Thursday 11 October 2018

எல்லை தாண்டும் மீனவர்


எல்லை தாண்டும் மீனவர்களும்
‘இலசுமணன் கோட்டை’த் தாண்டும் ஸ்ரீ லங்கா அரசும்----1
            -அரிநேசரட்னம் கௌரிகாந்தன்

    தமிழ்நாட்டு மீனவர்கள் கடல்வேலி பாய்ந்து, தமது இயந்திரப் படகுகளுடன் இலங்கையின் ஆளமற்ற கடல் பகுதியில் மீன்களையும் அதன் குஞ்சு குருணிகளையும் அள்ளிச்செல்வது எந்த வழியிலும் நியாயப்படுத்த முடியாத குற்றமேயாகும்.

இக்குற்றம் மூன்றுவகைப்படும்:

முதலாவது:

இலங்கையின் கடற்பரப்பினுள் அத்துமீறி நுளைந்தது. இது இலங்கையின் இறமையை மீறிய குற்றமாகும்.

இரண்டாவது:

இலங்கை மீனவர்களின் கடல் வளத்தை அபகரிப்பது.

மூன்றாவது: 

இலங்கையின் கடற்பரப்பில் ஸ்ரீ லங்கா அரசால் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பிரயோகிப்பது.
இலங்கையின் தென்பகுதிமீனவர்கள், தமது இழுவைப் படகுகளுடன் இப்பகுதிக்குள் வருவதையே வடபகுதி மீனவர்கள் எதிர்க்கின்றனர். ஸ்ரீ லங்கா அரசும் ஒப்புக்கு இவ்வெதிர்ப்பை ஆதரிக்கிறது. இலங்கைத் தமிழர் மீதான இன அடக்கு முறையைப் பட்டியலிடும்போது இதுவும் ஒன்றாகப் பட்டியலிட ப்பட்டு தமிழ்நாட்டுத் தமிழீழ ஆதவாளர்களால் எதிர்க்கப் படுகிறது. தமிழ்நாட்டிலேயே ஒருபகுதி மீனவர்களின் மரபுவழி எல்லையை இன்னோர் பகுதி மீனவர்கள் மீறும்போது, உரிமைப் பிரச்சனை எழுப்பப்பட்டு கைகலப்புகளும் ஏற்படுகின்றன. கடலில் மரபுவளி எல்லைகள் இன்னும் மதிக்கப்படும்போது, தேசிய எல்லைகளை மீறுவது மட்டும் குற்றமாகாமல் இருக்கமுடியுமா? ஆகவே, இந்திய மீனவர்கள் மிகப் பெருமளவில் இலங்கை கடற்பரப்பினுள் நுளைவதை இலங்கையிம் வடபகுதி மீனவர்க ளும், ஸ்ரீ லங்கா அரசும் நிச்சயமாக பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். இதனால் தமிழக மீனவர்களின் அத்துமீறலையும், வள ஆபகரிப்பையும் எதிர்த்து நடவடிக்கை எடுப்பதில் எந்த ஆட்சேபனையுமிருக்கமுடியாது. இது ஸ்ரீ லங்கா அரசினது கடமையும் உரிமையுமாகும்.
   அதேவேளை இந்திய மீனவர்களின் வாழ்நிலைதான் இவ்வித அத்துமீறலைச் செய்ய அவர்களைத் தூண்டுகிறது என்பதையும் மறுக்கமுடியாது. இவ்வாழ்நிலையை மாற்றியமைக்க வேண்டி யது  இந்திய மத்திய மாநில அரசுகளின் கடமையாகும். அதை யிட்டு ஸ்ரீ லங்கா அரசு என்ன செய்யமுடியும். முன்சொன்ன மூன்று குற்றங்களுக்குமாகத் தண்டிக்கத்தான் முடியும்.
