Thursday 4 October 2018

அரை சுதந்திர மனிதர்கள்…!


                     அரை சுதந்திர மனிதர்கள்…!

வன்கொலைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்கிற தீர்ப்பினை எதிர்த்து கிளர்ச்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அதை வலுப்படுத்தவும், அச்சட்டத்தையும் தாண்டி தாழ்த்தப்பட்டபழங்குடியினமக்களை அனைத்து விதமான சுரண்டலில் இருந்தும் விடுதலை செய்வதற்காகவுமான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேவை அதிகரித்துள்ளது. எஸ்சி, எஸ்டி என்கிற அடையாளத்தைச் சுமந்து நிற்பதே ஒரு வன்கொடுமை தான்; இதனைப் புரிந்து கொள்ள டாக்டர். அம்பேத்கர் கூறுவதைப் பார்ப்போம்: “சுதந்திரம் என்பது யாதெனில் ஒருவன் மற்றொருவன் மீது ஆதிக்கம் செலுத்துவதை ஒழிப்பது தான்எனக்கூறுகிறார்.
அதாவது, இந்தியாவில் குடிமகனாக இருக்கின்ற பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் சட்டத்திற்கு முன்னால் முழு சுதந்திர மனிதராகவும், சமூக வாழ்க்கை நடைமுறையில் அரை சுதந்திர மனிதராகவுமே இருக்கின்றனர்.
பட்டியலினத்தவரின் சமூக உளவியலும்பொதுப்புத்தியும்
தாழ்த்தப்பட்டபழங்குடியினர் சமூக வாழ்க்கை நடைமுறையில் சந்திக்கும் உளவியல் பிரச்சனைகள் மிகவும் கொடுமையானது. தன் வாழிடத்தில் நிலவும் தீண்டாமை மற்றும் சாதிய கொடுமைகளுக்கு அஞ்சியோ அல்லது தாழ்த்தப்பட்டபழங்குடி என்கிற அடையாளத்திலிருந்து விடுபட்டு வாழவோ விரும்புகின்ற பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் நகர வாழ்க்கையில் தப்பித்துக் கொள்ளலாம் என்பது உண்மை தான். ஆனால், தான் யார் என்பதை பிறருக்கு தெரியப்படுத்தாமல் இருப்பதே நல்லது என்று தாழ்த்தப்பட்டபழங்குடியினரில் பலர் தப்பித்துக் கொள்ள நினைக்கின்றார்!
ஆனால், இந்த தப்பித்தல் நாடகம் நீண்ட நாள் தொடர சூழல் அனுமதிப்பதில்லை; இன்னாரென்று தெரிந்தவுடனேயே! அவரைச் சுற்றிப்பழகிய சமூகத்தில் உள்ள சக நட்பு வட்டாரத்தில் ஒருவிதமான இறுக்கம் பற்றிக் கொள்ளத் துவங்கி விடுகிறது; தான் எப்போது வேண்டுமானாலும் ஒதுக்கப்படலாம் என்கிற அச்சத்தை சுமந்து கொண்டே திரிகின்ற பட்டியலினத்தவருக்கு இன்னமும் இந்த சமூகம் நம்பிக்கைக்குரியதாக தோன்றவில்லை!
சமூகத்தில் பல்வேறு சாதியினர் தங்கள் பெயருக்குப் பின்னால் பெருமிதத்தோடு அடைமொழி இட்டுக் கொள்வதைப் போல பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் அடைமொழியிட்டு பெருமையாக அழைத்துக்கொள்ள முடியாதல்லவா?! ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் தனது சாதிப்பெயரைக் குறிப்பிட்டு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதே இழிவு என்று கருதக்கூடிய சூழலில், சமூகத்தின் பிற பகுதியினர் தங்கள் சாதியின் பெயரை அடைமொழியாக வைத்துக் கொள்வதே கௌரவம் என்று கருதுவதும்; அதனை பொது வெளியில் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்வதும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மீது மறைமுகமாக நிகழ்த்தப்படுகின்ற ஒரு வகையான உளவியல் வன்கொடுமையன்றி வேறென்ன?

