக்குகாலம் ஏற்பட்டுவரும் ஆட்சி மாற்றங்கள் அனைத்துமே பெரும்பான்மையான மக்களின் புத்திபூர்வமான வாக்களிப்பின் மூலமாகத்தான் நடைபெறுகின்றன என்ற “தெய்வீக” நம்பிக்கையுமே எமது பொதுப்புத்தியாக இருப்பதனால் பதவி இறக்கங்களையும், மரணத்தையும் இட்டு மேலோட்டமாகப் பார்ப்பதுடன் நிறுத்திக் கொள்கிறோம். இவ்விதமான பார்வை தவறு என்பதைப் புரியவைக்க இலங்கையிலும் இந்தியாவிலும் நடந்த சில நிகழ்வுகளை எடுத்துக்கொள்வோம்.

        + 1946இல் இருந்தே ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஐக்கிய தேசிய கட்சி(ஐ.தே.க) பெருமளவு வாக்குவித்தியாசத்தில் இடதுசாரிகளின் கூட்டு முயற்ச்சியால் உருவான மக்கள் ஐக்கிய முன்னணியால் (M.E.P) பதவி இறக்கப்பட்டது. ஐ.தே.க வை சவப்பெட்டிக்குள் வைத்து பெட்டியின் மூடியின்மேல் பலமான ஆணிகளும் அடிக்கப்பட்டுவிட்டன என இடதுசாரித் தலைவர் ஒருவர் முழங்கினார். முழு நாடுமே அவ்விதந்தான் கருதியிருந்தது. ஆனால் ஐ.தே.க மீண்டும் ஆட்சிபீடம் ஏறியது.
  
           + றத்வத்த கிளானின்(clan) ஆட்சிக்குட்பட்ட கட்சியான -குடும்பக் கட்சி எனக் கூறப்படுகிறது, அவ்வார்த்தையைப் பயன்படுத்த விரும்பவில்லை- ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் S,W.R.D.பண்டாரநாயக்கா சுட்டுக்கொல்லப்பட்டார். அவரைச் சுட்டுக்கொன்றதால் அக்கட்சி அழிந்துவிடவில்லை. அவரின் மனைவி ஸ்ரீ மாவோவின் தலைமையில் அக்கட்சி மீண்டும் ஆட்சிக்குவந்தது. 1970-1977 வரையான இவரின் ஆட்சிக்காலத்தின் போதுதான் பௌத்தமதம் அரசமதமானது. இவரின் கணவரின் ஆட்சியின் போதுதான் 1956இல் தனிச்சிங்கள மசோதா அமுலுக்கு வந்தது என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிடவேண்டும். 1978இல் மீண்டும் ஆட்சிக்குவந்த யு.என்.பி 1980ஆம் ஆண்டு, அதிகார துஷ்பிரயோகம் செய்தாரெனக் குற்றம் சாட்டி ஸ்ரீ மாவோவின் குடியுரிமையை 7வருடகாலத்துக்கு பறித்தது. வாக்களிக்கும் உரிமையும் இல்லாது செய்யப்பட்டது. றத்வத்தை கிளானை அரசியல் அதிகாரத்தில் இருந்து இறக்குவதற்க்கு யு.என்.பி எடுத்த முயற்ச்சி வெற்றிபெற்றதா? றத்வத்தை கிளானின் மூன்றாம் தலைமுறை வாரிசான சமாதானத்துக்கான யுத்தப் புகழ் சந்திரிகா குமாரதுங்கா 1994இல் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியானார். இன்று றத்வத்த கிளானின் இவ்வாரிசு புதிதாக உருவான மஹிந்த கிளானுக்கு எதிராகப் போராடக் களம் இறங்கியுள்ளது. இனத்தூய்மைகெட்ட இன்றைய பிசாசின் கொடுமையைச் சுட்டிக்காட்டி தூய்மைமிக்க நேற்றைய பிசாசு, ஸ்ரீ.ல.சு கட்சியை மீண்டும் தனது ஆதிக்கதின் கீழ் கொணர முயல்கிறது. இதற்காகத் தனது தாயின் குடியுரிமையைப் பறித்த கட்சியுடனும் தனது கணவர் நடிகர் குமாரதுங்காவை சுட்டுக்கொன்ற ஜே.வி.பி யுடனும் முன்னணி அமைத்துள்ளது. (றத்வத்தை கிளான் மதம் மாறாதவர்கள், மஹிந்த கிளானோ கிறிஸ்துவ குடும்பப் பாரம்பரியம் உள்ளவர். அவரின் தந்தை பெயர் டொன் அல்விஸ் ராஜபக்‌ஷ.) மஹிந்தவின் தலைமையில் நேற்றுவரை செயல்பட்டுவந்த United People's Freedom Alliance(U.P.F.A) றணீல் விக்கிரமசிங்கவிற்கு எதிராக ஏப்ரல் 2004 தேர்தலின்போது சந்திரிகா குமாரதுங்கவினால் அமைக்கப்பட்ட ஐக்கியமுன்ணியாகும். அவ் ஐக்கிய முன்னணியில் ஜே.வி.பி_யும் அப்போது அங்கம்வகித்தது.