    மீனவர்கள் என்ன செய்வார்கள், கடல் மிதப்புகளை அவர்களால் கண்டு கொள்ள முடியவில்லை ஆகவே எல்லைதாண்டும் பிரச்சனையை மனிதாபிமானத்துடன் தானே அணுகவேண்டும் எனச் சொல்வாரும் உண்டு. இங்குள்ள பிரதான பிரச்சனை வெறுமனே எல்லைதாண்டி மீன்பிடிப்பதல்ல. மீன்பிடி முறைதான் இங்கு பிரதான பிரச்சனையாக உள்ளது. இப் பரவைக் கடல்பரப்பை இரு பகுதி மீனவர்களும் தமக்குள் இணக்கமாகப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக இரு தடவை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இப்பேச்சுவார்த்தைகளின் போது சுமுகமான முடிவுக்கு வருவதில் தடையாக இருந்தது பின்பற்றப்படவேண்டிய மீன்பிடிமுறைதான். பரவைக்கடலுக்கு பொருத்தமற்ற மீன்பிடிமுறையைக் கைவிட இந்திய மீனவர்கள் தயராய் இல்லை, இதைப் பிரயோகிப்பதை அனுமதிப்பதற்கு இலங்கை மீனவர்கள் தயாராய் இல்லை. பரவைக்கடலை ஆழ் கடலாக மாற்றிக்கொள்ளலாமா? முடியாது. இந்திய மீனவர்கள்தான் தமது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்.
   நிலமை இவ்விதம் இருக்கும்போது மனிதாபிமானத்துடன் அணுகுவது என்பது என்ன? குற்றமே இழைக்காத ஒருவன் தெரியாத்தனமாக அல்லது எதிர்பாரச் சூளலின் காரணத்தால் குற்றம் இழைத்திருந்தால் அதை மனிதாபிமானத்துடன் அணுகலாம். தான் இழைப்பது குற்றம் எனத் தெரியாமல் இருந்தாலும் மனிதாபிமானத்துடன் அணுகலாம். ஆனால் தான் இழைப்பது தண்டனைக்குரிய குற்றம் எனத்தெரிந்தும், அதே குற்றத்தைத் திரும்பத் திரும்பத் செய்பவர்களை மனிதாபி மானத்துடன் அணுகுவதென்பது குற்றத்துடன் சமரசம் செய்துகொள்வதாக முடியாதா? இக்கடற்பரப்பைப் பயன் படுத்துவதில் ஒரு இணக்கப்போக்கை கடைப்பிடிப்பதற்காக இரு சாராரும் தமக்குள் நிபந்தனைகளுடன் கூடிய பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்வதே  இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கான மனிதாபிமான அணுகுமுறையாக இருக்கும். இப் பேச்சுவார்த்தை தொடரவேண்டும். ஆனால் பேச்சுவார்த்தையின் முடிவுகளை ஏற்றுக்கொள்ளாமலும், பேச்சுவார்த்தை முடியும் வரை பொறுமைகாக்காமலும் தொடர்ந்தும் முன்சொன்ன மூன்று குற்றங்களையும் செய்துவருவதை என்னவென்று சொல்வது. இதை இலங்கையின் இறைமைக்கும், இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரங்களுக்கும் எதிரான அடாவாடித்தனம் என்று சொன்னால் அது தப்பாகுமா? தெரிந்தும், திட்டமிட்டும் மேற்கொள்ளப்படும் அடாவடித்தனங்களையிட்டு என்ன மனிதாபிமானம் வேண்டிக்கிடக்கின்றது? தண்டனை ஒன்றுதான் ஒரேஒரு தீர்வாக உள்ளது. மாற்றுவழி எதுவும் இல்லை. ஆனால், இவ்விதம் தண்டிப்பதில் ஸ்ரீ லங்கா அரசாங்கம் இலட்சுமணன் கோட்டைத் தாண்டுகிறதா என்பதே இங்குள்ள கேள்வியாகும்.
