மனுஸ்மிருதியின்
அடிப்படையில்தான் மத்திய அரசின் ஆட்சி நடைபெறுகிறது – சிபிஎம்
( மோடி ஆட்சியின் நான்காண்டுகள் தொடர்பாக சிபிஎம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நான்கு சிறு பிரசுரங்களில் ஒன்றில் வெளியாகியுள்ள கட்டுரை.)
இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குப் பதிலாக, இந்துத்துவா அடிப்படையில் மனுஸ்மிருதிக்கு உட்பட்டு செயல்படுவதுதான் பாஜகவின் கொள்கை என்பது தலித்துகள் குறித்த அதன் அணுகுமுறையிலிருந்து நன்குபிரதிபலித்திருக்கிறது. சாதிகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து இந்துக்களும் ஒன்றுபட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் கூறிவந்தபோதிலும், இதற்கு முரணான விதத்திலேயே கடந்த நான்கு ஆண்டுகளாக அது செயல்பட்டுவந்திருக்கிறது. மோடி அரசாங்கத்தின் கடந்த நான்காண்டு கால ஆட்சியை நுணுகி ஆராய்வோமானால், அது வர்ணாச்ரம (அ)தர்மத்தின் அடிப்படையில் செயல்பட்டு வந்திருப்பதைக் காண முடியும். தலித்துகளுக்கு சமஉரிமைகளுக்காகவும், தீண்டாமைக்கொடுமைக்கு எதிராகவும் அரசமைப்புச்சட்டம் மற்றும் பல்வேறு சட்டங்களின் கீழ் கொண்டுவரப்பட்ட ஷரத்துக்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாகக் கைவிடப்பட்டும்நீர்த்துப்போகச்செய்யப்பட்டும் இருப்பதைக் காண முடியும். தலித்துகளின் உயிர், உடைமை,வாழ்வாதாரங்கள், சுயமரியாதை, கல்வி, வேலை என அனைத்தும் தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கின்றன.
கல்வி
மோடி அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் இன்னும் ஓராண்டில் நிறைவடையக்கூடிய இன்றைய நிலையில் கடந்த நான்காண்டு கால ஆட்சியில் தலித் இளைஞர்களின் மீது அதன் தாக்குதல்கள் மிகவும்கொடூரமானவைகளாகும். 2015 ஜனவரியில் ஹைதராபாத் மத்தியப் பல்கலைக் கழகத்தின் அறிவுக்கூர்மை மிக்க மாணவரான ரோஹித் வெமுலா ‘நிறுவனரீதியாக்க் கொலைசெய்யப்பட்டதை’ இவர்களின் அணுகுமுறையின் அடையாளமாகக் கொள்ளமுடியும். சங்பரிவாரக்கூட்டத்தின் நம்பிக்கை களுக்கு சிம்மசொப்பனமாக இருந்ததால்தான் ரோஹித் வெமுலா குறிவைக்கப் பட்டார். பின்னர், அரசாங்கம் ரோஹித் வெமுலாவை அவர் ஒரு தலித் இல்லை என்றும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் என்றும் அடையாளப்படுத்துவதற்காக அரும்பாடு பட்டதைப் பார்த்தோம். பாஜக, அதனுடைய 2014ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் தலித்/பழங்குடியினர்/இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கல்விக்கு முன்னுரிமை அளித்திடுவோம் என்றும், இம்மாணவர்களின் வறுமையை ஒழித்துக்கட்டி, அவர்களை தொழில்முனைவோர் களாக மாற்றிடுவோம் என்றும் உறுதிமொழி அளித்திருந்தது.
ஆனால், மத்திய அரசாங்கம், மேற்கொண்ட நடவடிக்கைகள் இவற்றுக்கு முற்றிலும் எதிரானவைகளாகும். தலித் துணைத்திட்டத்திற்கு பட்ஜெட்டில் ஒதுக்கீடுசெய்யப்படும் தொகை பெரியஅளவில் வெட்டப் பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட இல்லாமல் ஒழிக்கப்பட்டிருக்கிறது. தலித் துணைத்திட்டத்திற்கு பட்ஜெட் ஒதுக்கீட்டில் 16.6 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.ஆனால் மோடி ஆட்சிக்கு வந்தபின்னர், 2014-15இல் 8.79 சதவீதமாகவும், பின்னர் 2015-16இல் 6.63 சதவீதமாகவும், 2016-17இல் 7.06 சதவீதமாகவும்த, 2017-18இல் 8.91 சதவீதமாகவும் ஒதுக்கீடு குறைக்கப்பட்டது. இவ்வாறு2014க்கும் 2018க்கும் இடையிலான காலத்தில் சராசரியாக 7.59 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இது அரசாங்கத்தால் குறியீடப்பட்டிருந்த 16.6 சதவீதத்தில் பாதிக்கும் குறைவானதாகும். இதை ரூபாயாகக் குறிப்பிட்டோமானால் பல்லாயிரம் கோடி ரூபாய்களாகும்.