      + சந்திரிகா குமாரதுங்கா(பண்டாராநாயக்கா), ஜனாதிபதி முறையை ஒழிப்பேன் எனப் பிரச்சாரம் செய்து 1994-இல் ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றினார். அதே அதிகாரத்தைப் பயன்படுத்தி தனது இரண்டாவது பதவிகாலத்தின்போது 2004,பெப்ரவரியில்  ஐ.தே.க அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிய இன்னும் நான்கு வருடங்கள் இருக்கும் போதே அவ்வரசாங்கத்தைக் கலைத்தார், அதன் பிரதமராக இருந்த  றணில் விக்கிரமசிங்கவைப் பதவி இறக்கம் செய்தார், ஏப்ரல் 2004-இல் பாராளுமன்ற தேர்தலை நடத்தி மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமராக நியமித்தார். இன்றைய நிலைமை என்ன? அதே சந்திரிகாவின் ஆசிர்வாதத்துடன், மஹிந்தவை விழுத்த  மீண்டும் பிரதமராக்காப்பட்டுள்ளார் றணில் விக்கிரமசிங்கா.
      + 1971ஆம் ஆண்டு ஏப்ரல் கிளர்ச்சியை அடக்குவதற்காக மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையின்போது சுமார் 60,000 சிங்கள இளைஞர்களும், யுவதிகளும் கொன்றொழிக்கப்பட்டனர். தெரு நாய்களைப் போல சுட்டுத்தள்ளப்பட்டனர். இவர்கள் அனைவரும் இக்கிளர்ச்சியை வழிநடத்திய ஜனதா விமுக்தி பெரமுனை இயக்கத்தின் உறுப்பினர்களல்ல. அவ்வியக்கத்துக்கு இவ்வளவு பெரும் தொகையான உறுப்பினரும் அப்போது இருக்கவில்லை. சிங்கள இளைஞர்களும் யுவதிகளும் கண்டமேனிக்குச் சுடப்பட்டார்கள். இவ் இயக்கத்தின் தலைவரான றோஹன விஜவீராவும் மேலும் பலரும் கைது செய்யப்பட்டார்கள். கிளர்ச்சி அடக்கப்பட்டாலும், விஜயவீராவுக்கு 20 வருடச் சிறைத்தண்டனை கிடைத்தது. கட்சியும் தடைசெய்யப்பட்டது. இவ்வளவற்றையும் செய்தது ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியாகும். ஜே.வி.பி இயக்கம் அழித்தொழிக்கப்பட்டதாக ஸ்ரீ லங்கா அரசாங்கம் மார்தட்டிக்கொண்டது. 1977-இல் ஆட்சிக்குவந்த யு.என்.பி-யோ கட்சியின் மீதான தடையை நீக்கியது. விஜயவீராவும் விடுதலைசெய்யப்பட்டார். விஜயவீரா ஜே.வி.பி யின் வேட்பாளராக 1982 ஜனாதிபதித் தேர்தலில் பங்குபற்றினார். வெற்றிபெறவில்லை. ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து 1983 ஜூலை மாதம் நாடுபரந்த இனஒழிப்பு ஒன்று நடைபெற்றது. இவ் இனஒழிப்புக்கும் ஜே.வி.பிக்கும் தொடர்புள்ளதாகக் கூறி யு.என்.பி அரசாங்கம் இவ்வியக்கத்தை 1983-இல் மீண்டும் தடைசெய்தது. விஜயவீரா உட்பட அதன் தலைவர்கள் தலைமறைவாகினர். ஆனால் 1987இல் ஐ.தே.க யின் அழைப்பின் பேரில் இந்திய சமாதானப்படை இலங்கை வந்ததன் எதிர்விளைவாக ஜே.வி.பி மீண்டும் புத்துயிர் பெற்றது, தேச்பக்த விடுதலை இயக்கம் என்ற பெயரில் பூதாகரமாக வளர்ச்சி பெற்றது. இந்தியாவிற்க்கு ஆதரவான தலைவர்கள் வகைதொகையின்றி  கொன்றொழிக்கப்பட்டார்கள். 70க்கு மேற்ப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள். ஜனாதிபதியையும், பிரதமந்திரியையும் கொல்வதற்கான சதிக்கு தாமே பொறுப்பு என இவ்வியக்கம் உரிமை கோரியது.(அச்சதி வெற்றிபெறவில்லை) இவ்விதம் இருந்தும் 1971-ல் நடந்ததைப்போன்ற ஒரு கிளர்ச்சி நடந்துவிடக்கூடாது என்பதற்காக 1988-ல் தடை நீக்கப்பட்டது. ஜே.வி.பி இயக்கம் மீண்டும் வெளிப்படையான அரசியலுக்கு வந்தது. ஆனாலும் விஜவீரா சிறைபிடிக்கப்பட்டார். சிறையில் வைத்து விஜயவீர இரகசியமான முறையில் கொல்லப்பட்டார். ஒரு தொல்லை தீர்ந்தது என இலங்கையின் அரசியல் கட்சிகள் பெருமைப்பட்டுக் கொண்டன. இந்திய அரசு உள்ளூர மகிழ்ந்து கொண்டது. கொலை செய்யப்பட்ட விஜயவீரா அரசியல் ரீதியாக தோற்க்கவில்லை. ஜே.வி.பி இயக்கம் இன்னமும் அவரையே தனது ஸ்தாபகராக வைத்துப் போற்றிவருகிறது. ஆனால், இரு தடவை அழிக்கப்பட்ட ஜே.வி.பி இன்று சிங்களத் தேசியத்தின் பிரதான நான்கு அரசியல் முனைகளில் ஒன்றாக ஆகியுள்ளது. அரசனாக வரும் வாய்ப்புக்காக ஒருமுறை முயற்ச்சித்தது வெற்றிபெறவில்லை. அவ்வாய்ப்பு இன்னமும் கிடைக்கவில்லை. ஆனால் அரசன் யார் என்பதை தீர்மானிக்கும் நிலையில் உள்ளார்கள். 2004-ஆம் ஆண்டு, 36 எதிர்கட்சிகளையும்/குடியியல் அமைப்புகளையும் கொண்டு அவசர அவசரமாக அமைக்கப்பட்ட புதிய ஜனநாயக முன்னணி எனும் நெல்லிக்காய் மூட்டை சிதறும் போது அரசனாக வரும் சந்தர்ப்பம் ஜே.வி.பி-க்கு ஏற்ப்படலாம். சிதறுவது நிச்சயம் ஆனால் எப்போது என்பதுதான் தெரியவில்லை.
+ முப்படையின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜாபக்‌ஷவின் தலைமையின் கீழ் இராணுவத்தளபதியாக இருந்த சரத் பொன்சேகவை 2009-ஆம் ஆண்டு யுத்தம் முடிந்தபின் மஹிந்தவே பதவி நீக்கம் செய்தார், சிறையில் அடைத்தார், மானபங்கப் படுத்தினார். ஆனால், இன்றோ சரத் பொன்சேக புதிய ஜானாதிபதியின் இராணுவ ஆலோசகராகியுள்ளார்.

