Tuesday, 13 March 2018


சட்ட அங்கிகாரம் பெற்ற 8வது கொலைவகை----கருணைக்கொலை


     சட்ட அங்கிகாரம் பெற்ற எட்டுக் கொலைவகைகளில் கருணைக்கொலை எட்டாவது கொலைவகையாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இது தவறாகப் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால், தற்போதைய அரசு இதை முழுமையாக ஏற்றுக்கொள்ளாத போதும், இந்தியச் சட்டதிட்டத்தின் வரவேற்கக்கூடிய ஜனநாயகத் தன்மையென இச் சட்டம் போற்றப்படுகிறது. ஒரு சமூகப் பிரச்சனையான இச்சட்டம் தமிழ் ஊடகங்களில் ஒரு விவாதப் பொருளாகமல் இருப்பது ஏனெனப் புரியவில்லை. இதை ஒரு விவாதப்பொருளாக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். முதலில் சட்ட அங்கிகாரம் பெற்ற ஏனைய ஏழு கொலைவகைகளையும் நோக்குவோம்.

    முதல்வகை: நீதி மன்றத்தால் வளங்கப்படும் மரணதண்டனை முதல் கொலைவகையாகும். மரண தண்டனை சரியானதென்றும், தப்பானதென்றும் விவாதங்கள் நடைபெறுகின்றன.
இரண்டாவதுவகை: அரச ஆயுதப் படையினரால்(பொலிஸ். வனத்துறையினர், இராணுவம்) ‘சமூகவிரோதி கள்’, ‘தீவிரவாதிகள்’ ‘பயங்கரவாதிகள்’ என அடையாழங்காணப் பட்டோர்களுடனான மோதல்களின் போது நடத்தப்படும் என்கவுண்டர் கொலைகள். இவை ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றகுரல் ஓங்கிவருவதை காணக்கூடியதாய் உள்ளது.

   முன்றாவதுவகை: ‘வன்முறைக் கலவரங்கள்’ எனப் பொலிஸாராலும், இராணுவத்தாலும் அடையாழங் காணப்பட்ட சமூக நிகழ்வுகளை அடக்கும் வேளைகளில் ‘கலவரக்காரர்கள்’ பக்கத்தில் இடம்பெறும் சாவுகள். சில வேளைகளில் கலவரத்தில் சம்பந்தப்படாதவர்களும் கொல்லப்படுவதுண்டு.
நான்காவதுவகை: அந்நியப் படைகளுடனோ அல்லது ஆயுதம் ஏந்திய உள்ளூர் குழுக்களுடனோ ஆன மோதல்களின் போதோ அல்லது தேடுதல்களின் போதோ ஏற்படும் கொலைகள்; இங்கும் ‘அப்பாவிகள்’ கொல்லப்படுவதுண்டு.

   ஐந்தாவதுவகை: அரசநிறுவன அல்லது தனியார்நிறுவன நிறைவேற்றதிகாரம் மிக்க பொறுப்பாளர்களின் (அதிகாரத்துவவாதிகள்) பொறுப்பின்மை, அக்கறையின்மை போன்றவற்றின் காரணத்தால் நடைபெறும் கொலைகள். கும்பகோணம் பாடசாலை தீப்பிடித்ததால் நடந்த மாணவர்கொலை, சமீபத்தில் தேனிமாவட் டத்தில், கொலுக்கு மலைப்பகுதியில் தீப்பிடித்ததால் நடந்த மாணவர்கொலை, மாறா சோககாவியமான போபால் நச்சுவாயுகத் தொடர் கொலை ஆகியனவற்றை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.  இவை சட்டஅங்கிகாரம் பெற்ற கொலைகளல்ல; ஆனால், சட்டத்தால் மென்மையாகக் கையாளப்படும் கொலை களாகும். நீதிமன்றம் தண்டிக்கும்; இக் கொலைக்குக் காரண மானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென உரிய அங்ககங்கள் அவசர அவசரமாக அறிக்கைகள் விடும்; அறிக்கைகள் அறிக்கைகளாகவே நீடிக்கும்; சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிலவேளைகளில் தப்பியோ- டியும் விடுவார்கள்; காலம் இழுத்தடிக்கப்படும், மென்மையான தண்டனைகள் வழங்கப்படும்; பாதிக்கப் பட்டவர்களுக்காக இரங்கும் அறிக்கைகள் விடப்படும்; அனேகமாக நஸ்டஈடும் வழங்கப்படும், அதுவும் பொதுப்பணத்தில் இருந்துதான்; இழப்பை ஏற்படுத்தியவர்களிடம் இருந்து எந்த நஸ்டஈடும் அறவிடப் படமாட்டாது. யாரோசெய்த தவறுகளுக்காக மக்களின் வரிப்பணம் செலவளிக்கப்படும். அரசியல் தலைவர்களின் வாக்குவங்கி பெருப்பிக்கப்படும்.

