Tuesday, 13 March 2018


பெரியார் சிலை உடைப்பும்-பிள்ளையார் சிலை உடைப்பும்
         தீவிர சனாதன பாதுகாவலராக செயற்பட்டுவரும் ஹெச்(H). ராஜா அவர்களின் பெரியார் சிலை உடைப்பு தொடர்பான தொலைக்காட்சி விவாதமொன்றில், இந்து முன்னணி நண்பர் ஒருவர் எழுப்பிய கேழ்விக்கு, விவாதம் முடியும்வரை எவருமே பதில்சொல்லவில்லை. பெரியாரைப் பாதுகாக்கவென களம் இறங்கியுள்ள இரு தரப்பினரில் எந்தத் தரப்பும் தமது விவாதங்களின் போது இதற்கான பதிலைச் சொன்னதாகத் தெரியவில்லை. பெரியாரின் உணர்வுகளைக் கொன்றுவிட்டு அவரின் உயிரற்ற குறியீடுகளை மட்டும் சுமந்து திரிபவர்கள் ஒரு தரப்பினர்; பெரியாரின் உணர்வுகளை தமதாக்கிக் கொண்டு அதன் வழர்ச்சிக்காகப் தொடர்ந்து போராடிவருபவர்கள் மற்றோர் தரப்பினர்.
“பிள்ளையார் சிலை சந்திசந்தியாக உடைக்கப்பட்டதையிட்டு இன்றுவரை மன்னிப்புக் கேட்காதவர்கள், இன்று பெரியார் சிலையை உடைப்பதாகக் கூறியதையிட்டுமட்டும் கண்டனக்குரல்கள் எழுப்புவது ஏன்?” இதுதான் அக் கேள்வியாகும். மக்கள் மனதைப் புண்படுத்தக்கூடிய முறையில் ராஜா நடந்து கொண்டது தவறென்றால், பிள்ளையார் நம்பிக்கையாளர்களின் மனதை புண்படுத்தக் கூடியமுறையில் பெரியார் நடந்து கொண்டதுவும் தவறுதானே?” இவைதான அக் கேழ்விகளாகும். இதற்க்கு சில நாட்கள் கழித்து தொலைக்காட்சி விவாதமொன்றில் அதே இந்துமுன்னணி நண்பர் பின்வரும் பொருள்படக் கூறினார்: பாரிய நேரெதிர்மாற்றங்கள் நடக்கும்போது வீழ்ச்சிகண்ட அரசியலின் அடையாளங்கள் அகற்றப் படுவதுவும், இழிவுபடுத்தப்படுவதுவும் இயல்பானது; பல நாடுகளில் இது நடைபெற்றுள்ளது. திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது இவ்விதமானதுதான். பெரியார் சிலைகள் அகற்றப்படப்போவதுவும் இவ்விதமானதொன்றுதான்.
இந்து முன்னணி நண்பர் சொன்னது மிகச் சரியானதே. சனாதன எழுச்சியொன்று ஏற்பட்டுவிட்டதை சனாதனவாதிகள் ஒத்துக்கொள்கிறார்கள். ஒத்துக்கொண்டதற்காக நாம்(முற்போக்குவாதிகள்) அவருக்கு நன்றிசொல்லிக்கொள்வோம்.
லெனின்: அரசியலில் தொழிலாள வர்க்கத்தினதும், தத்துவத்தில் மார்க்ஸியத்தினதும் அடையாளம். சனாதனவாதிகள் இவ்விரண்டிற்கும் நேரெதிரானவர்கள். ஆகவே இவர்கள் இவ் அடையாழங்களை அழிக்கத் தொடங்கிவிட்டனர். அடுத்ததாக அமைப்புகளை அழிப்பார்கள், தொடர்ந்து ஆட்களை அழிப்பார்கள்.