    + 1970-கள் வரை சிங்களத் தேசிய அரசியல் அரங்கம், மும்முனைகளாக திரண்டிருந்தது.  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி(ஸ்ரீ.சு.க), ஐ.தே.க, இடதுசாரிக் கட்சிகள் ஆகியனவே அம்முனைகளாகும். 1970-களின் பின்னர் ஸ்ரீ.சு.க சேர்ந்து உறவாடி இடதுசாரி முனையை முனைமழுங்கச் செய்தது. தனித்த முனையாகச் செயல்பட்டுவரும் ஆற்றலை இட்துசாரிகள் இழந்தனர். இன்றுவரை அவர்கள் இவ்விதமே உள்ளனர். 1970-களில் புதியதோர் மூன்றாவது முனை உருவானது. அதுதான் ஜனதா விமுக்தி பெரமுனை(ஜே.வி.பி)யாகும். மஹிந்த, தான் அதிகாரத்துக்கு வந்த காலத்தில் இருந்து ஸ்ரீ.சு.க-யுடனும், ஜே.வி.பி-யுடனும்  கலந்துறவாடி அவற்றை பலவீனப்படுத்துவதில் ஈடுபட்டுவந்துள்ளார். அதில் அவர் கணிசமானளவு வெற்றியும் பெற்றுள்ளார். ஸ்ரீ.சு.க-யை முடக்கிவைப்பதில் அல்லது அதை பணயக்கைதியாக வைத்திருப்பதில் வெற்றிபெற்றிருந்தாலும் அக்கட்சியை தனது தலைமையின் கீழ் கொண்டுவருவதில் அவரால் வெற்றிபெறமுடியவில்லை. தனது தலைமையில் நான்காவது அணியை உருவாக்கியிருந்தாலும், மஹிந்த கிளானின் கட்சியாக உருவாக்குவதில் இன்றுவரை வெற்றிபெறவில்லை. இதற்காகத்தான் அவர் தனது குடும்ப அங்கத்தவர்களின் 70 பேரை அதிகாரத்துக்குக் கொணர்ந்தாரோ தெரியாது. மஹிந்தவின் தலைமையின் கீழிருந்த அப் பணயக்கைதிக் கட்சியின்(ஸ்ரீ.சு.க) செயலர்தான் மைத்திரிபால ஸ்ரீசேனாவாகும். சுதந்திரமற்றிருந்தவர் ஒரு ஜனநாயகச் சதிமூலம் இன்று ஜனாதிபதியாகியுள்ளார். மஹிந்தவின் கட்டுப்பாட்டில் இருந்து ஸ்ரீ.சு.க-யை மீட்டெடுத்து. சந்திரிகாவின் கைகளில் ஒப்படைத்துள்ளார். கொத்தடிமைச் செயலாளராக இருந்தவர் இப்போது ஸ்ரீ.சு.க, யு.என்.பி ஆகிய இரு எஜமான்களின் கொத்தடிமை ஜனாதிபதியாகியுள்ளார்.
தனிநபர்க் கொலைகளூடாகவும், ஜனநாயகச் சதிகளூடாகவுமான பதவி பறிப்புகள்தான் சிங்களத் தேசியத்தின் ஆளும் கட்சிகளின் அரசியல் வரலாற்றின் பிரதான போக்குகளாக இருந்து வருவதைக் காணலாம். பௌத்த சிங்கள மரபுகளில் இதுவும் ஒன்று போலும். வாக்குகள்தான் அரசியல் அதிகாரத்தைத் தீர்மானிக்கின்றன என்பது வெறும் கண்துடைப்பாகவே உள்ளன.