உயர்கல்வி நிறுவனங்களில் படித்துவரும் தலித் மாணவர்கள் பல்வேறு விதங்களில் அவமதிப்புக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய கல்வி உதவித்தொகையை தாமதப்படுத்துதல் அல்லது வழங்காமல் இருத்தல் ஆகிய காரணங்களினால் நிறுவனங்களுக்குள் நடத்தப்படும் உள்தேர்வுகளில் (internal examinations) ‘தேர்ச்சிபெறவில்லை’ (‘failed’) என்று குறியிடப்பட்டு, அவர்கள் தாங்கள் பெற்றுவந்த படிப்பைக் கைவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு பல லட்சம் மாணவர்கள் படிப்பைப் பாதியில் கைவிட்டிருக்கிறார்கள்.
இதுதொடர்பாக ஒருசில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம். மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்குத் தேவைப்படும் தொகை 8 ஆயிரம் கோடி ரூபாயாகும். ஆனால் மத்திய அரசு 2017-18ஆம்ஆடில் பட்ஜெட்டில் இதற்காக ஒதுக்கீடு செய்ததோ வெறும் 3,347.9கோடி ரூபாய் மட்டுமேயாகும். பின்னர் 2018-19ஆம் ஆண்டிற்கு இதனை 3 ஆயிரம் கோடி ரூபாயாக மேலும் குறைத்துள்ளது. (உண்மையில் இந்த ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவிற்கு அதிகமாகும்.) 2018 பிப்ரவரி 2 அன்று நாடாளுமன்றத்தில் மத்திய சமூகநீதி மற்றும் மேம்பாட்டுத்துறைக்கான அமைச்சர் ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில், தலித்மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய கல்வி உதவித்தொகையில் 6,824.5 கோடி ரூபாய் நிலுவையிலிருப்பதாகக் குறிப்பிட்டார். இவ்வாறு தலித் மாணவர்களுக்கான உதவிக்தொகை, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம்மற்றும் மகாராஷ்ட்ரா ஆகிய ஒவ்வொரு மாநிலத்திற்கும் தலா 1,400 கோடி ரூபாய் அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு கல்வி உதவித்தொகையை அளிக்காததன் மூலமாக எத்தனை தலித் மாணவர்கள் கல்விபறிக்கப்பட்டிருக்கிறது?
அரசாங்கத்தின் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் போதனை செய்திடும் உரிமை தலித் மாணவர்களுக்கு மேலும் பல வழிகளில் மறுக்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக, பல்கலைக்கழகமானியக்குழுவின் புதிய விதிகளின்படி தலித்துகள் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு ஆசிரியர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவது கடுமையாக வெட்டிக் குறைக்கப்பட்டிருக்கிறது. இப்போதுள்ளதகவல்களின்படி, மொத்தத்தில் அவர்களின் எண்ணிக்கை வெறும் 7.22 சதவீதம் மட்டுமேயாகும். புதிய கொள்கையின்படி பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் மட்டுமே 59 சதவீத ஆசிரியர் பணியிடங்கள்குறைக்கப்பட்டிருக்கின்றன.
வேலைகள்
கல்வி நிறுவனங்களிலும், அரசாங்கம் மற்றும் பொதுத்துறைநிறுவனங்களிலும் தலித்துகளுக்கான இடஒதுக்கீடுகளைக் குறைப்பதற்கும் மோடி அரசாங்கம் அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது. அரசாங்கம், அனைத்தையும் தனியாரிடம் தாரைவார்த்திட நடவடிக்கைகள் மேற்கொண்டுவருவதன் காரணமாக, அரசமைப்புச்சட்டத்தின்கீழ் தலித்துகளுக்கு அளிக்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டிற்குஅநேகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. தனியார்துறையிலும் இடஒதுக்கீடு கொண்டுவர வேண்டும் என்பது குறித்து, மோடி அரசாங்கம் பேசுவதற்கு முன்வர மறுக்கக்கூடிய நிலையில், தனியார்துறையில்இடஒதுக்கீடு தொடர்பாக சட்டம் கொண்டுவருவது குறித்து அது எப்படிப் பேசும்? மேலும் மத்திய அரசாங்கம் மற்றும் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தலித்துகளுக்கான ஒதுக்கீட்டுப் பணியிடங்கள்நிரப்பப்படாது தொடர்ந்து காலியாகவே வைக்கப்பட்டிருக்கின்றன.