பெரியார்: அரசியலில் சமூக நீதியின்(இடஒதுக்கீட்டின்) அடையாளம்; தத்துவத்தில் பகுத்தறிவின்(காரணகாரிய தொடர்புவாதத்தின் ஆரம்பநிலை) அடையாளம். சனாதன வாதிகள் இவ் இரண்டுக்கும் நேரெதிரானவர்கள். பகுத்தறிவுக்கும் மாயாவாதத்திற்கும்(ஆன்மீகவாதம், சூனியவாதம் இத்தியாதி) எதிரான போராட்டந்தான் இந்திய தத்துவஞானத்துறையின் பிரதான தத்துவப் போராட் டமாகும். தமது மாயாவாதத்தை நிலைநிறுத்துவதற்காக சனாதானிகளால் நடத்தப்பட்ட கொலைகள் ஏராளம், அழிக்கப்பட்ட நாகரிங்கள் ஏராளம். அவற்றில் ஒன்றுதான் இராவணவதை. இந்தியா பூராவிலும் மாயாவாதத்தை தோற்கடித்தது சித்தாத்தரே(கௌதம புத்தர்). ஆனால், சித்தாத்தர் இறந்து நூற்றுக்கணக்கான வருடங்களின் பின் மாயாவாதிகள் பௌத்ததர்மத்தை தோற்கடித்து விட்டனர், அதனை மாயாவாத வட்டத்துக்குள் இழுத்துவிட்டனர். அதன் பின்னர் பல நூற்றாண்டுகள் கழித்து மாயாவாதத் திற்கெதிதிரான தத்துவார்த்தப் போராட்டம் ஆரம்பமானது. மூன்று முனைகளில் இருந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அவையாவன; மார்க்ஸிய முனை, அம்பேத்கர் முனை, பெரியார் முனை.
பெரியார் முனை. இம் முனையின் அரசியல் அங்கம், சனாதனதர்மத்தின் மிதவாத அரசியல் முனையுடன் கொண்ட அரசியல் நடபின் காரணத்தால் அரசியல் ரீதியிலும் தத்துவார்த்த ரீதியிலும் முனை மழுங்கிப் போனது. செத்தவனின் மூக்கறுக்கும் கத்தியாக மாறியது. சேணம் இழுத்துக் கொண்டு ஏதோவாழ்கிறது. ஆனால், வரலாறு, நகரும் தன்மையுடையது. ஆகவே, புதிய மார்க்ஸிய முனை  தோன்றிவளர்கின்றன.
அம்பேத்கர் முனை: அரசியல் ரீதியில் தலித்தியத்தில் உறுதியாக இருக்கும் காரணத்தால். மழுங்கடிக் கப்படாத அரசியல் முனையுடன் இன்னமும் வீறுநடைபோடுகின்றது. ஆனால், தத்துவார்த்த முனையோ மாயாவாதத்திற்கு எதிரான கூர்மையான முனையாக காணப்படவில்லை. சனாதனதர்மம் ஒரு எதேச்சதிகார அரச அதிகாரமாக  தோற்றம் பெறமுன்னர், சனாதன தர்மத்துக்கு எதிரான ஒரு தத்துவார்த்த முனையாகத் தோன்றியதுதன் பௌத்தம். ஆகவே, வழர்ந்துவரும் சமூக அதிகாரத்துக்கு எதிரானதோர் பகுத்தறிவுவாதமாகத்தான் பௌத்தம் இருந்ததேதவிர, வளர்ந்துவிட்ட சமூக-அரசியல் அதிகாரத்துக்கு எதிரான ஒரு தத்துவமாக பௌத்தம் இருக்கவில்லை. அதற்கான தேவையும் அப்போது இல்லை. ஆகவே பௌத்த சிந்தனை புதிய சூளலுக்கு ஒப்ப வளர்த்தெடுக்கப்பட்டிருக்கவேண்டும். அதில் ஆழப்பொதிந்திருந்த் பரமபௌதீக சிந்தனைக்கூறுகள் அப்புறப் படுத்தப்பட்டிருக்கவேண்டும். அம்பேத்கரிஸம் இதைச் செய்யவில்லை. ஆகவே ஒரு தத்துவம் என்றமுறையில் அம்பேத்கரிஸம் காலப்பொருத்தப்பாடுள்ளதாக இல்லை. மிகக்கூர்மையான அரசியல்முனையையும், கூர்மைமங்கிய(மொட்டையல்ல) தத்துவ முனையையும் கொண்டதுதான் அம்பேத்கரியம். இதனால்தான், சனாதனியக் கிழர்ச்சியாளர்கள், பௌத்தத்தைக் கொச்சைப்படுத்தியதுபோல் அம்பேத்கரிஸதை கொச்சைப்படுத்த முயல்கிறார்கள். ஆனால், அதன் கூர்மையான அரசியல்முனை இதை அனுமதியாது. சானாதனத்தீவிரவாதிகளின் தலைகளை சீவிஎறியும் அழவிற்கு அது கூர்மையானது. ஆகவே, அம்பேத்கரியத்துக்கு எதிராகவும் சனாதனிகள்  கிளரப்போவ்து நிச்சயம்.