தமிழ்த் தேசிய அரசியல் உதாரணங்கள்

+ 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இராணுவம் சிதைக்கப்பட்டது. பல ஆயிரக்கணக்கான இயக்க உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டார்கள். அதன் தலைவர்களில் பிரதானமானவர்கள் கொல்லவும்பட்டார்கள், அதில் பிரபாகரனும் ஒருவர் என்று கூறப்பட்டது. இயக்க உறுப்பினர்களுடன் சேர்த்து பல பத்தாயிரக் கணக்கான தமிழர்களும் கொல்லப்பட்டனர். மஹிந்தவின் அரசியல் தலைமையிலும், அமெரிக்க குடிமகனான அவரின் தம்பி கோதபய இராஜபக்‌ஷவினது இராணுவத் தலைமையிலும் மேற்கொள்ளப்பட்ட இந் நடவடிக்கைகளுக்காக அனைத்துதரப்பு சிங்கள-பௌத்த பேரினவாதிகளும் மஹிந்தவைப் பாராட்டினார்கள். இவ்வளவு துணிகரமாகவும், வெளிப்படையாகவும், காட்டுமிராண்டித்தனமாகவும், எந்த வல்லரசுகளினதும் ஆதிக்கத்திற்குக் கட்டுப்படாமலும் புலிகள் இயக்கத்தை அழித்தமைக்காகவும், அதனுடன் கூடவே இனஒழிப்பை நடத்தியமைக்காகவும் ஆசியநாடுகளின் அரசுகள் அனைத்தும் மஹிந்தவைப் பாராட்டின. அவரின் துணிச்சலை மெச்சிப் புகழ்ந்தன. மூன்றாம் உலகநாடுகளில் உள்ள தேசிய இயக்கங்களை அடக்கி ஒடுக்குவதில் அவர் ஒரு முன் உதாரணி என அவரைப் பாராட்டின. ஆனால் தமிழ்த் தேசிய இயக்கங்கள் இல்லாமல் போய்விடவும் இல்லை, தமிழர்கள் ஓய்ந்துபோய்விடவும் இல்லை, என்பது சொல்லித்தான் தெரியவேண்டுமா?

 + தமிழீழ அரசியல் அரங்கம் 1940-களின் பிற்கூறுகளில் இருந்து இரு முனைகளாகப் பிரிந்திருந்தது, ஒன்று தமிழ் காங்கிரஸ், மற்றையது தமிழரசுக்கட்சி. 1970-களின் பிற்கூறுகளில் இருந்து இது தனியொரு முனைத் திரட்சியாக மாற்றம் பெற்றது. அதுதான், தேசிய சரணடைவுப் போக்கைப் பின்பற்றிய தமிழர் விடுதலைக் கூட்டணியாகும். 1980-களின் முற்கூறுகளில் தமிழீழ அரசியல் அரங்கில் இரண்டாவது முனை ஒன்று திரட்சி கொள்ள ஆரம்பித்தது. அதுதான் போர்குணமிக்க தமிழ்த் தேசிய இயக்கங்களின் முனையாகும். இவ்வணியின் தோற்றத்தின் பின் உருவான அரசியல் நிலமைகளின் காரணத்தால் முதலாவது அணி(தேசிய சரணடைவு அணி), தனது அரசியல் அடித்தளத்தை இழக்கின்றது. கடவுளைத்தவிர வேறு எவரையும் நம்புவதற்கு முடியாத நிலைக்குள்ளான இவ்வணி ஆர்ப்பாட்டம் எதுவுமின்றி தன்னைத்தானே பதவிநீக்கம் செய்து கொள்கிறது. சில இயக்கங்கள் செத்தபாம்பை அடிப்பதுபோல் பதவிவிலகிக்கொண்ட இத்தலைவர்களில் சிலருக்கு மரணதண்டனை கொடுத்து தம்மை அரசியல் ஹிரோக்கள் ஆக்கிக்கொண்டனர். ஆனால் இன்று தம்மைத்தாமே பதவிநீக்கம் செய்து கொண்டு கலைந்துபோன அவ் அணி தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரில் மீண்டும் வளர்ந்து வருவதை மறுக்க முடியுமா?

     தனிநபர்களையோ, அல்லது அரசியல் கட்சிகளையோ பதவி நீக்கம் செய்வதால் மட்டும் அவற்றை அரசியல் ரீதியாக தோற்கடிப்பதாக ஆகிவிடமாட்டாது. சில வேளைகளில் அவ்விதம் தோற்கடிக்கப்பட்டாலும் அது தற்காலிகத் தோல்வியாகத்தான் இருக்குமே தவிர நிரந்தரத் தோல்வியாக ஆகிவிடமாட்டாது. இக் கூற்றை நிரூபிக்க மேற்சொன்ன உதாரண நிகழ்வுகள் போதுமானதவை, இருந்தாலும் மிக முக்கியத்துவமிக்க சில இந்திய உதாரணங்களையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இடதுசாரிகள் மட்டும் இன்னமும் தமது தோல்வியில் இருந்து மீளவில்லை. இதனால் இக்கூற்று தப்பாகிவிடவில்லை. இலங்கையின் தேசியமானது பிற்போக்குத் தேசியமாக இருப்பதுவே அதற்கான சமூகக் காரணமாகும்.