பொதுச்சமூகத்தின் பொதுப்புத்தி

தாழ்த்தப்பட்டபழங்குடியினர் மீதான சமூகத்தின் பொதுப்புத்தி எவ்வாறு இருக்கிறது என்பதற்கு ஓர் உதாரணம். பொதுவாக ஒருவரின் வீட்டிலோ அல்லது வேலைபார்க்கும் அலுவலகத்திலோ மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டுமானம் மற்றும் இன்னபிற மராமத்துப் பணிகளுக்கோ அல்லது துப்புரவுப்பணி, சமையல் பாத்திரங்கள் கழுவுதல், துணி துவைத்தல் போன்ற பணியாள் வேலைகளுக்கோ சமூகத்தின் எந்தவொரு பிரிவினரிலிருந்தும் கூலிக்கு ஆளைக் கண்டறிந்து வேலை வாங்கிக் கொள்ளலாம்.
ஆனால், மேற்குறிப்பிட்ட இடங்களில் துப்புரவு பணி மேற்கொள்ளவோ, கழிவறையை சுத்தம் செய்யவோ, மலத்தொட்டியை சுத்தம் செய்யவோ, பாதாளச்சாக்கடை அடைப்பை எடுக்கவோ, தாழ்த்தப்பட்டபழங்குடியினரில் இந்தப் பணியைச் செய்ய முன்வருகின்ற அதிலும், குறிப்பாக அருந்ததியர், காட்டு நாயக்கர், பறையர் போன்றவர்களையே தேடிக் கண்டறிந்து வேலை வாங்குகின்ற அவலமான நிலைமை தான் பொதுவான நடைமுறையாக உள்ளது.
இங்கே குற்றவாளி தனி நபரல்லஇந்தப்பொதுச் சமூகமே குற்றவாளியாக பொறுப்பேற்க வேண்டும் !

மூவகை அதிகாரக் கூட்டணி
தாழ்த்தப்பட்டபழங்குடியினர் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் சம்பந்தமாக தேசிய குற்றவியல் பதிவுக்காப்பக ஆணையம், சமீபத்தில் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தரும் தகவல்கள் இதோ
கடந்த 2016-ஆம் ஆண்டு நாடு முழுவதும் தலித்கள் மீது வன்கொடுமைகள் நடத்தப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 40,801. இதில், முழுவதுமாக விசாரணை நடைபெற்று நடவடிக்கை எடுக்கப்பட்டவை (தண்டனை அல்ல) 14,615. 2016 -ஆம் ஆண்டு வரை நடவடிக்கை எடுக்கப்படாமல் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 1,29, 831. இது 89.6சதவீதம் ஆகும்.
தவிர ஒவ்வொரு 13 நிமிடத்திற்கும் ஒரு தலித் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாகவும், நாளொன்றுக்கு 7 தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதாகவும், வாரத்திற்கு 15 பேர் படுகொலை செய்யப்படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
அதே போல, கடந்த 2016-ஆம் ஆண்டு நாடு முழுவதும் பழங்குடியினர் மீது நிகழ்த்தப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 6,568. முழுமையாக விசாரணை நடைபெற்று நடவடிக்கை எடுக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 2,895. 2016-ஆம் ஆண்டு வரை நிலுவையிலுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 20,386. இது 87.1சதவீதம் ஆகும்.
ஒரு மணி நேரத்திற்கு ஒரு வன்கொடுமை, பழங்குடியினர் மீதும் நிகழ்த்தப்படுவதாகவும், வாரத்திற்கு 19 பழங்குடியினப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதாகவும், மாதத்திற்கு 12 பேர் படுகொலை செய்யப்படுவதாகவும், அந்த அறிக்கை கூறுகிறது. (தி வீக், ஏப்ரல்)
இதுமட்டுமல்ல கையில் மலம் அள்ளுதல், பாதாளச்சாக்கடை பணிகள் போன்றவையும் 2015 -வன்கொடுமை தடுப்பு திருத்தச்சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனாலும், இந்தியா முழுவதும் இத்தகையப் பணிகளில் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக சட்டவிரோதமாக அரசே வேலை வாங்கி வருகிறது.
காவல்துறையில் நிலவும் சாதிய வன்மத்தைச் சொல்லவே வேண்டாம்.
எனவே, இத்தகைய வன்கொடுமைகள் ஒருபக்கம் சாதிய ஆதிக்க சக்திகளால் நடத்தப்படுவதும் அதற்கு உரிய நியாயம் கிடைக்கச் செய்வதில் உறுதியான நடவடிக்கை எடுக்க மறுப்பதோடு, மறுபக்கத்தில் தாமே தாழ்த்தப்பட்டபழங்குடியினர் மீது வன்கொடுமைகளை பல்வேறு சந்தர்ப்பங்களில் நிகழ்த்துபவைகளாக அரசின் பல்வேறு துறைகளிலும் மற்றும் அடுக்குகளிலும் உள்ள அதிகார வர்க்கமும், காவல்துறையும் உள்ளன.
மொத்தத்தில் தாழ்த்தப்பட்டபழங்குடியினர் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள் நீடித்து வருவதோடு அவை அதிகரித்து வருவதற்கு சாதிய ஆதிக்க சக்திகள் -அதிகாரவர்க்கம்காவல்துறை ஆகிய இந்த மூவகை கூட்டணி பெரும் பங்காற்றுகின்றது என்பதே உண்மையாகும்!
எனவே, இந்திய சமூகத்தில் தாழ்த்தப்பட்டபழங்குடியினர் மீது உளவியல் மற்றும் உடல் ரீதியாகவோ எப்போதாவது வன்கொடுமைகள் நிகழ்த்தப்படுவது என்பதல்ல; மாறாக வன்கொடுமைகளால் முற்றுகையிடப்பட்ட வாழ்க்கை அவர்களுடையது!