    ஆறாவதுவகை: தற்பாதுகாப்பிற்காக, தவிர்க்கமுடியாத நிலையில், முன்கூட்டிய திட்டமிடல்கள் எதுவுமற்ற நிலையில் நடபெறும் கொலைகள். இக்கொலைகளை நடத்துவதற்காக கைத்துப்பாக்கி வைத்திருக்கும் உரிமையும், அதற்காக ஆய்தபாணியான பாதுகாப்புக்குழுக்கள் வைத்திருக்கும் உரிமையும் மேட்டுக்குடி களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் இக்கொலைகள் சட்டஅங்கிகாரம் பெற்றவையாகின்றன. தற்பாதுகாப்பிற்கான ஆயுதங்கள் வைத்திருக்க அனுமதி இல்லாதவர்கள்கூட இவ்வித கொலைகளில் ஈடுபடலாம். ஆனால், அதை முறையாக அவர்கள் நிரூபிக்க வேண்டும். நிரூபித்தால் சட்டம் அவர்களுடன் மென்போக்காக நடந்து கொள்ளும். புல்லுக்கு(மேட்டுக் குடிகளுக்கு) இறைத்தநீர் வாய்க்கால் வளியோடி நெல்லுக்கும்( சாதாரண மக்களுக்கும்) ஆங்கே சேர்கின்றது. 

   ஏழாவதுவகை: தனி நபர்களோ,குழுக்களோ தமக்கிடையேயான மோதல்களின்போது முன்னேற்பாடுகள் எதுவுமின்றி நடைபெறும் கொலைகள். இவ்வகைக் கொலைகள் சட்ட அங்கிகாரம் பெற்றவையல்ல, ஆனால், சட்டம் இவற்றைக் கையாளும் போது மென்மைப்போக்கையே கடைப்பிடிக்கும். சட்டமும், அரசும் மக்களின் யதார்த்த நிலையைப் புரிந்துகொண்டு மென்போக்காக நடந்துகொள்கிறதெனக் கருதலாம். உண்மை அவ்விதமல்ல. இங்கும், புல்லுக்கு(மேட்டுக் குடிகளுக்கு) இறைத்தநீர் வாய்க்கால் வளியோடி நெல்லுக்கும்( சாதாரண மக்களுக்கும்) ஆங்கே சேர்கின்றது. எவ்விதம்? அரசு, அரசாங்கம் ஆகிய இரண்டுமே, இனவெறித், சாதியவெறித், மதவெறித் தாக்குதல்களை மேற்கொள்ளும் போது தாம் வெளிப்படையாகச் செயற்படுவதை முடிந்தவரை தவிர்க்கவே செய்கின்றன. சிவில் சமூகத்தில் முரண்பாடுகளைத் தூண்டிவிடுவதன் மூலமே தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்கின்றன, சிவில் சமூகத்தில் நடக்கும் கலவரங்களாக அவற்றிற்கு அர்த்தம் கொடுக்கின்றன. இனக் கலவரம், சாதிக் கலவரம், மதக்கலவரம் என்று அர்த்தப்படுத்தப் படுகிறது. இவ்விதம் அரத்தப்படுத்துவதன் மூலம் தம்மால் தூண்டிவிடப்பட்ட வெறித்தனங்களை நடத்தியவர்களைத் தப்பவைப்பதற்கு, இவ் அணுகுமுறை பயன்படுத்தப்படுகிறது. குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடந்த இனக்கலவரம் இதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. மாட்டுஇறைச்சி விவகாரத்தில் நடந்த தலித் விரோத, இஸ்லாம் விரோத நடவடிக்கைகள் மற்றோர் எடுத்துக்காட்டு. 

      தொகுப்பாக: இவ் ஏழு கொலைவகைகளிலும் இருந்து நாம் கற்றுக்கொள்வது, “சோழியன் குடும்பி சும்மா ஆடாது” என்பதுதான். (அப் பழமொழி தப்பானது. உண்மையில் அது “சோழியன் குடும்பி சும்மாடாகாது” என்பதுதான். சும்மாடு என்பது பாரம் தூக்குவதற்காக தலையில் அணியும் துணியினால் ஆன கவசம். இருந்தும் சும்மாஆடாது எனப் பயன்படுத்தினால் தவறில்லை. சோழியன் தனது குடுமியை அவிழ்த்துக் கட்டுகிறான் என்றால் சாணக்கிய தந்திரம் ஒன்று உருவாகிவிட்டது என்றுதான அர்த்தம். “கருணைக்கொலை” யில் பொதிந்துள்ள சாணக்கியம் எது? தொடரும். 
 

No comments:

Post a Comment