அகில இந்திய உதாரணங்கள்

     +1910இன் பிற்கூறுகளில் இருந்து 1940களின் முற்கூறுவரை, லோகமானியத் திலகர், அரவிந்த கோஷ், விபின் சந்திரபால், சவாக்கர், ஆகியோரின் தலைமையில், மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டுவந்த இந்தியத் தேசிய விடுதலை இயக்கம், இந்துத்துவ பண்பாட்டுத் தேசிய இயக்கமாகவே இருந்தது. இந்து ப(f)னாரிஸத்தின்(fanatism) மூலக்கூறுகளை உள்ளூரக் கொண்டதாக இருந்தது. பசு பாதுகாப்பு இயக்கம், சுவாமி தயானந்த சரஸ்வதியின் தலைமையில் நடைபெற்ற ‘சுத்தி’ இயக்கம் போன்ற இயக்கங்களுடன் நெருங்கிய நட்புறவைப் பேணிவந்தனர். (இன்று நடைபெறும் தாய்மதம் திரும்பல் இயக்கத்தின் அன்றைய பெயர்தான் சுத்தி இயக்கமாகும்.) இதன் தமிழ் நாட்டுத் பிரபல்ய(popular) தலைவர்களாக இருந்த வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய பாரதி, சுப்ரமணிய சிவா ஆகியோரும், பிரபல்யம் அடையாவிட்டாலும் அத்திவாரக் கற்களாக இருந்த மண்டையம் சகோதரர்களும் இந்துத்துவ பண்பாட்டுத் தேசியதுடன் முழுமையற்ற இணைவைக் கொண்டவர்களாகவே இருந்தார்கள். தமிழ் நாட்டுத் தலைவர்கள் ப(f)னாரிஸத்தின்(fanaticism) மூலக்கூறுகள் அற்றவர்களாக இருந்ததே இதற்கான காரணமாகும். இக் கட்டத்தில்தான் லோகமானியத் திலகருக்கு எதிராக மோகன்லால் காந்தி இந்தியத் தேசிய அரசியல் களத்தில் கால்பதிக்கிறார். இது பிரித்தானியர்களின் ஆதரவுடன் நடந்த ஒரு நிகழ்வேயாகும். இவரும் ஒரு இந்து மதவாதிதான், ஆனால் மத ப(f)னாரிஸ்ட் (fanaticism) அல்ல, அதேவேளை மதசார்பின்மைக் கோட்பாடாளரும் அல்ல. இருந்தும், மதவாதிக ளுக்கிடையே ஒரு சமரசப்போக்கைக் கைக்கொள்ள வேண்டும் என்பதில் தீவிர ஈடுபாடுடையவராக இருந்தார். இது அவருடைய வளர்திசைச் சிந்தனைப்போக்காகும். அத்துடன் சேர்த்து சாத்வீகப் போராட்டக் காரராகவும் இருந்தார். இது அவருடைய் வளர்தடைச் சிந்தனைப்போக்காகும். இவ்விரண்டு சிந்தனைப் போக்கிலும் இவர் திலகருக்கும், திலகரால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட இந்திய தேசிய விடுதலை இயக்கத்துக்கும் நேரெதிரானவராக இருந்தார். இந்தியத் தேசிய அரசியலில் காந்தியின் மிக முனைப்பான  ஈடுபாட்டின் காரணத்தால் இந்திய தேசிய விடுதலை இயக்கம் இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கமாகச் சுருங்குகிறது. இது ஒரு வளர்தடை மாற்றமாகும், அடுத்த பக்கத்தில், மத ப(f)னாரிஸத்தில்(fanaticism) இருந்து இந்தியத் தேசிய இயக்கத்தை விடுவிக்கிறார். இது ஒரு வளர் திசைமாற்றமாகும். இவ்விதம் விடுவிக்கப்பட்டதால், இந்தியத் தேசிய இயக்கத்தில் ஒரு முற்போக்குப் பாய்ச்சல் ஏற்படுகின்றது. காந்தியின் தலைமை மதசார்பின்மைக் கோட்பாட்டாளர்களுக்கு சாதகமான ஒரு நிலையை காங்கிரஸினுள்ளும், இந்திய சமூகத்திலும் ஏற்படுத்துகிறது. காந்தி ஒரு மதசார்பின்மைக் கோட்பாட்டாளராக இல்லாதிருந்த போதும் ஜவர்லால் நேரு, இடதுசாரிகள், சோஸலிஸ்டுகள், சுபாஷ் சந்திரபோஷ், அம்பேத்கர் ஆகிய மதசார்பின்மைக் கோட்பாட்டாளர்கள் சுதந்திரமாகச் செயற்படும் ஒரு நிலை ஏற்படுகின்றது. அவர் அதைத் தடுக்கவில்லை, அல்லது அவரால் அதை தடுக்க முடியவில்லை. மத சார்பின்மைக் கோட்பாட்டாளர்கள் அரசியல் ரீதியிலும் பதவி ரீதியிலும் வெற்றிபெறுகிறார்கள். இதன் நேரெதிர் விளைவாக மறுபக்கத்தில் இந்துப் பண்பாட்டுத்தேசிய கோட்பாடுகள் இந்தியத் தேசிய அரங்கினில் செல்வாக்கு இழக்கத் தொடங்குகின்றன. அரசியல் அரங்கில் இவர்களுக்கு எந்த இடமும் இல்லாது செய்யப்படுகிறது. அவர்கள் அரசியல் அரங்கினில் பதவி இறக்கம் செய்யப்படுகிறார்கள். மத சார்பின்மை அணிக்கு காந்தி துணைபோனார் என்பதுதான் கோட்சேயின் கோபத்துக்கான காரணம் இதுதான்.

          பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்த இந்துப் பண்பாட்டுத்தேசியம், சுமார் 70வருடங்களின் பின்னர், இந்தியத் தேசிய அரசியல் அரங்கினில் மீண்டும் மேலாண்மை பெறும் நிலையும் , பதவியேற்றம் பெறும் நிலையும் தோன்றியுள்ளது. இழந்துவிட்ட தனது சமூக மேலாண்மை யை மீண்டும் நிலைநாட்டிக் கொள்வதர்காகவும், பெற்றுள்ள தனது பதவி ஏற்றத்தை தக்கவைத்துக் கொள்வதற்காகவும், காய்ந்தமாடு கம்பினில் விழுந்ததைப்போன்று இந்து ப(f)னாரிஸத்தை (fanaticism)யும், சதுர்வர்ண சாதியத்தையும், பூகோள எல்லைகளைக் கணக்கில்கொ ள்ளாத தேசியம் போன்ற அதன் சகோதர ப(f)னாரிஸங்க ளையும் (fanaticism) பிரயோகிக்கும் செயல்பாடு களில் இந்துப் பண்பாட்டுத் தேசியவாதிகள் மூர்க்கத்தனமாக ஈடுபடத் தொடங்கியுள்ளனர். கோட்சேயை தேசிய ஹீறோவாக்க முற்படுவதன் காரணம் இதுதான்.  

