Monday 15 October 2018

“அறமும் போராட்டமும்” நூல் பற்றிய அறிமுகம்”


அறமும் போராட்டமும்நூல் பற்றிய அறிமுகம்
            (1) நூலின் களம்:- நூல் தொன்மைக் காலந்தொட்டு தெற்காசிய சமூகத்தின் சித்தாந்தத்தில் ஏற்பட்டு வருகின்ற வளர்திசை, வளர்தடை மாற்றங்களின் வரலாறு பற்றிய ஓர் ஆய்வு நூலேயாகும். ஒட்டுமொத்த மனித சமூகம் பற்றிய ஆய்வு நூலல்ல.  தெற்காசிய சமூகம் பற்றியது.
            (2) நூலின் மையப் பொருள்:- அறமும் போராட்டமும்ஒரு தத்துவார்த்த நூலோ, அரசியற் கோட்பாட்டு நூலோ, பொருளாதார அல்லது அரசியல் பொருளாதார நூலோல்ல. பண்பாட்டுக் கட்டுமானத்தையும், பண்பாட்டுக் கட்டுமானத்துடன் தொடர்புபட்ட சித்தாந்தத்தையும் பற்றிய வரலாற்று ஆய்வு நூலேயாகும். இதனால் நூலின் உண்மையான தலைப்பு கூவம் நதி அழுக்காகியது எவ்விதம்? யாரால்? என்பதேயாகும். கூவம் நதியென்பது இந்திய உபகண்டப் பண்பாடாகும். இதுதான் நூலின் மையப்பொருளாகும்.
            (3) நூலின் உள்ளடக்கம்:- நூல், இரு பரஸ்பர தொடர் நிகழ்வுப் போக்குகளையும், ஏழு விவகாரங்களையும் உள்ளடக்கியதாகும். அவையாவன:
3.I.)  நிகழ்வுப் போக்குகள் (Phenomena) இருவகைப்படும்.
            3.I.1வது - பண்பாட்டுக் கட்டுமானத்திற்கும் அரச கட்டுமானத்திற்கும் இடையேயான உறவுகளின் இயங்குமுறை (Dynamics) பற்றியதாகும்.
            3.I.2வது - பண்பாட்டுக் கட்டுமானத்திற்கும் சித்தாந்தக் கட்டுமானத்துக்கும் இடையேயான உறவுகளின் இயங்குமுறை (Dynamics) பற்றியதாகும்.
3-II. விவகாரங்கள்  -  7 வகைப்படும்.
3.II.1 வது - விவகாரம்:- அறமும் வன்முறையும்
3.II.2 வது விவகாரம்:- பகிர்ந்துண்டு வாழ்தலும் இசைபட வாழ்தலும்
3.II.3 வது விவகாரம்:- மக்கள் கடவுளும், ஆளும் வர்க்கக் கடவுளும்.
3.II.4 வது விவகாரம்:- பெண்விடுதலையும் தாய்வழிச் சமூகமும்
3.II.5 வது விவகாரம்:- தாய்மொழிப்பற்றும் அதன் வளர்தடை அம்சங்களும்
3.II.6 வது விவகாரம்:-  மொழிவழித் தேதெற்சிய ஒன்றியமும்.காசியங்களும்
3.II.7 வது விவகாரம்:- தலித்தியம் எதிர் பிராமணியம்
3.II.8 வது விவகாரம்:- மதசார்பின்மையும், மத நிறுவன அதிகாரநீக்கமும். 
3.I- நிகழ்வுப் போக்குகள்
3.I-1 வது) பண்பாட்டுக் கட்டுமானத்தின் மேலாண்மை
            பண்பாட்டுக்கட்டுமானம், அரசகட்டுமானம் ஆகிய இரண்டிற்கும் இடையேயான உறவுநிலையை அல்லது சமபலநிலையைப் பிற பிராந்திய நிலைகளுடன் ஒப்பிடும்போது, ஆசியப் பண்பாட்டுக்கட்டுமானம் மிகவும் பலமிக்கதாய் இருந்து வருகிறது. இதில் தெற்காசியா, பிற ஆசிய நாடுகளையும் விட முதன்மை நிலையில் இருந்து வருகிறதெனக் கூறலாம். தெற்காசியாவின் (இந்திய உபகண்டத்தின்) ஆதிப் பொதுவுடமை சமூகம் மிகவும் வளர்ச்சி பெற்றதாகவும், அறிவு பூர்வமானதாகவும், நாகரீகம் மிக்கதாகவும், நீண்டகாலம் நீடித்ததாகவும் இருந்துள்ளதே இதற்கான காரணமாகும். அரசுகளற்ற இச்சமூகத்தின் முன்கூறிய வளர்திசைக் குணாம்சங்களுக்கான காரணம் அதன் பண்பாட்டுக் கட்டுமானத்தின் நிறைஇயல்புகளேயாகும். இந்திய உபகண்டத்தின் மாறிலிக் காலகட்டங்கூட சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு நீடித்ததாக இருந்துள்ளது. அரசற்றநிலைச் சமூகம் அரசுடன் கூடிய சமூகமாக மாறுவதற்கான காலமே மாறிலிக் காலகட்டமென குறிக்கப்படுகிது.
                இக்காலகட்ட இந்திய உபகண்டத்தை பௌத்த இந்தியா எனக்கூறலாம். கண ஆட்சிகள், மக்கள் ஜனநாயகக் குடியரசுகள்,  இராணுவ ஜனநாயகக் குடியரசுகள், சுதந்திர குறுநில மன்னராட்சிகள், ஆகிய வடிவங்களே இம் மாறுநிலைக் காலகட்டத்தின் அரச வடிவங்களாகும். இவைதான் முதற்தலைமுறை ஜனநாயக மத்தியத்துவஅர வடிவங்களாகும். இக்காலகட்டத்தில் மக்கள் விரோத சர்வாதிகார அரசுகள் தோன்ற ஆரம்பித்துவிட்டன. இதனால் மக்கள் ஜனநாயக அரச வடிவங்கள் பாதுகாப்பாக இருக்கக்கூடிய முறையில் பண்பாட்டரங்கை செழுமைப்படுத்துவதற்காக, மிக அழகாக நெறிப்படுத்தவும், கூர்மைப் படுத்தவும்பட்ட, சமூகத்தில் ழ்ந்து காலூன்றக்கூடிய நீண்ட நோக்குடைய முறையிலான தொடர் சித்தாந்தப் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. தொன்மைக்கால லோகாயதம், சிரமணம், பௌத்தம், சமணம், ஆசிவகம், தொல்காப்பியம், சங்ககால இலக்கியங்கள், சித்த மார்க்கம் ஆகியவை இவற்றில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியனவையாகும். தொன்மைக்கால லோகாயதர்களே இதில் முதன்மையானவர்களாகும்.