- அதேசமயத்தில் தலித்துகள் காலம் காலமாகத் தங்கள் வாழ்வாதாரங்களுக்காக மேற்கொண்டுவந்த வழிமுறைகள்மீதும் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. “பசுப்பாதுகாவலர்கள்” என்ற பெயரில்தலித்துகள் காலம் காலமாகச் செய்துவந்த கால்நடை வர்த்தகம், இறைச்சி மற்றும் இறைச்சிக் கடைகளை நடத்துவதில் பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்திருப்பதன் மூலம் அவர்கள் காலம் காலமாகமேற்கொண்டுவந்த வேலைகளுக்கே குழிபறித்துள்ளார்கள். இதனால் தோல் பதனிடும் தொழிலில் ஈடுபட்டிருந்த பல லட்சக்கணக்கான தலித்துகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மாட்டிறைச்சி விற்பனைக்குத் தடை விதித்திருப்பதன் மூலம் பல தலித் குடும்பங்களுக்கு மலிவாகக் கிடைத்துவந்த புரதச்சத்து உணவு மறுக்கப்பட்டிருக்கிறது. இது தலித் மக்களின் மிகவும் கேந்திரமானபிரச்சனையாகும். ஏனெனில் தலித்துகளில் 54 சதவீத்த்தினர் சத்துணவுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள். ஆயிரம் குழந்தைகளில் 84 குழந்தைகள் 5 வயதுக்கு முன்பே இறந்துவிடுகின்றன.
“பசுப்பாதுகாவலர்கள்” என்போரின் மிகக் கொடூரமான தாக்குதல்கள் 2016 ஜூலை 11 அன்று உனா என்னுமிடத்தில் நடந்ததைப் பார்த்தோம். அங்கே 5 தலித் இளைஞர்கள் இறந்த மாட்டின் தோலை உரித்ததற்காகமிகவும் கொடூரமான முறையில் தாக்குதலுக்கு ஆளானார்கள்.
தலித் தொழில்முனைவோர்களை மேம்படுத்துதல் தொடர்பாகவும் அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்திருக்கிறது. பல்கலைக் கழக மானியக்குழுவின் முன்னாள் தலைவரான பேராசிரியர்சுக்தியோ தோராத், மத்திய அரசு பன்னாட்டு நிறுவனம் ஒன்றிற்கு, தலித்/பழங்குடியினர் முனையம் (SC/STHub) ஒன்றை அமைப்பதற் காக கோடிக்கணக்கான ரூபாய் அளித்திருப்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கிறார். உண்மையில் இவ்வாறு முனையம் அமைப்பதற்குத் தேவைப்படும் தொகை வெறும் 490 கோடி ரூபாய்தான். மத்திய அரசின் சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் தலித்/பழங்குடியினரின் தொழில்நிறுவனங்களிடமிருந்து மத்திய சிறிய மற்றும் நடுத்தரத்தொழில்துறை அமைச்சகம் 4 சதவீதம் அளவிற்குத்தான் பொருள்களை வாங்கி இருக்கிறது. இது மொத்த சதவீதத்தில் வெறும் 0.39சதவீதம் மட்டுமேயாகும்.
நிலம்
தலித்துகள் ஆண்டாண்டு காலமாகவே வரலாற்றுரீதியாக நில உரிமைகள் மறுக்கப்பட்டுதான் வைக்கப்பட்டிருந்துவருகிறார்கள். இதன்காரணமாக அதன் சுமைகள் அவர்களின் மத்தியில் பெருமளவில் பிரதிபலிப்பதைப் பார்க்கமுடியும். தலித்துகளில் பெரும்பகுதியினர் நிலமற்றவர்கள். இவ்வாறு நிலமற்ற தலித்துகள் தேசிய அளவில் சராசரியாக 58 சதவீதத்தினராவார்கள். இதன் விளைவாக தலித்துகளில் பெரும் சதவீதத்தினர் கூலி வேலையை நம்பியே வாழ்ந்து வருகிறார்கள். எனினும், தலித்துகளுக்கு நிலம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை மோடி அரசாங்கம் கண்டுகொள்ளாமல்தான் இருந்துவருகிறது. கடந்த நான்கு ஆண்டு கால மோடியின் ஆட்சியில் தலித்துகளுக்கு நிலம் வழங்குவதற்காக ஒருதிட்டம் கூட மத்திய பாஜக அரசாங்கத்தாலோ அல்லது பாஜக ஆளும் மாநிலங்களிலோ மேற்கொள்ளப்படவில்லை.