    + மா-ஓ சிந்தனையின்படி நடக்கும் இந்தியக் கம்யூனிஸ்டுகள் 1970-களில் நக்ஸல்பாரி எனும் கிராமத்தில் ஒரு விவசாயக்கிளர்ச்சியை நடத்தினர். அதன்மூலம் தமது அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்திக் கொண்டனர். இதே காலப்பகுதியில் இந்தியாவின் கிராமப்புறங்களில் கிராமிய வர்க்க எதிரிகளை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். பலர் கொல்லப்பட்டனர் மேற்குவங்கம், தமிழ்நாடு உட்பட்ட பல மாநில அரசாங்கங்களும், மத்திய அரசும் தனித்தும் கூட்டாகவும் இணைந்து அவ்வியக்கத்தை அழித்தொழித்தனர். அதன் தலைவர் சாரு மஜும்தாரையும் கொன்றனர். ஆனால் இன்றைய நிலையென்ன? நக்ஸல்பாரிகள் என அழைக்கப்படும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மா-ஓ சிந்தனை) சில மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் எதிரான ஒரு பெரும் ஆயுதப் படையை வைத்திருக்கும் நிலைக்கு வளர்ந்துள்ளதை மத்திய அரசே ஒத்துக்கொள்கிறது. சாருமஜும்தாரைத் தமது கட்சியின் தலைவராகப் போற்றிவருவதன் மூலம், அவர் கொல்லப்பட்டாலும் அவர் அரசியல் ரீதியாக இல்லாது போய்விடவில்லை என்பதை கூறாமல் கூறிவருகிறார்கள்.
தமிழ் நாட்டு உதாரணங்கள் 

    + நீதி மன்ற தீர்ப்பின் காரணத்தால் சமீபத்தில் பதவிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சமீபத்திய உதாரணமாகும். பதவி நீக்கம் செய்யப்பட்ட அவர் அரசியல் ரீதியாகத் தோற்கடிக்கப்படவில்லை. அவருக்கு எதிரான அரசியல் அணிகள் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவரை அரசியல்ரீதியாக தோற்கடிக்க முயன்று வருகிறார்கள். ஆனால், இப்பதவி நீக்கம் அவரை அரசியல்ரீதியில் பலப்படுத்தியுள்ளது என்றே தோன்றுகிறது.

 + பதவி பறிக்கப்பட்ட நிலையிலும், மீண்டும் பதவி கிடைக்காது என்ற நிலையிலும், அரசியல் ரீதியில் வெற்றிபெற்ற உதாரணங்களும் தமிழ் நாட்டில் உண்டு. இந்திய தேசிய காங்கிரஸில் மிகுந்த செல்வாக்குடனும், தமிழ் நாட்டு மக்களிடம் மிகுந்த புகழுடனும் வாழ்ந்த காம்ராஜரின் பதவியைப் பறிப்பதில் அண்ணாத்துரை தலைமையிலான தி.மு.க பெரும் வெற்றிகளைப் பெற்றது. அவ்வெற்றி இன்றுவரை பல இடர்பாடுகளிடையே தொடர்கிறது. மாநிலப் பதவிகளைக் கைப்பற்றுவதில் குறிப்பிடக்கூடிய வெற்றி எதையும் காங்கிரஸால் இன்றுவரை பெறமுடியவில்லை, அதனது முயற்ச்சிகள் தொடர்ந்தும் தோல்விகண்டேவருகின்றன. ஆனால் அரசியல்ரீதி யாகவோ தமிழ்நாட்டில் காங்கிரஸ் வெற்றிபெற்றே வருகின்றது, அவ்வெற்றியை தொடர்ந்து தக்கவைத்தும் வருகிறது. தமிழ்த் தேசியத்தை முன்வைத்து வெற்றிபெற்ற தமிழ்நாட்டின் முதல் தி.மு.க முதல்வர் அண்ணாத்துரை தேசிய ஜனநாயக மறுப்பு இந்தியத் தேசியத்திடம் சமரசம் செய்துகொண்டதுதான் காங்கிரஸின் வெற்றி யின் முதல்படியும் அடித்தளமுமாகும். தி.மு.க அன்றில் இருந்து இன்றுவரை தேசிய ஜனநாயகமறுப்பு இந்தியத் தேசியத்தின் தமிழ்நாட்டுக் கிளையாகவே செயல்பட்டுவருகின்றது. இது காங்கி ரசுக்கு ஒரு வெற்றிதானே.