                இம்முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டன. பௌத்த இந்தியாவும் தோற்கடிக்கப்பட்டது. ஆண்டான் அடிமை சுபாவமுள்ள நிலமானிய மக்கள் விரோத அரசுகள், அங்கொன்றும் இங்கொன்றுமாக உருவாகி இந்திய உபகண்டம் எங்கனும் பரவின. இவ்அரசுகள் தமக்குச் சாதகமான புதியதோர் பண்பாட்டரங்கை முதன்மைநிலைக்குக் கொணர்ந்த. பிராமணியத்தின் தலைமையிலான இப் பண்பாட்டரங்க இந்தியாதான் பிராமணிய இந்தியாவாகின்றது. இன்னும் கூறுவதனால் மதவாத இந்தியாவாகின்றது. மதவாதத் தலைமையிலான புதிய பண்பாட்டரங்கைத் தோற்றுவிப்பதில் அரச வன்முறை பிரயோகிக்கப்பட்டாலும், பண்பாட்டரங்கிலான சித்தாந்தப் போராட்டமே, இங்கு பிரதான பங்குவகித்தது. சனாத மற்றும் சதுர்வர்ண பண்பாடுகளே இப்புதிய பண்பாட்டுக் கட்டுமானத்தின் சித்தாந்தங்களாகும். சாணக்கியமும் (பிராமணிய வன்முறை) செயற்பட்டது. ஆனாலும் அதைவிட மூர்க்கமாகச் செயற்பட்டது சனாதனதர்மமும் சதுர்வர்ணமுமேயாகும்.
                இருந்தும் இவர்களால் தமக்கு முன்னைய பண்பாட்டரங்கை (மதவாதமற்ற) முற்றாக அழிக்கமுடியவில்லை. இதப் ஆனாலும்கூட அரசுகளற்ற பண்பாட்டுக் கட்டுமானம் இன்னமும் வீரியமிக்க எதிரணிக் கட்டுமானமாக தொடரவே செய்கின்றது. தொன்மைக்கால இந்தியத் தொன்மைப் பண்பாட்டின் வீரியத்தைக் குறைக்கும் வல்லமைதான் இன்றைய தெற்காசிய அரச கட்டுமானங்களுக்கு உண்டேதவிர அதை அழிக்கும் வல்லமையில்லை. தனது இருத்தலுக்காக சுமார் ஆயிரம் வருட பழமைமிக்க பிராமணியக் கட்டுமானத்தை (மதவாத) முழு வீச்சுடன் திணிப்பதைத் தவிர (மக்கள் மீது) அரசிற்கு மாற்றுவழி எதுவுமில்லை.
                சமூகப் புரட்சியாளர்களும், சோஷலிஸ ஜனநாயகப் போராளிகளும், முதலாளித் துவ ஜனநாயக விரும்பிகளும், தேசிய ஜனநாயகப் போராளிகளும், சாதிய ஒழிப்புப் போராளிகளும், பாலின சமத்துவப்போராளிகளும், இந்த உண்மையிருப்பைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்திய உபகண்ட தொன்மைக்கால பண்பாட்டரங்கின் சிறப்பான மூலக் கூறுகளைப் புரிந்துகொள்ள வேண்டும்.
                மக்கள் விரோத, மக்கள் ஜனநாயக விரோத அரசுகளின் தோற்றத்திற்கு முன்னைய இம் மூலக்கூறுகளின் சிறப்பு என்னவென்றால் அவைதான் தொன்மைக்கால சோஷலிஸ ஜனநாயக சித்தாத்தங்களாகும். இப்புரிதலின் அடிப்படையில் மக்கள் இயக்கங்களை உருவாக்கவேண்டும். இம்மக்கள் இயக்கங்களை மக்கள் ஜனநாயக விரோத முதலாளித்துவ சர்வாதிகார பிராமணிய பண்பாட்டுக் கட்டுமானத்துக்கு (மதவாத) எதிரான கூர்மையான, கடுமையான ஒரு தொடர்போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டும். சோஷலிஸ அரசு உருவான பின்பும் இப்போராட்டம் தொடரவேண்டும். இன்று அரசுக்கு எதிராக நடைபெறும் இப்போராட்டம் நாளை சோஷலிஸ ஜனநாயக அரசால் நடைபெறும் போராட்டமாக மாறவேண்டும். அப்போதுதான் தெற்காசிய சமூகம், சோஷலிஸ சமூகமாக மாறுவது உறுதி செய்யப்படும்.
       பிராமணிய பண்பாட்டுக் கட்டுமானம் சாராம்சத்தில் அல்லது அடிப்படையில் மதவாதக் கட்டுமானமேயாகும். இந்திய உபகண்டத்தின் மீது படையெடுத்த அந்நியர்கள் அந்நிய மதத்தைச் சேர்ந்தவர்களாய் இருந்தது பிராமணிய-பண்பாட்டுக் கட்டுமானத்தின் வளர்ச்சியை ஊக்கிவிக்கும் காரணிகளில் ஒன்றாய் அமைந்தது. 
3.I-2வது) பண்பாட்டுக் கட்டுமானத்துக்கும் சித்தாந்தக் கட்டுமானத்துக்கும் இடையேயான உறவுகள்.
                      ஒரு சமூகத்தின் பண்பாட்டுக்கட்டுமானமென்பது மக்களின் அன்றாட வாழ்முறைகளின் ஒழுங்குகளைக் கொண்டு தொகுக்கப்பட்ட சுய இயக்கமுள்ளதொரு அமைப்பெனச் சுருக்கமாகக் கூறலாம். சுய செயற்பாடுடையது என்பது தனித்து நிற்பதல்ல. சுய இயக்கமுள்ள பிற கட்டுமானங்களுடன் பின்னிப் பிணைந்தது. அரசியல் கட்டுமானம், அரச கட்டுமானம், அறிவியல் கட்டுமானம், பொருளாதாரக் கட்டுமானம் ஆகியவை அப்பிற கட்டுமானங்களில் சிலவாகும். பண்பாட்டுக்கட்டுமானம் உட்பட இவ் அனைத்துக் கட்டுமானங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட, ஆனாலும் தத்தமக்கேஉரிய தனித்துவமான சித்தாந்தங் களைக் கொண்டன.