உழைக்கும் வர்க்கம்

இப்படிப்பட்டசூழ்நிலைமையில் தான் உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கெதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இப்போராட்டங்களை தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி மற்றும் தலித் அமைப்புகளும், இடதுசாரிகள் மற்றும் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் முன்னெடுத்தும், போராடியும் வருகின்றன. ஆனால், இதனை ஏதோ ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் சந்திக்கும் சாதியப் பிரச்சனையாகவும்அந்த வரையறைக்குள் மட்டும் குறுக்கிப் பார்க்கின்ற தன்மையும் நிலவுகிறது. இதன் காரணமாகவே, இதுவொரு அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தின் பிரச்சனையாக பார்க்கப்படாத பலவீனம் உள்ளது!
மேற்கண்ட தீர்ப்பினால் பாதிக்கப்படுகின்றவர்கள் சாதியால் தாழ்த்தப்பட்டபழங்குடியினராக இருந்தாலும் அவர்கள் கிராமப்புறங்களில் பெரும்பகுதி விவசாயக் கூலிகளாகவும், நகர்ப்புறங்களில் துப்புரவு பணி உள்ளிட்ட வேலைகளைப் பார்க்கும் அடித்தட்டு வர்க்கமாகவும், உதிரிப் பாட்டாளிகளாகவும், சிறுபகுதி அரசு ஊழியர்களாகவும் இருக்கின்றனர்.

எனவே, உச்சநீதிமன்றத் தீர்ப்பானது ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு எதிரானது என்பதாக குறுக்கிப் புரிந்து கொள்ளாமல், தொழிலாளி வர்க்கத்தின் ஒரு கணிசமான பகுதியினரின் உரிமையைப் பறிக்கிறது என்பதை உணர வேண்டும். ஆகவே, இந்தியாவிலுள்ள ஒட்டுமொத்த தொழிலாளி மற்றும் விவசாய வர்க்கத்தின் ஆதரவும், ஒருமைப்பாடும் இப்பிரச்சனையில் அவர்களுக்கு அவசியமாகிறது. அதுவே, இப்பிரச்சனையை உழைக்கும் வர்க்கத்தின் பிரச்சனையாக முன்னெடுக்க உதவி செய்யும்.
மார்க்சின் கூற்றின்படி இந்தியாவில் தொழிலாளி வர்க்கத்தின் முன் பெரும் கார்ப்பரேட் முதலாளித்துவத் தன்மையை மட்டுமல்லவழக்கொழிந்த நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறைகளின் எச்சங்களையும் ஒழிக்க வேண்டிய இரண்டு மாபெரும் வரலாற்றுக் கடமைகள் உள்ளன.
இதில், நிலபிரபுத்துவத்தை ஒழிப்பதென்பது அதன் கொடுங்கோன்மையின் வடிவங்களாகத் திகழ்கின்ற சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதுடன் இணைந்ததாகும்.
எனவே, தாழ்த்தப்பட்டபழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகக் செய்யும் விதத்தில் அமைந்த நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான போராட்டம் என்பது ஒடுக்கப்பட்ட பட்டியலின மக்களின் உரிமைப் பாதுகாப்புக்கான போராட்டம் மட்டுமல்ல; அது கீழ்நிலையிலுள்ள தொழிலாளி வர்க்கத்தின் மீது ஆளும் வர்க்கம் தொடுக்கின்ற தாக்குதலை எதிர்த்த வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியே ஆகும்.
                                                  கட்டுரையாளர் : சிபிஐ(எம்) மாவட்ட செயற்குழு உறுப்பினர், மதுரை மாநகர்

நன்றி: https://theekkathir.in/2018/05/14/அரை-சுதந்திர-மனிதர்கள்/                                       

No comments:

Post a Comment

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...