பெரியார் முனை. அரசியல் அரங்கம்: இந்தியாவின் இன்றைய சமூக-அரசிய சூளலில், மிக சக்திமிக்கதொரு கூர்வாள்தான் பெரியாரின் சமூக நீதிக் கோட்பாடாகும். சானாதனிகளின் தலைகளை(அரசியல் தலைகள்) அறுக்கும் இவ்வாழ் கூர்மையடைந்தது தமிழக மக்களின் பேர் எழுச்சியினூடாகத்தன். இவ் எழுச்சிக்குத் தலைமை தாங்கியது பெரியார்தான். இதற்காக அவர் பல கட்சிகளுடன் இணைந்து செயற்பட்டார், ஆனால் எந்தக் கட்சியும் இவ்வெற்றிக்கான பரிசுகளை தட்டிப்பறித்துவிட முடியாது. அதேவேளை சானாதனவாதிகள் தவிர தமிழ்நாட்டின் அனைத்துக்கட்சிகளும் பெரியாருடன் இணந்தே செயற்பட்டன. ஆகவே பெரியாரின் காலம் சமூகநீதியை ஒரு சமூக நியதியாக மாற்றிய பொற்காலமாகும். ஆகவே, இது மக்கள் எழுச்சியே. வெறும் அரசியல் சீர்திருத்தமோ, சட்ட ஆக்கங்களோவல்ல. மக்கள் எழுச்சி; அவ் எழுச்சிக்குத் தடையாக இருந்த அனைத்து சமூகசக்திகளையும் அவமானப்படுத்தவே செய்யும். பிரெஞ்சுப் புரட்சி அதையே செய்தது. ருஷ்யப் புரட்சி மன்னர்களின் தலைகளைச் சீவி, ஜார் மன்னனின் அனைத்து அடையாளங்களையும் அடித்து நொறுக்கியது. காலனியலிஸத்திற்கு எதிராக லெபனான், எகிப்து, லிபியா, சூடான் போன்ற இன்னபிற நாடுகளில் நடந்த முதலாழித்துவ ஜனநாயகப் புரட்சியும் இதையேதான் செய்தன. இவ்விதம் தோன்றிய தலைவர்கள் அனைவரையும் பின்நாளில் அமெரிக்க கொன்றது. பெரியார் காலத்தில் பெரியாரும் இதையே செய்தார். இதில் என்ன தவறு? சமூக நீதிக் கிளர்ச்சி ஒரு மக்கள் எழுச்சி; அதிர்ஸ்டவசமாக, இதில் யாரின் தலைகளும் சீவப்படவில்லை. சிலைகள் உடைக்கப்பட்டன, கிழிப்புகளும் அறுப்புகளும் நடந்தன; தலைகள் தப்பியமைக்காக சனாதானிகள் மகிழ்ச்சி கொள்ளட்டும்.