        அரசற்ற சமூகத்தின் தோற்றத்துடன் அரசகட்டுமானம் இல்லாதொழிந்துவிடும். அதுதொடர்பான சித்தாந்தங்களும் கூடவே இல்லாதுபோய்விடும். வரலாற்று நூல்களில் மட்டும் காணப்படுமொன்றாக மாறிவிடும். பண்பாட்டுக் கட்டுமான சித்தாந்தத்தின் பகைபடு குணாம்சமுள்ள இரட்டைத் தன்மைகள் இல்லாது போய்விடும். அடுத்த பக்கத்தில் மூலதனத்தின் கோரப்பிடியில் சிக்கியுள்ள சமூகம் முழுமைக்கும் பொதுவான அறிவியல் மற்றும் பொருளியல் கட்டுமானங்களில்; பொருளிய சித்தாந்தம் சமூக வளர்ச்சிக்கு நேரெதிரான தன்மைகளைக் கொண்டதாகவுள்ளன. அறிவியல் சித்தாந்தமோ போகிறபோக்கில் மக்களுக்கு சில நன்மைகள் செய்கின்றன. ஆனால் மூலதனத்தின் அழிவின் பின்னர் இவ்இரு கட்டுமானங்களும் அவற்றின் சித்தாந்தங்களும், சமூகத்துக்குப் பொதுவானதாக மாறிவிடும். பண்பாட்டரங்கினில் சேர்க்கப்பட்ட புதிய மரபுகளாகிவிடும். மக்கள் நலனுக்கு எதிரான கூறுகள் எதுவுமின்றி பண்பாட்டரங்கினில் காணப்படும் சித்தாந்தங்களே சமூகத்தின் ஒட்டுமொத்த சித்தாந்தமாகும். இறுதியில் நிலைத்து நிற்கப்போவதுவும் இதுதான்.

3.II.1 வது - விவகாரம்:- அறமும் வன்முறையும்
              (1) அறமும் வன்முறையும்:- சமூகப் போராட்டங்களில் அறம்’, ‘வன்முறைஎன இரு எதிரெதிர் முகாம்கள் நிலவுகின்றன எனக்கூறுவது உண்மையல்ல, அவை வெறும் கற்பிதங்களே.
            உயிர்களின் பரிணாமவளர்ச்சிக் கோட்பாட்டை முன்நிறுத்தும் கூர்ப்பு விதிகளில் ஒன்றுதான் போராட்டமாகும். போராட்டமில்லாமல் வளர்ச்சியில்லை. மாற்றம் இல்லை, வளர்ச்சிக்குத்தடையான பழையன அழிவதுமில்லை, புதியன பிறப்பதுவுமில்லை. போராட்டம் இல்லையென்றால் அனைத்து உயிரிகளும் (சமூகமும் ஓர் உயிரி) ஸ்தம்பித்துவிடாது; மாறாக அவை அழிந்துவிடும். போராட்டங்களைத் தடுக்கவும், இல்லாமல் செய்யவும்முடியும் எனக்கருதுவது வெற்றுக் கற்பனைகளே. இதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகவே முடியும். இயற்கையும், இயற்கையின் ஓர் அங்கமான சமூகமும் முன்னோக்கி நகர்வதே, வளர்திசைக் குணாம்சத்தை நோக்கிப் பயணிப்பதே, கூர்ப்பு விதியின் நியதியாகும். இந்நியதியை நிறைவேற்றுவதற்கான போராட்டங்கள் அனைத்தும், தம்மட்டில் தாமேயொரு நல்லறப் போராட்டமாகும். மறுபுறத்தில் இந்நியதிக்கு எதிரான போராட்டங்கள் அனைத்தும் தம்மட்டில்தாமே ஓரு தீயறப் போராட்டங்களாகும். ஆகவே சமூகப் போராட்டங்களை நல்லறப் போராட்டம், தீயறப் போராட்டம் என வகைப்படுத்துவதற்குப் பதிலாக அறவழிப் போராட்டம், வன்முறைப் போராட்டம் என வகைப்படுத்துவது அபத்தமாகும். அதாவது போராட்டத்தில் பின்பற்றப்படும் வழிமுறைகளை வைத்துக்கொண்டு போராட்டங்களின் சமூக பங்களிப்புகளை (குணாம்சத்தை) வகைப்படுத்த முடியாது வகைப்படுத்தவும் கூடாது.
            நல்லறப் போராட்டங்களாயினும் சரி, தீயறப் போராட்டமாயினும் சரி இரு வகைப் போராட்டங்களுக்கும் இரு வடிவங்கள் உண்டு. ஒன்று வன்முறை வடிவம், மற்றையது (வன்முறையற்ற) அல்-வன்முறைவடிவம். மாறாக அறவழிவடிவம் என்றொன்று இல்லை. ஏனெனில் வன்முறையும் தன்மட்டில் தானே ஒரு அறந்தான். இவ் அறம் (வன்முறை) நல்லறமா தீயறமா என்பதைத் தீர்மானிப்பது போராட்டத்தின் குணாம்சம்தான். அதாவது போராட்டம் நல்லறத்துக்கான் போராட்டமா இல்லையா என்பதுதான்.
நல்லறப் போராட்டங்களின் குறிக்கோள் இரண்டு;
(1) வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் வளர்தடை சக்திகளை அழிப்பது.
(2) அடுத்தகட்ட வளர்ச்சியை முன்னெடுக்கும் வளர்திசை சக்திகளை வளர்ப்பது.
                ஆகவே நல்லறப் போராட்டங்களில் ஈடுபடுவோர் வன்முறை வழியையும், அல்-வன்முறை வழியையும் பின்பற்றுவார்கள், பின்பற்றவேண்டும்.
அடுத்த பக்கத்தில் தீயறப் போராட்டங்களில் ஈடுபடுவோரின் குறிக்கோள் ஒன்றே ஒன்றுதான். சமூகமாற்றத்தையும், வளர்ச்சியையும் எவ்விதமும் என்னவிலை கொடுத்தும் தடுத்து நிறுத்துவதுதான். ஆகவே, இவர்கள் வன்முறைவடிவம் ஒன்றை மாத்திரமே பின்பற்றுபவர்களாய் இருப்பார்கள்.