   எந்தக் குற்றமாக இருந்தாலும் அவற்றிற்கான தண்டனைகளை வழங்குவதில் பிரத்தியேகமான  இலட்சுமண கோடுகள் உண்டு. இந்திய மீனவர்களுக்கு இதுவரை வளங்கப்பட்ட தண்டனைகளை நோக்குவோம். கடலில் வைத்தே சகட்டுமேனிக்குச் சுட்டுத்தள் ளுதல், சுடப்பட்டவர்களின் விவரத்தையோ, சுடப்பட்டதற்கான காரணத்தையோ, சுடப்பட்டவர்களின் பிரேதத்தையோ, சர்வதேச அல்லது இருநாடுகளுக்கும் இடையேயான் உடன்படிக்கைகளின் படி ஒப்படைக்காமல்விடல். படகுகள் சேதப்படுத்தப்பட்டு, மூழ் கடிக்கவும் பட்டுள்ளன. மீனவர்கள் அடித்துத் துரத்தப்பட்டுள் ளார்கள். இலங்கை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடத்தி தண்டிக்கப்பட்டுள்ளார்கள் அல்லது விடுவிக்கப்பட் டுள்ளார்கள். படகுகள் திருப்பிக்கொடுக்கவும் பட்டுள்ளன, முற்றாகச் சேதப்படுத்தவும் பட்டுள்ளன. இத்தண்டனைகளில் பின்னால் சொல்லப்பட்டவை, இலட்சுமணன் கோட்டைத் தாண்டாதவை அல்லது இலட்சுமணன் கோட்டைத் தாண்டாதனவாக தோற்றம் காட்டப்பட்டுள்ளவைகளாகும். 
   ஒட்டுமொத்தமாகச் சொல்லப் போனால், கடற்கொள்ளையரைக் கையாள்வதில் உள்ள இலட்சுமணன் கோடுகள் கூட பிழைப்புக்காக அலாதுபட்டுத்திரியும் தமிழ்நாட்டு மீனவர்களின் விடயத்தில் கைக்கொள்ளப்படவில்லை. மாறாக கடற்கொள் ளையர் நடந்து கொள்வதுபோலவே ஸ்ரீ லங்கா கடற்படை நடந்துவருகின்றது.
    அயலில் உள்ள வல்லமைபெற்ற நாட்டின் பிரஜைகளுடன் ஸ்ரீ லங்கா அரசு இவ்விதம் நடந்து கொள்வதற்கான துணிச்சலை எங்கிருந்து பெற்றுவருகின்றது. இத்துணிச்சல் இலங்கைமக்கள் மத்தியில் காணப்படும் இந்திய எதிர்ப்புணர்வின் வெளிப்பாடா? அல்லது தமிழ்நாட்டை மிரட்டிவைப்பதற்காக இந்தியரசு ஸ்ரீலங்கா அரசை வருடிக்கொடுப்பதால் ஏற்பட்ட துணிச்சலா? முள்ளிவாய்கால் படுகொலைகளுக்காக உலகநாடுகளின் கேள்விக்கணைக்கு உள்ளாகியிருக்கும் ஸ்ரீ லங்கா அரசு, நாளை எல்லைதாண்டும் மீனவர்களின் மீதான தனது எல்லை தாண்டிய நடவடிக்கைகளுக்காக யாரின் முன்நிலையில் கைகட்டி நிற்கப்போகிறது. இந்திய மீனவர்களின் விவகாரத்தில் ராஜபக்‌ஷ அரசாங்கமும், சிறிசேன-ரணில் அரசாங்கமும் ஒரே நிலைப்பாட்டையே பின்பற்றுவதன் காரணந்தான் என்ன? போன்ற கேள்விகள் எழுவது சரியானதுதான்.
    அதேவேளையில், இக்கேள்விகளை விட முக்கியமான விடயம் இந்திய மத்திய மாநில அரசுகள் இந்திய மீனவர்கள் எல்லைதாண்டி அல்லல்படுவதை தடுத்துநிறுத்த எடுத்துவரும் நடவடிக்கைகள் என்னென்ன என்பதேயாகும். தொடர்வோம். 28/08/15-வெள்ளி




No comments:

Post a Comment

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...