தலித்துகளுக்கு எதிரான அட்டூழியங்கள் மற்றும் வன்கொடுமைத் தடைச் சட்டம்
2017 நவம்பரில் வெளியிடப்பட்ட தேசியக் குற்றப் பதிவேட்டு நிலையத்தின் (NCRB-National Crime Record Bureau) அறிக்கையின்படி, தலித்துகளுக்கு எதிரான அட்டூழியங்கள் அல்லது குற்றங்கள் 2015ஆம் ஆண்டைவிட 2016ஆம் ஆண்டில் 5.5 சதவீதம் அதிகரித்திருக்கிறது. தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 2015இல் 38,670 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இது 2016இல் 40.801 வழக்குகளாக அதிகரித்துள்ளது. அதிக அளவிலான குற்றங்கள் பாஜக ஆளும் மாநிலங்களில்தான் நடைபெற்றுள்ளன.
மொத்தம் நடைபெற்றுள்ள 10,426 நிகழ்வுகளில், உத்தரப்பிரதேசத்தில்தான் அதிக அளவில் குற்றங்கள் நடந்துள்ளன. அதாவது இம்மாநிலத்தில் 25.6 சதவீதம் தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் நடந்துள்ளன. இதனை அடுத்து பீகாரில் 14 சதவீத அளவிற்கும், ராஜஸ்தானில் 12.6 சதவீத அளவிற்கும் குற்றங்கள் நடந்துள்ளன.
தலித்துகளுக்கு எதிரானக் குற்ற சதவீதம் மத்தியப் பிரதேசத்தில் லட்சம் மக்கள் தொகைக்கு 43.4 என்ற அளவிலும், ராஜஸ்தானில் 42, கோவாவில் 36.7, பீகாரில் 34.4 மற்றும் குஜராத்தில் 32.5 என்ற அளவிலும் இருக்கிறது. தலித்துகளுக்கு எதிராக அகில இந்தியக் குற்ற விகிதம் சென்ற ஆண்டு 20.6 ஆகும்.
தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக நடைபெற்ற வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தண்டனை பெறுவது என்பது மிகவும் குறைவு. ஒரு சதவீத வழக்குகளில் கூட தண்டனை கிடைத்திடவில்லை. நீதிமன்றங்களில் பதிவாகியுள்ள வழக்குகளில் பாதிக்கும் மேற்பட்ட வழக்குகள் தீர்ப்புகள் வழங்கப்படாமல் பல ஆண்டு காலமாக நிலுவையில் இருந்துவருகின்றன.
இந்தப் பின்னணியில்தான் உச்சநீதிமன்றம் வன்கொடுமைத் தடைச்சட்டத்தின் ஷரத்துக்களை நீர்த்துப்போகச் செய்திடக்கூடிய விதத்தில் மிகவும் பிற்போக்குத்தனமான தீர்ப்பினை வழங்கியிருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் இதற்கு எதிராக மத்திய அரசு எவ்விதமான முன்மொழிவினையும் தாக்கல் செய்யாததன் காரணமாகவே இவ்வாறு உச்சநீதிமன்றத்தில் நடந்துள்ளது. இதற்கெதிராக நாடு முழுதும் தன்னெழுச்சியாக தலித்துகள் திரண்டு 2018 ஏப்ரல் 2 அன்று கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது, பாஜக அரசாங்கங்கள் அவற்றை நசுக்கிட காவல்துறையினரின் கடுமையான தாக்குதலை ஏவியது. காவல்துறையும் உயர்சாதிக் கும்பலும் அவர்களுக்கு எதிராகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பல பாஜக மாநிலங்களில் ஒன்பது பேர் கொல்லப்பட்டார்கள். மத்தியப் பிரதேசத்தில் மட்டும் பாஜக குண்டர்களால் நான்கு பேர் கொல்லப்பட்டார்கள்.
(மோடி ஆட்சியின் நான்காண்டுகள் தொடர்பாக சிபிஎம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நான்கு சிறு பிரசுரங்களில் ஒன்றில் வெளியாகியுள்ள கட்டுரை. தொடர்ந்து இதர கட்டுரைகளும் வெளிவரும்.
(தமிழில்: ச.வீரமணி)
No comments:
Post a Comment