3 .II.2 வது  பகிர்ந்துண்டு வாழ்தலும் இசைபட வாழ்தலும்
                இது இரு கோணத்தில் இருந்து முன்வைக்கப்பட்டுள்ளது. ஒன்று ஒரு வாழ்க்கை நெறியாக; மற்றையது ஓரியல்மைய ஐந்தியல் கோட்பாட்டிற்குத் https://vidiyalgowri.blogspot.in/2017/04/ ) துணைபுரியும் ஒரு அரசியல் ஒழுங்காக. 
முதலில் ஒரு வாழ்க்கை நெறியாக நோக்குவோம்.
                இந்திய உபகண்ட சமூகத்தை வழிநடத்துவதிலும், நெறிப்படுத்துவதிலும் அரசு கட்டுமானத்தைவிட பண்பாட்டுக்கட்டுமானமே அதிக பங்காற்றிவருகிறது என்பதே நூலின் ஒட்டுமொத்தக் கருத்தாகும். வர்க்கஅதிகாரம் தோன்றும்வரை இந்திய உபகண்டத்தில் நிலவிய ஆதிப் பொதுவுடமைச் சமூகத்தின் பண்பாட்டுக் கட்டுமானம் மிகவும் பலமிக்கதாக அமைந்திருந்ததே அதற்கான காரணமாகும். இந்திய உபகண்ட சமூகத்தில், அந்நிய ஆக்கிரமிப்பு தவிர்ந்த ஏனைய நேரங்களில், வர்க்க ஆட்சிகள் தோன்றும் போதும் மாறும்போதும் அவை புரட்சிகளாக நடக்கவில்லை மாறாக படிப்படியான மாற்றங்களாகவே (Evolution) நடந்துள்ளன.
                அந்நிய ஆக்கிரமிப்பின்போது ஒரு குறிப்பிட்ட சமூகப்-பொருளாதாரக் கட்டுமானத்தை வீழ்த்திவிட்டு இன்னோர் கட்டுமானத்தை நிறுவும் போதோ அல்லது மாற்றியமைக்கும் போதோ மாத்திரந்தான் அரச வன்முறை மிகத் தீவிரமாகவும், நேரடியாகவும் பிரயோகிக் கப்பட்டிருக்கின்றது. ஏனைய காலங்களில் அரசு, தனது வன்முறைக் கட்டுமானத்தை ஒரு றிசர்வ் (reserve) அணியாகப் பேணிய வண்ணம், வெறுமனே ஒரு மேற்பார்வையாளனாகவும், பண்பாட்டுக்கட்டுமான நிர்வாகியாகவுமே செயற்பட்டுவந்துள்ளது. பண்பாட்டுக் கட்டுமானத் தால் தீர்க்க முடியாதளவிற்கு முரண்பாடுகள் சுர்மையடையும்போது மாத்திரமே அரசின் வன்முறைக்கருவி பயன்படுத்தப்படுகின்றது.
                பண்பாட்டுக் கட்டுமானத்தில் நடந்துவரும் இத் தொடர் போராட்டத்தில் அதிஉயர் ஆதிக்கசக்தியாக பூதாகரமாக வளர்ந்துநிற்பது மதவாதத்தை அடிப்படையாகக் கொண்ட பிராமணிய பண்பாட்டுக் கட்டுமானமேயாகும். இதன் அர்த்தம் பிராமணியம் மட்டுந்தான் இந்தியத் துணைக் கண்டத்தில் வளர்தடைத் தன்மைமிகு ஒரே மதவாதப் பண்பாட்டுக் கட்டுமானம் என்பதல்ல. வேறும்பல மதவாத வளர்தடைப் பண்பாட்டுக் கட்டமானங்களும் உண்டு. ஆனாலும், பிராமணியம்தான் இவற்றுள் தலையானது. பிற வளர்தடைப் பண்பாட்டுக் கட்டுமானங்களைக் கட்டுப்படுத்துவதிலும், உள்உறிஞ்சிக்கொள்வதிலும், அவற்றுடன் இணைந்துகொள்வதிலும் மிகவும் சூழ்ச்சித்திறன் மிக்கதாக இருந்துவரு கின்றது. பௌத்த இந்திய உபகண்டத்தின் (சிரமண இந்தியா) வீழ்ச்சிக்குப் பின்னர் படிப்படிப்படியாக உருவாகிவந்த பிராமணிய இந்திய உபகண்டம் இன்றுவரை பிராமணிய இந்திய உபகண்டமாகவே நிலைத்து நிற்பதற்கான காரணம் இதுதான்.
                பின், பௌத்த இந்தியாவின் உபகண்டத்தின் பொருளிய உற்பத்தி முறைமையும், சுரண்டல்முறைமையும், அரசஅதிகார கட்டுமானமுறைமையும் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகியிருந்த போதிலும் பிராமணியப் பண்பாட்டுக் கட்டுமானம் சிற்சில மாற்றங்களுடன் இன்னமும் தொடரவேசெய்கின்றது. வடிவங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன, ஆனால் சாராம்சம் ஒன்றாகவே உள்ளது. பிராமணிய சிந்தனைப் பள்ளிக்கெதிரான பல சிந்தனைப்பள்ளிகள் செயற்பாட்டில் இருந்தாலுங்கூட பண்பாட்டரங்கினில் திருப்புமுனை மாற்றம் இன்னமும் ஏற்படவில்லை. இந்திய உபகண்டசமூகம் சுமார் ஆயிரம்வருடங் களுக்கு மேலாக, தத்தமக்குள் முரண்பாடுகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் கொண்ட பலநூறு சமூகக்குழுமங்களின் வசிப்பிடமாக இருந்துவருகிறது. பிராமணிய பண்பாட்டுக் கட்டுமானம் இந்திய உபகண்ட அதிகார அரங்கினில் இருந்து வீழ்த்தப்படும்வரை இந்நிலை தொடரும். அவ்விதம் வீழ்த்துவது இன்னோர் மதவாதமாக இருக்கக் கூடாது. பாக்கிஸ்தான், பங்காளதேஷ், மாலைதீவு ஆகிய நாடுகளில் பிராமணியம் விழ்ந்துவிட்டது உண்மை, ஆனால், மக்களுக்கான பண்பாட்டுக் கட்டுமானம் அங்கெல்லாம் உருவாகவில்லை. ஆகவேதான் மதவாதக் கட்டுமானத்துக் குள்ளேயே, பகிர்ந்து வாழ்தலும் இசைபட வாழ்தலும்எனும் வாழ்க்கை முறையை முன்னெடுத்துச் செல்லல் அவசியமாகின்றது.