படிப்பினைகள்      

இவ் உதாரணங்களில் இருந்து நாம் கற்றுக்கொள்வதென்ன? ஒரு அரசியல் போக்கொன்றின் தலைவராக அல்லது அப்போக்கின் முன்னோடிகளாக இருக்கும் ஒரு தனிநபரின் அல்லது ஒரு அரசியல் கட்சியின் பதவிப் பறிப்பு, பதவி இழப்பு அல்லது உயிர்இழப்பு என்பன அத்தனிநபரின் அல்லது அக்கட்சியின் அரசியல் தோல்வியாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அது ஒரு தோல்வியாக இருப்பதில்லை. அத்தனிநபர் அல்லது அக்கட்சி தன்னை புதுப்பித்து அல்லது புனரமைத்துக் கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக அமைவதுவும் உண்டு. சில வேளைகளில் அது ஒரு பின்னடைவாக இருக்கலாம் ஆனால் அது ஒரு தோல்வியாக இருக்கமுடியாது. அத் தனிநபர் எந்த அரசியல் போக்கின் பிரதிநிதியாக உள்ளாரோ, அவ் அரசியல் போக்கு தோற்கடிக்கப்படும் போதுதான் அத்தனிநபரும் தோற்பார். ஒரு அரசியல்போக்கு பின் தள்ளப்படும்போது அப் போக்கை முன்நிறுத்தும் தனிநபர் தனது நிலையில் இருந்து பின்தள்ளப்படுவார். இது தோல்வியல்ல, இது பின்னடைவு. அத் தனிநபர் முற்போக்குவாதியா பிற்போக்குவாதியா என்பது பிரச்சனையில்லை. இது எல்லோர்க்கும் பொருந்தும். அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும். பதிவியிழந்த தனிநபர் சிலவேளைகளில் தனது சொந்தப்பலவீனத்தின் காரணத்தால் பொதுவாழ்வில் இருந்து ஒதுங்கிவிடக்கூடும். ஆனால், அவரின் மார்க்கம் சமூகத்துக்கு அவசியமானதாய்இருந்தால் அது தொடரும் அல்லது மீண்டும் எழும். சமாதானத்துக்கான யுத்தத்தில் தோல்விகண்ட சந்திரிகா குமாரதுங்கா அரசியலைவிட்டே ஒதுங்கி, தனது கிளான் கட்சியையும் அம்போ என்று கைவிட்டு வேறு நாட்டுக்கே ஒடினார். அது அவரின் சொந்தப்பலவீனம். தனது கட்சியின் மார்க்கம்எடுபடக்கூடும் என்ற நிலைவந்தவுடன் மீண்டும்அரசியலுக்கு வரவில்லையா?

 இந்நிலைப்பாட்டில் இருந்துகொண்டே மஹிந்த தோற்கடிக்கப்பட்டாரா இல்லையா என்பது ஆராயப்படவேண்டும். அவ்விதமானால் மஹிந்தவின் உலகக்கண்ணோட்டம், சமூகசிந்தனை, அரசியல் சிந்தனை, நம்பிக்கைகள், சொந்த வாழ்க்கை நெறி ஆகியன (இவற்றை ஒட்டு மொத்தமாக அறநெறி என அழைப்போம்) என்ன என்பது அறியப்படவேண்டும். மஹிந்தவின் அறநெறி மட்டுமல்ல, சிறிசேன கூட்டணியின் அறநெறி, இத் தேர்தலின் போது சிங்களவர்களின் அறநெறி, தமிழ் பேசும் மக்களின் அறநெறி ஆகியன எவை என்பது பட்டியலிடப்படவேண்டும்; இலங்கை அரசியல் தொடர்பாக மேற்கு முகாம், இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் அறநெறி என்ன என்பதுவும் பட்டியலிடப்படவேண்டும். இவ் அறநெறிகளுக்கிடையேயான பரஸ்பர உறவுநிலை என்ன என்பது பகுத்தறியப்படவேண்டும். இவ் உறவு நிலையின் இயங்குநிலை (dynamics) என்ன என்பது வாசித்தறியப்பட வேண்டும். வரவிருக்கும் புறநிலைமாற்றங்கள் இவ்வுறவு நிலையில் ஏற்படுத்தக் கூடிய மாற்றங்கள் என்னவாக இருக்கும் என்பன தர்க்கித்து அறியப்படவேண்டும்.

முடிவாக    1970-களில் இருந்து இன்றுவரையான இலங்கையின் அரசியல் நிலையில் சிங்கள தேசிய சிந்தனை என்பது ஒட்டுமொத்தமாகவே சிங்கள-பௌத்த பேரின-அகங்கார வாதமாகவே இருந்துவருகின்றது. 1-வது தலைமுறை இடதுசாரிகள் தத்துவார்த்த ரீதியாக பேரினவாத சிந்தனைப்போக்குக்கு எதிரானவர்களாக இருந்தாலும், இலங்கையின் நடைமுறை அரசியலில் அவர்களும் பேரின-தேசியவாதிகளாகவே காணப்படுகின்றனர். சிங்கள-பௌத்த பேரின-பேரகங்காரவாதம் அவர்களிடம் இல்லை என்பது வரவேற்க்கத்தக்கது. ஆனால் பேரின-அகங்காரவாதத்துடன் அரசியல் சமரசம் செய்துகொள்ள அவர்கள் தயங்கவில்லை. மஹிந்தவின் தலைமையிலான கூட்டணியில் அவர்களும் உள்ளார்கள். ஜே.வி.பி இயக்கம் தன்னை ஒரு இடதுசாரி இயக்கம் என்று கூறிக்கொண்டாலும் அது உண்மையல்ல. அவர்கள் இழநிலை ஹிட்லராகவே உள்ளனர். ஆகவே சிங்கள தேசத்தின் நான்கு பிரதான அரசியல் முனைகளும் பேரின-அகங்காரவாத முகாம்களேயாகும். சிங்கள தேசத்தின் ஏனைய அணிதிரளல்கள் அனைத்தும் இந் நான்கு முனைகளில் ஏதோஒரு முனையைச் சேர்ந்தவர்களே. பேரின-அகங்காரவாதத்திற்கு எதிரான அரசியல் அணிதிரளல் எதுவும் இன்னும் அரசியல் மேற்தளத்திற்க்கு வரவில்லை. இதுதான் சிங்களத் தேசியத்தின் அரசியல் நிலையாகும். இது ஒரு அரசியல் ஊகமுமல்ல, குறுந்தேசிய வாதத்தின் மிகைப்ப டுத்தலுமல்ல, தத்துவ ஞானிகளின் கண்டுபிடிப்புகளுமல்ல. இலங்கை சமூகத்துடன் பரிச்சயமுள்ள எந்த ஜனநாயகவாதிகளாலும் புரிந்து கொள்ளக்கூடிய எளிமையான உண்மையாகும். இந்த நான்கு அணியில் எந்த ஒரு அணிக்கும் பாவமன்னிப்பு கொடுப்பதன் மூலமோ, எந்த அணியையும் பிராயச்சித்தம் செய்ய வைப்பதன்மூலமோ அல்லது எந்த அணிக்கும் வர்ணம் தீட்டுவதன் மூலமோ இவர்களின் உண்மை உள்ளடக்கத்தை மறைக்கவும் முடியாது, இவர்களை புணர்நிர்மாணம் செய்யவும் முடியாது.