தத்துவார்த்த அரங்கம் : காரணகாரிய கோட்பாட்டினை வலியுறுத்திய சித்தாத்தரின் வெகுஜன எழுச்சிக்குப் பின்னர் நடைபெற்ற அடுத்த தத்துவார்த்த வெகுஜன எழுச்சி பெரியாரல் நடத்தப்பட்ட பகுத்தறிவு(காரண காரிய கோட்பாட்டின் முதல் நிலை) எழுச்சியேயாகும். (சித்தர்களின் எழுச்சி ஒரு வெகுஜன எழுச்சியாக மாறவில்லை.) பெரியாரின் எழுச்சி தமிழ் நாட்டிற்குள் மட்டும் சுருங்கிப்போனது இந்தியாவின் துர் அதிர்ஸ்டமாகும். அடுத்தபக்கத்தில் சனாதன தர்மம் ஒரு வெகுஜனத் தன்மைபெற்றதாக இருக்கவில்லை. இவ்விதம் மாற்றுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளில் ஒன்றுதான் விநாயகசதுர்த்தி எனும் கொண்டாட்டாமாகும். இக்கொண்டாட்டம்தான் இந்தியத் தேசிய எழுச்சி, இந்து மதஎழுச்சி, சானாதனதர்ம எழுச்சி ஆகிய மூன்றையும் வெகுஜன எழுச்சியாக வளர்த்தெடுப்பதில் வெற்றிபெற்ற கொண்டாட்டமாகும். தயானந்த சரஸ்வதியால் வழிநடத்தப்பட்ட தாய்மதம் திரும்பும் இயக்கம் வெற்றிபெறவில்லை. ஆனால், விநாயக சதுர்த்தி இயக்கம் வெற்றிபெற்றது. அரசியல் அரங்கிலும், தத்துவார்த்த அரங்கிலும் சமூகநீதிக்கு எதிரான இயக்கம் வலுப்பெறுவதை பெரியார் விரும்பாதது சரியானதுதானே. பிள்ளையாரை ஒரு அரசியல் இயக்கமாக மாற்றுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையைத் தடுப்பதற்காகத்தான், பிள்ளையார் சிலைகள் உடைக்கப்பட்டன. பிள்ளையார் மக்கள் எழுச்சியைத் தடுக்கும் அடையாளமாக பயன்படுத்தப்படுவதை மக்கள் உணர்ந்து கொண்டிருந்தார்கள். சிலைகள் உடைக்கப்பட்டன.
மத எதிர்ப்புத்தான் காரணமானால், பிராமணியத்தின் கடவுளான பிரம்மத்துக்கு எதிராகத்தான் பெரியார் போராடியிருக்கவேண்டும். முருகனை பிராமணியப்படுத்திய தெய்வானையின் சிலைகள் உடைக்கப் பட்டிருக்க வேண்டும். இமயத்தின் முழுமுதல் தலைவனாகவும், உலக இயக்கத்தின் அச்சாணியாகவும் கருதப்படும் சிவனையும், மனித இனவிருத்தியின் அடையாளமாகவும் கருதப்படும் லிங்கத்தையும் பின் தள்ளி காவல்தெவமாக தரம் குறைக்கப்பட்டதற்காக பிற அனைத்துச் சிவன் சிலைகளையுமல்லவா உடைத்தெறிந்திருக்க வேண்டும். பெரியார் இதையெல்லாம் செய்யவில்லை, ஏனெனில் பெரியார் ஒரு வரட்டுநாஸ்தீகரல்ல. அவர், இன, மத, சாதி, வேறுபாடுகளுக்கும் துவேசங்களுக்கும் அப்பாற்பட்டவர் மாத்திரமல்ல, அவற்றிற்கு எதிரானவருமாகும்.
ஆகவே, சனாதானிகள் கவனிக்கவேண்டியது, இங்குள்ள பிரச்சனை கடவுளோ, கடவுள் சிலைகளோ, பூநூல்களோ, நாமங்களோ, பூச்சுகளோ அல்ல. இவற்றில் எவையும் அரசியலுக்கு வரக்கூடாது என்பதுதான், அவை அரசியலுள் புகுத்தப்படக்கூடாது எனபதுதான். இது முக்காலத்துக்கும் பொருந்தும். அன்று ஒரு பெரியார்தான் இருந்தார் இதைத் தடுக்க. இன்று பலபெரியார்கள் தோன்றக்கூடும். அது மட்டுமல்ல பெரியார் காலத்தில் இந்தியாவின் மதங்கள் அனைத்தும் இந்துமதமே எனும் சனாதன குரல் எடுபட்டது. இதனால் பெரியார் மிகவும் தொல்லைப்பட்டிருப்பார். ஆனால் இன்று சைவர், வைணவர், சமணர், பௌத்தர், குலதெய்வ வழிபாட்டினர் வீரசைவர் என இன்னபிற மதப்பிரிவினர் நாங்கள் இந்துக்களல்ல என முனங்கத்தொடங்கியுள்ளார்கள். மதத்தை அரசியலுக்குள் கலப்பது தொடருமானால், அவர்களின் முனங்கல்கள் முழக்கங்களாக மாறும் நிலை தோன்றக்கூடும். எச்சரிக்கை.

No comments:

Post a Comment

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...