ஆகவே, நல்லறப் போராட்டங்களில் ஈடுபடுவோர் ஒருபுறத்தில், வன்முறை வழியையும், அல்-வன்முறை வழியையும் பின்பற்றுவார்கள், பின்பற்றவேண்டும். இது அரசியல் அரங்கினிலான போராட்டம். அடுத்தபக்கத்தில், இவர்கள், பகிர்ந்து வாழ்தலும் இசைபட வாழ்தலும்எனும் வாழ்க்கை முறையை முன்னெடுத்துச் செல்வதற்கான போராட்டங்களையும் நடத்தவேண்டும். இது பண்பாட்டரங்கினில் நடைபெறும் அல்-வன்முறைப் போராட்டமாகும்.
இரண்டாவதாக;-ஓரியல்மைய ஐந்தியல் கோட்பாட்டிற்குத்  துணைபுரியும் ஒரு அரசியல் ஒழுங்காக. 
இந்திய உபகண்டம் ஐந்து பெரும் போராட்டங்களின் கொதிகலனாக இருந்துவருகிறது. அவையாவன:- 1) நாட்டுப்பற்றின் பாற்பட்டது 2) சாதிய ஒழிப்பின் பாற்பட்டது. 3) தேசியஇன உரிமைகள் தொடர்பானது. 4) பாலின சமத்துவம் சம்பந்தப்பட்டது. 5) மதசார்பின்மை தொடர்பாவது. 
இவ் ஐந்துவகை போராட்டங்களும் தங்குதடையின்றி நடைபெறவேண்டும். இவை தனித்தனியாக நடைபெற்றாலும் இவை அனைத்தும் பகிர்ந்துண்டு வாழ்தலும் இசைபட வாழ்தலும்எனும் பண்பாட்டைப் பின்பற்றி வளரவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் ஒன்று மறொன்றுடன் எதுவித பகமைமுரண்பாடும் கொன்றதாக இருக்கக் கூடாது, இருக்கவே கூடாது.
3 .II.3 வது  விவகாரம்:- மக்கள் கடவுளும், ஆளும் வர்க்கக் கடவுளும்.
      தொன்மைக்கால இந்திய உபகண்டத்தில்இருந்து பௌத்த இந்தியாவின் முடிவுவரையான சிலஆயிரம் வருடகால இந்திய உபகண்ட சமுதாயம் தனக்கென்றோர் கடவுளை உருவாக்கிக் கொண்டே வந்துள்ளது. இதில் மனிதர்களின் நோக்கம் இரண்டு.
3.II.3-1) மக்கள் கடவுள்                       
            2.1-அ) இயற்கைக்கும் (புறஉலகு), மனிதர்களுக்கும் இடையேயான உறவைக் கையாழ்தல்.
      * இது இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு தொடர்பான தொன்மைய அறிவியல் சிந்தாந்தமாகும்.
       அடங்கிப்போதல், வசப்படல், வசப்படுத்துதல், நட்புக் கொள்ளல், இணங்கிப் போதல், எதிர்த்துவாழல், புற உலகைப்பற்றிய விதிகளை உருவாக்கல் ஆகியனவை யாகும். இது இயற்கை அறிவியல் சித்தாந்தக் களம்.
            2.1-ஆ) மனிதர்களுக் கிடையேயான உறவு தொடர்பானது.
      மனிதநேயம் என்பது இயல்பான மானுடசுபாவமாகும். பகமை உறவுகொண்ட வர்க்கங்களாக சமூகம் பிரியத் தொடங்குவதுடன் மனிதநேயம் ஆபத்துக்கு உள்ளாகின்றது. இயல்பான சுபாவமாக இருந்தாலும் மனித நேயத்தை நெறிப்படுத்த சில சித்தாந்தங்களும், வாழ்வியல் ஒழுங்குகளும் தேவைப்படுகின்றன. இக்கடமை மக்கள் கடவுளூடாகச் செய்யப்படுகிறது. இது ஒரு பண்பாட்டுச் சித்தாந்தமாகும்.
       முதலாவதுவகை மக்கள் கடவுளர்களின் தேவை, இன்னமும் இல்லாது போய்விடவில்லை, ஆனல் இரண்டாவதுவகை மக்கள் கடவுளர்களின் தேவை, இன்னமும் உள்ளது. பல வடிவங்களில் அக்கடவுளர்கள் வளர்ந்தும் வருகிறார்கள்.

3.II.3-2) ஆளும் வர்க்க கடவுளர்கள்.
      இவர்கள் மனித நேயத்திற்கு எதிரானவர்கள். அனைத்துலக சுரண்டல்காரர்களும், தேசியவாதிகளில் ஏகப் பெரும்பான்மையினரும் இக் கடவுளர்களைப் படைப்பதிலும், மக்களிடம் இக் கடவுளர்களையிட்டு அதீதப் பற்றினை உருவாக்குவதிலும் படாதபாடுபட்டு வருகிறார்கள்.
3.II.4 வது விவகாரம்:- பெண் விடுதலையும், தாய்வழிச் சமூகமும்
      முதலாளித்துவத்தின் பிறப்பின் பின்னர் பெண்விடுதலைபற்றி எவ்வளவோ பேசப்பட்டுள்ளன; எவ்வளவோ எதிர்பார்க்கப்பட்டன. ஆனால் நினைத்ததுபோல் எதுவுமே நடக்கவில்லை. மாறாக, பாலின ஒடுங்குமுறை நவீனமயமாகி வருகின்றது. மனித உழைப்பை வீதிக்குத் தள்ளிவிடும் நவீன இயந்திரங்களின் துரிதமான அறிமுகம் இந்த நவீனமயத்தை அதிகரித்து வருகின்றது. அரசியல் அரங்கினில் காணப்படும் பாசிஸத்தின் துரிதவளர்ச்சி இந் நவீனமயமாதலை துரிதப்படுத்திவருகிறது. இது உலக பொதுப் போக்காகும்.