     அதற்காக இம்முனைகள் நான்கையும் ஒரேகுட்டையில் ஊறிய மட்டைகள் என்றோ, தனிநபர் அதிகாரத்துக்காக வெவ்வேறாகப் பிரிந்து நின்று அடிபடுகிறார்கள் என்றோ கூறுவது மிகவும் தப்பானதாகும். இவ் நான்கு முனைகளையும் மூன்றுவிதமான பேரகங்கார முகாம்களாக வகைப்படுத்தலாம். அவையாவன:-

Ø  மேலைத்தேய தாராளவாத சிங்கள-பௌத்த பேரின-அகங்காரவாதிகள்.- யூ.என்.பி தீட்டுப்படாத தூய சிங்கள-பௌத்த பேரின-அகங்காரவாதிகள்.- ஸ்ரீ.ல.சு.க  ப(f)னாரிக்(fanatic) சிங்கள-பௌத்த பேரின-அகங்காரவாதிகள்.- மஹிந்த முனையும், ஜே.வி.பி முனையும், 

    முதலாவதும் இரண்டாவதும் பேரின-அகங்காரவாத அணியை (யூ.என்.பி & ஸ்ரீ.ல.சு.க) ஒன்றிணைத்து இல்-ப(f)னாரிஸ்ட்(non-fanaticism) அணியெனவும், மூன்றாவது அணியை ப(f)னாரிஸ்ர்(fanaticism) அணியெ னவும் அழைத்துக்கொள்வோம். 
    நடந்துமுடிந்த ஜனாதிபதித்தேர்தல் இவ்விரு அணிகளுக்கிடையேயான பதவிப்போட்டியேயாகும். மஹிந்தவின் கண ஆதிக்கப்போக்கால்(nepotism) ஜே.வி.பி முனையும், வேறு சில ப(f)னா ரிஸ்ர்(fanaticism) குளுக்களும் புதிய ஜனநாயக முன்னணியில் சேர்ந்திரு ந்தார்கள், இது தற்காலிகமானதே அவர்கள் மிகவிரைவில் இல்-ப(f)னாரிஸ்ட்(non-fanaticism) அணிக்கெதிராகப் போராடுவார்கள். எந்த சந்தேகமுமில்லை. நடந்து முடிந்த தேர்தலில் சிங்களத் தேசியம் ப(f)னாரிக்(fanatic) தேசியத்தை தோற்கடிக்கவில்லை. புதிய ஜனநாயக முன்னணி பெற்ற வாக்குகளில் இருந்து தமிழ்பேசும் மக்களின் வாக்குகளைக் கழித்தாலே மஹிந்த பெற்ற வாக்குகள் அதிகமானதாகவே இருக்கும். புதிய ஜனநாயக முன்னணி பெற்ற வாக்குகளில்இருந்து ஜே.வி.பி, J.H.U ஆகியனவற்றிற்க்கு கிடைத்தி ருக்கக்கூடிய வாக்குகளையும் கழித்தால் புதிய ஜனநாயாக முன்னணி வாக்குகள் இன்னும் குறையும். இவ்விரு அணிகளினதும் வாக்குகளும் ப(f)னாரிக்(fanatic) தேசியத்துக்குக் கிடைத்த வாக்குகளேயாகும். ஆகவே ஒரு ஜனநாயகச் சதியின் மூலம் மஹிந்த பதவிநீக்கப்பட்டாரே தவிர ப(f)னாரிக்(fanatic) தேசியம் தோற்கடிக்கப்படவில்லை. அது தனது பதவிக்காக தொடர்ந்தும் போராடும். வெல்வார்களா?

“வெல்லப்போவது எது? ப(f)னாரிஸமா(fanaticism)? அல்லது இல்-ப(f)னாரிஸமா(non-fanaticism)?” என்ற தலைப்பிலான எனது அடுத்த கட்டுரையில் வெவ்வேறு அறநிலைகளைப் பட்டியல் இடுதல், பகுத்தறிதல், வாசிப்புகள், தர்க்கங்கள் ஆகியன தொடரும்.
லோகன் 19/01/2015





No comments:

Post a Comment

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...