       தெற்காசியாவிலோ, இதனுடன் சேர்த்து பெண்விடுதலை எனும் பெயரில், சமூகப் புரட்சியில், குறிப்பாக மூலதனத்திற்கு எதிரான சமூகப் புரட்சியிலும், பிராமணியத்திற்கும் அனைத்து மதவாதங்களுக்கும் எதிரான பண்பாட்டுப் புரட்சிகளிலும் இருந்து பெண்களைப் பிரித்துவைக்கும் முயற்சிகளும் துரிதமாக நடைபெற்றுவருகின்றன. முதலாளித்துவ மதவாத கருத்தோட்டமுள்ள பெண்கள் இதில் தீவிர ஈடுபாடு காட்டிவருகிறார்கள்.
       தெற்காசிய இனவாத, மதவாத தேசியவாதிகள் இப்போக்கை வளர்க்கும் அரசியல் தலைவர்களாக விளங்குகிறார்கள். இதனால்தான் தெற்காசியாவின் எந்தவொரு நாட்டிலும்சரி, பாராளுமன்ற ஜனநாயகத்துள்கூட பெண்களுக்கு சமஉரிமை கிடைக்கவில்லை. அதற்கான சாத்தியப்பாடுகளும் தென்படவில்லை`
       எந்தவொரு அடக்குமுறை, சமூகத்தில் முதலில் தோன்றியதோ அதுதான் இறுதியில் அழியும். ஏனெனில், அதுதான் சமூகத்தில் நிலவும் அனைத்து அடக்குமுறைகளுக்குமான அடித்தளமாகும். ஆண் அகங்காரவாதமும் (Chauvinism), பாலின ஒடுக்குமுறையுந்தான், சமூகத்தின் முதலாவது அடக்குமுறையாகும். இறுதியாகத் தோன்றிய முதலாளித்துவ அடக்குமுறையும் அதனுடன் ஒட்டிப் பிறந்த தேசிய/தேசியஇன அடக்குமுறைகளும், முதலில் அழியும். வரலாற்றின் அடுத்த கட்டத்தில் அழியப்போவது இவைதான். அப்போது இவை வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் புதைக்கப்பட்டுவிடும். போராட்டம் தொடரும். முதலில் உருவான மிகநுட்பமான அடக்குமுறைக் கட்டுமானமான தந்தைவழி சமூகக் கட்டுமானம் இறுதியில் அழியும். தாய்வழிச் சமூகக் கட்டுமானம் மீண்டும் மலரும். அப்போதுதான், அப்போதுமட்டுந்தான், பாலின ஒடுக்குமுறை இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
       சோஷலிச ஜனநாயகப் புரட்சியாளர்கள் இக் குறிக்கோளுடன், பாலின சமத்துவத்திற்கான போராட்டத்தை இக்கட்டம்வரை இட்டுச் செல்லவேண்டும்.
3.II.5 வது விவகாரம்:- தாய் மொழிப்பற்றும் அதன் வளர்தடை அம்சங்களும்
      பௌத்த இந்தியா வரையான இந்திய உபகண்ட சமூகம் வெவ்வேறு மொழிவழிக் குழுமங்களைக் கொண்டதாகவே வளர்ந்துவந்துள்ளது. அவை எவ்விதம்இருந்ததுவோ அவ்விதமே தோன்றியவையல்ல, மொழிகளுக்கிடையே உள்ள பரஸ்பரத் தொடர்பின் காரணத்தால் அனைத்து மொழிகளும் தொடர்மாற்றத்துக்கு உள்ளாகிவந்துள்ளன. மாற்றமும் வளர்ச்சியும் அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும். இந்த வளர்ச்சியின்போது சில மொழிகள் அம் மொழிக்குரிய மக்களாலேயே கைவிடப்பட்டிருக்கவும் கூடும். மொழி சார்ந்த விடயத்தில் மாறாமரபியல் சித்தாந்தம்(fundamentalism) என்றொன்று அன்று இருந்திருக்கும் எனக் கருதமுடியாது. மொழியொரு அரசியல் விவகாரமாக இருந்திருக்கவும் முடியாது. பண்பாட்டுக் கட்டுமானத்தை நெறிப்படுத்தவும், அறிவியல்சித்தாந்தத்தை வளர்த்தெடுக் கவுமானதொரு கருவி என்றமுறையில் மொழி மதிக்கப்பட்டிருக்கும்; தாய் மொழிப்பற்று என்பது அவ்வளவுதான். இதற்கு மேலாகவோ, குறைவாகவோ தாய் மொழிப்பற்றை மதிப்பிட முடியாது.
       ஆனால், ஒரு மொழிவழிக் குழுமம் பிற மொழிவழிக் குழுமங்களின் மீதான அடக்குமுறையை ஆரம்பிக்கும்போது தாய்மொழிபற்றிய கருத்துரு (Concept) மாற்றமுறுகிறது. ஒடுக்கும் மொழிவழிக் குழுமத்தின்தாய்மொழிதலைக்கனம் மிக்கதாகிறது, அக் குழுமம் மொழி தொடர்பான அறிவியற்பார்வையை இழக்கிறது உயர்வுச் சிக்கலுடன்கூடிய அடக்குமுறைத் தன்மைமிக்கதாகின்றது; அடுத்த பக்கத்தில் ஒடுக்கப்படும் மொழிவழிக் குழுமத்தின்தாய்மொழிவளர்ந்த மொழியாக இருந்தால் அதுவும் தலைக்கனம் மிக்கதாய் மாறுகின்றது, உயர்வுச் சிக்கலுடன் கூடிய தற்காப்புக் குணாம்சத்தைப் பெறுகிறது; வளர்ச்சி பெறாத மொழியாக இருந்தால், அத்தாய்மொழிதாழ்வுச் சிக்கலுக்கு உள்ளாக, அம் மொழிவழிச் சமூகம் பொதுநீரோட்டத்தில் இருந்து ஒதுங்கிக் கொள்கிறது, அல்லது ஒதுக்கப்படுகிறது.
       மொழி வளர்ச்சி தொடர்பான பின்-பௌத்த இந்தியாவின் நிலை இதுதான். சமஸ்கிருதம் அடக்கும் (ஆளுமல்ல) மொழியானது, ஹிந்தி தவிர பிறமொழிகள் அடக்கப்படும் மொழிகளாயின. பின்-பௌத்த இந்திய உபகண்ட பண்பாட்டரங்கம் மொழியிய மாறாமரபில்வாதமெனும் (Linguistic Fundamentalism) கொடும் நோய்க்கு உள்ளானது. அந் நோய் இன்னமும் தொடர்கிறது. சமஸ்கிருத /ஹிந்தி மொழிகளின் ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டங்கள் மாறாமரபில்வாதச் சேற்றுக்குள் மூழ்கிப் போகாமல், இந்திய மொழிகள் அனைத்துக்கும் சமத்துவத்திற்கான போராட்டமாக அமையவேண்டும்.
3.II.6 வது விவகாரம்:- மொழிவழித் தேசியங்களும் தெற்காசிய ஒன்றியமும். (இப்பகுதி எழுதவில்லை தனியாக எழுதி இணைக்கப்படும்.)
3.II.7 வது விவகாரம்:- தலித்தியம் எதிர் பார்ப்பனியம்: நூலில் இருந்து சில பகுதிகளை அப்படியே ஒப்படைக்கிறேன்.
          “பெரும்பான்மையான உழைக்கும் மக்களை, தலித்துகளாக்கிய இந்த உடைமைப் பண்பாட்டை, இது பீத்துகின்ற அறம், ஒழுக்கம், நேர்மை, உண்மை முதலானவற்றை நார்நாராக உரிப்பதே தலித்கடமை. இறுதியாக நிற்கப்போகின் றவை  அநேக உண்மைகளும் அவற்றுக் குரிய மனிதர்களுமே” –ராஜ் கௌதமன்
               சாதி-வர்க்கம்-அம்பேத்கார்: “சாதியமைப்புமுறை தனிமைப்படுத்தும் இயல்பைத் தன்னுள்கொண்டது; ஒரு சாதியை இன்னோர் சாதியிடமிருந்து தனிமைப் படுத்துவதை இது, ஒர் நற்கூறாகக் கருதுகிறது. வர்க்க அமைப்புமுறையிலும் தனிமைப்படுத்தல் இருக்கவே செய்கிறது; ஆனால் தனிமைப்படுத்தலை ஒரு நற்பண்பாகக் கருதுவதில்லை; மேலும் சமூகக்கூட்டுறவை அது தடுப்பதுவும் இல்லை. வர்க்க அமைப்புமுறை குழுக்களைத் தோற்றுவிக்கிறது என்பது உண்மையே. ஆனால் அவை சாதிக்குழுக்களைப் போன்றவையல்ல. வர்க்க அமைப்புமுறையில் குழுக்கள் சமூக ரீதியற்றவையேயாகும்; ஆனால் சாதியமைப்பு முறையிலோ சாதிகள் அவற்றின் பரஸ்பர உறவுகளில் நிச்சயமாகவும் திட்டவட்டமாகவும் சமூக விரோதமானவை. இப் பகுத்தாய்வு உண்மையாக இருக்குமாயின், இந்து சமுதாயத்தின் சமூகக் கட்டமைப்பு வேறுபட்டது என்பதும், இதனால் அரசியல் கட்டமைப்பும் வேறுபட்டதாகவே இருக்கவேண்டும் என்பதும் மறுக்கமுடியாத உண்மையாகும்.” என்பார் அம்பேத்கர். இந்துத்துவமும் இந்து விடுதலை நெறியும்-ந. இரவீந்திரன் பக்-15  
                முஸ்லீம்களின் தனிதேசக் கோரிக்கையின்போது நடந்த விவாதத்தில்  அம்பேத்கரால் முன்வைக்கப்பட்ட வாதங்களில் சில.
                 தேசியஇனம்பற்றி அம்பேத்கர்: தேசியஇனம் என்பதை அவர் பின்வருமாறு வரையறுக்கிறார்: “தேசியஇனம் என்பது ஒரு சமுதாய உணர்வாகும். அது, ‘நாம் ஒன்று எனும் கூட்டு மனப்பான்மை உணர்ச்சி ஆகும். இந்த உணர்ச்சி நிரம்பப் பெற்றவர்கள் தம்மை ஒருவருக்கொருவர் உற்றார்-உறவினர்களாக உணரச்செய்கிறது. இந்தத் தேசிய(இன) உணர்ச்சியானது இருபக்கக்கூருள்ள ஒரு உணர்ச்சியாகும். அதாவது, ஒரேநேரத்தில் இது தன் உறவினர்களிடம் சொந்தம் பாராட்டுவதாகவும், தன் உறவினர்கள் அல்லாதவர்களிடம் பகைமை பாராட்டுவதாகவும் இருந்தது. இது ஒரு ‘இன உணர்வு’ உணர்ச்சியாக உள்ளது. ஒரு புறத்தில் இவ் உணர்வுள்ள அனைவரையும் இது ஒன்றிணைக்கின்றது. எந்தஅளவிற்கு வலுவாகஇணைக்கிறது என்றால், பொருளியல் முரண்பாடுகளில் இருந்தோ, சமுதாயப் படிநிலைகளில் இருந்தோ எழக்கூடிய வேறுபாடுகளையெல்லாம் இது புறக்கணித்து விடுகிறது, மறுபக்கம் தம்இனம் இல்லாதவர்களிடம் இருந்து இவர்களைப் பிரித்துவிடுகிறது. வேறு எந்தக் குழுவையும் சேர்ந்திராதவர்களாக இருப்பதை அது மிகவும் ஆர்வமுடன் விரும்புகிறது. இதுதான் தேசியஇனம்-தேசிய (இன)உணர்வு என அழைக்கப்படுவதன் சாரமான தன்மை ஆகும்.”   
              புறக்கணித்துவிடுகிறது என்று சொல்வதன் மூலம், தேசியஇனம் எனும் சமுதாய உணர்வு வர்க்க சமரசம் மிக்கது என்கிறாரா? அவ்விதமானல் தலித்தியத்தின் சாரமான தன்மையும் இதுதானே? உழைக்கும் வர்க்கத்தின் நிலைப்பாட்டில் இருந்து நோக்கும்போது வர்க்கசமரசம் வெறுக்கத்தக்கதாகும். இதனால் தேசியஇனம், தலித்தியம் எனும் ‘சமுதாய உணரவுகள்’ உழைக்கும் வர்க்கத்தால் நிராகரிக்கப் படவேண்டியவை ஆகின்றனவா?
              அவர் கூறுகிறார்: “சிறுபான்மையினத் தேசத்தை பெரும்பான்மையின தேசம் அடக்கிஒடுக்கும் கோட்பாட்டின் இறுதிநோக்கம் ஒரே தேசத்தை உருவாக்குவதுதான் என்றால், அந்தக் கோட்பாட்டின் அறிவுடமையை எம்மால் புரிந்து கொள்ளவும் பாராட்டவும் கூட முடிகிறது. ஆனால் இரண்டு தேசங்கள் இருக்கலாம், அவை ஒன்றிடமிருந்து மற்றது பிரிந்துபோகக்கூடாது என்றுகூறும் கோட்பாட்டின் நற்பயனைத்தான் எம்மால் விளங்கிக் கொள்ள முடிவதில்லை. ஒன்றுக்கொன்று மதிப்புடனும், ஒற்றுமையுடனும் நட்பான உறவுமுறையில் பங்காளிகளாகவாழ விரும்பும் இருதேசங்களைப் பொறுத்தவரை மட்டுமே இந்தக்கண்ணோட்டம் நியாயமானதாக இருக்கும். ஆனால், அப்படி நடக்கப்போவதில்லை; ஏனெனில், இந்து தேசத்துக்கு சரியிணைவான அதிகாரத்தை முசுலீம் தேசமும் பெற்றிருப்பதை திரு.சாவர்கர் ஒத்துக்கொள்ளமாட்டார். இந்து தேசம் ஆதிக்கதேசமாக இருக்கவேண்டும், முசுலீம் தேசம் அடிமைதேசமாக இருக்கவேண்டும் என்பதே அவர் விருப்பம். எனவே, இந்து தேசத்துக்கும் முசுலீம் தேசத்துக்கும் இடையே பகைமையை விதைத்துவிட்டு, பின் அவர்கள் ஒரேநாட்டுக்குள், ஒரே அரசியல்சட்டத்துக்கு உட்பட்டுத்தான் வாழவேண்டுமென அவர் வற்புறுத்துவது ஏன்என்பது விளங்குவதற்கு கடினமான தாகவே உள்ளது.” பக்கம் 47
            வலுவான தர்க்கம். இந்து எனும் சடங்காச்சார, அரசியல் போர்வை போர்த்திய பார்ப்பனியத்தின் தேசியம் தொடர்பான நிலைப்பாட்டை எதுவித சமரசமுமின்றி போட்டுடைப்பதுடன், முசுலீம்கள் தனித்தேசம் கோரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட தற்கான காரணத்தையும் முன்வைத்துள்ளார். முசுலீம்களின் தேசியப் பிரச்சனையை முன்வைக்கும் சாக்கில் தலித்துகளின் பிரச்சனையையும் முன்வைத்துள்ளார். முசுலீம்களெனும் இடத்தில் தலித்துகள் என்று போட்டால் ஒன்றும் தவறாக மாட்டாது. அதே போல் இந்து எனும் இடத்தில் சிங்கள என்றும் முசுலீம் எனும் இடத்தில் தமிழ் என்று போட்டாலும் பொருந்தும்.
3.II.7 வது விவகாரம்:- மதசார்பின்மையும், மதநிறுவன அதிகார நீக்கமும்.
              இன்றைய இந்திய உபகண்ட அரசுகள் அனைத்துமே மதவாதமைய அரசுகளேயாகும். இந் நாடுகளின் பண்பாட்டு கட்டுமானங்களும் மதவாதமையக் கட்டுமானங்களேயாகும். மக்களின் சமூக வளர்ச்சிக்குப் பெருந்தடையாக இருப்பது ஆதிக்கம்செலுத்தும் மதவாதங்களேயாகும். இம் மதவாதங்களை தூக்கியெறியாமல், இவற்றைச் சாகடிக்காமல் இந்நாடுகளின் சமூகம் சமஉடமையியல் ஜனநாயகத்தை நோக்கி ஒர்அடிதானும் முன்னேற முடியாது. அதற்கான வழியென்ன?
       உழைக்கும் வர்க்க மிதவாதிகளும், (மார்க்ஸிய மிதவாதிகளெனவும் கூறலாம்), தேசியவாத மிதவாதிகளும் மதசார்பின்மை எனும் மார்க்கத்தை முன்வைத்து வருகிறார்கள். இதன் பொருள் அரசை மதநீக்கம் செய்வதாகும். அதாவது அரசு எந்த மதத்தையும் சாராது இருக்கவேண்டும் என்பதாகும். இது சாத்தியமற்றதோர் வேலைத்திட்டமென்பது நிரூபணமாகிவிட்டது. நேபாள அரசு தவிர பிற எந்த தெற்காசிய மிதவாதிகளும் இதன் சாத்தியப்பாடின்மையை புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. தெற்காசிய சமூகங்களின் நாசகார மதவாதத்தின் ஆளுமைக்கான காரணம் இச்சமூகங்களின் பண்பாட்டரங்கினில் அது செலுத்திவரும் ஆதிக்கமேயாகும். அரசின் மீதான அதன் ஆதிக்கம் இரண்டாம் பட்சமானதே. இலங்கை, பாக்கிஸ்தான் ஆகிய இருநாடுகளிலும் மதவாதம், அரச அதிகாரத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதில் ஓரளவுக்கு வெற்றி பெற்றுள்ளது, ஓரளவிற்குத்தான். ஆனால் இந்தியா, பூட்டான், மாலைதீவு, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் பெருமளவு முன்னேற்றம் எதுவும் இன்னமும் ஏற்படவில்லை. மதவாத பாண்பாட்டுக்கட்டுமானமே மதவாத அரசைவிட சக்தி மிக்கதாய் உள்ளது. ஆகவே சமூகப் புரட்சியாளர்களின் மதவாத எதிர்ப்புப் போராட்டம் மதசார்பின்மை என்ற குறுகியஎல்லைக்குள் தன்னை மட்டுப் படுத்திக் கொள்ளக்கூடாது, மத நிறுவனங்களை அதிகார நீக்கஞ்செய்வதென்ற மட்டத்திற்கு உயரவேண்டும். இக்கட்டத்தை அடையவில்லையானால், அனைத்துவகை அடக்கு முறைகளுக்கும் எதிரான அனைத்துப் போராட்டங்களும் குறிப்பிட்ட மட்டத்தைத் தாண்டிச் செல்லமாட்டாது.
இறுதி செய்யப்பட்டது: 15/10/2018

No comments:

Post a Comment

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...