Sunday 21 October 2018

புதிய ஜனநாயகப் புரட்சி,


புதிய ஜனநாயகப் புரட்சி, பொருத்தப்பாடான தந்திரோபாயமா?

                இலங்கை இந்திய மாக்ஸியர்களின் ஒரு சாரார் தத்தமது நாடுகளின் புரட்சியின் மூலோபாயமாக முன்வைப்பது புதிய ஜனநாயகப் புரட்சியையே ஆகும். ஜனநாயகப் புரட்சிக்கு புதிய என்ற அடைமொழி கொடுக்கப்பட்டுள்ளது. அவ்விதமானால் பழைய என்ற அடைமொழியுடன் கூடிய ஜனநாயகப் புரட்சி என்பதென்ன? அவ்விதம் எவரும் பயன்படுத்துவதில்லை. ஆனால் புதிய என்பது பழையதன் எதிர்ச் சொல்தானே! இவற்றை விட, முதலாளித்துவ ஜனநாயகப்புரட்சி சோசலிஷ ஜனநாயகப்புரட்சி, தேசிய ஜனநாயகப் புரட்சி எனும் பதங்களும் நடைமுறையில் உள்ளன. சரிதான், அடைமொழிகள் எதுவுமே யற்ற ஜனநாயகப் புரட்சி என்றொன்று உண்டா? இல்லை, இல்லவேயில்லை. ஏன்?

   பண்பாட்டரங்கினில் இருந்துவந்த ஜனநாயகமெனும் வாழ்வியல்முறை பண்பாட்டரங்கினிலேயே தொடரும்வரை ஜனநாயகத்துக்கு அடைமொழியும் இல்லை, விகுதியும் இல்லை. இந்த ஜனநாயகம் அரசியல் அரங்கிற்கு வரும்பொதுதான், இது அடைமொழியையும், விகுதியையும் பெறுகிறது. ஏனெனில் பண்பாட்டரங்க ஜனநாயகம் தனித்து நிற்கும் ஒரு சமூக நிகழ்வாகும். அன்பு, பாசம், காதல், சமூகப் பொறுப்புணர்வு இத்தியாதி போன்றதே இதுவும். ஆனால் இந்த ஜனநாயகம் அரசியல் அரங்கிற்கு வரும்போது அரசின் ஆட்சி முறைகளில் ஒன்றாக மாறுகிறது. அரசின் ஆட்சிமுறை என்பது ஒரு வர்க்கத்தின் சர்வாதிகாரமேயன்றி வேறெதுவுமே இல்லை. இந்த சர்வாதிகாரத்தின் ஓர் அங்கமே ஜனநாயகமாகும். இது (ஜனநாயகம்) ஒரு ஆட்சி வடிவம் மட்டுமல்ல, சுரண்டல்காரர்களின் சர்வாதிகாரத்தை மறைப்பதற்கான ஒரு மூடுதிரையுமாகும். சமதர்ம ஜனநாயகமும்கூட பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் ஓர் அங்கந்தான். மார்க்ஸியர்கள் இதை மூடி மறைக்கவில்லை. 
                  ஆனால் இவ் ஜனநாயகம் பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசைக் கட்டிக் காப்பதற்கான ஒரு வழிமுறையல்ல, மாறாக அவ்வரசை வாடி, வதங்கி உதிரச் செய்வதற்கான ஒரு வழிமுறையேயாகும். மேலும் சொல்வதனால் ஜனநாயகத்தை, அரசியல் அரங்கினில் இருந்து பிரிதெடுத்து அதைமீண்டும் பண்பாட்டரங்கிற்கே கொணர்வதற்கான வழிமுறையே சமதர்ம ஜனநாயகமாகும். அடுத்த பக்கத்தில் முதலாளித்துவ ஜனநாயக்மென்பது, பண்பாட்டரங்கினில் ஒரு வாழ்வியல் முறையாகக் காணப்படும் ஜனநாயகத்தை  அரச சர்வாதிகரத்தின் ஒரு அங்கமாக மாற்றுவதாகும், இதன் மூலம் அரச சார்வாதிகாரத்தை படுத்துவதாகும்`            
              ஜனநாயகம்பற்றிய இவ்விளக்கத்துடன் புதிய ஜனநாயகப் புரட்சிபற்றிய விவாதத்திற்குள் நுழைவோம். புதிய ஜனநாயகம் எந்த வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை முன்னிறுத்துகிறது. எந்த வர்க்க சர்வாதிகாரத்தின் மறுபக்கமாக இருக்கப்போகிறது? அல்லது எந்தெந்த வர்க்கங்களின் கூட்டுச் சர்வாதிகாரத்தின் மறுபக்கமாக இருக்கப்போகிறது? பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசை அமைப்பதற்கான ஒரு தந்திரோபாய மார்க்கமாக புதிய ஜனநாயகப் புரட்சியை முன்வைத்தது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியேயாகும்.
                இது அவர்களுக்குப் பெரும் வெற்றியையும் கொடுத்தது. சீன சமூக சூழலக்குப் பொருத்தமான பாட்டாளி வரக்க சர்வாதிகார அரசு நிறுவப்பட்டது. இதற்காகவும் இவ் அரசை சோவியத் ஒன்றிய அரசைப்போல் சீரழியாமல் பாதுகாத்ததிற்காகவும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் தலைவர் தோழர் மா-ஓவும்  உலகப் பாட்டாளிவர்க்கத்தாலும், உலக சமதர்ம விரும்பிகளாலும் நன்றியுடன் பாராட்டப்பட்டனர். உலகளாவிய மார்க்ஸிய தலைவர்களில் ஒருவராக தோழர் மா.ஓ. ஏற்றுக் கொள்ளப்பட்டார். மிகச் மிகச் சரியான முடிவுகள்.
                ஆனால் இதற்காக தெற்காசிய மார்க்ஸியர்கள் புதிய ஜனநாயகப் புரட்சியைதெற்காசிய சமதர்மப் புரட்சியின் ஆரம்பகட்ட தந்திரோபாயமாக ஏற்றுக் கொண்டது சரியா? ருஷ்ய சோஷலிஸப் புரட்சி தொடர்பான போல்ஷ்விக்களின் தந்திரோபாயத்தை மா.ஓ. ஏற்றுக் கொள்ளவில்லை. நிலம் கூட்டுடமை ஆக்கப்படும் என்பதெ போல்ஷ்விக்குகளின் முழக்கமாகவும் வேலைத்திட்டமாகவும் இருந்தது. இதற்காக லெனின் அவர்கால மார்க்ஸியர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். தோழர் லெனினின் நெருங்கிய தோழியான தோழர் றோசா லக்ஸம் பரக் கூட இக் கொள்கையை விவசாயத் தீவிரவாதம்எனச் சாடினார். தோழர் லெனினுடன் பகிரங்க விவாதமே நடத்தினார். போல்ஷ்விக்-மொன்ஷ்விக் பிரிவுக்கு இதுவும் ஓர் காரணம். அடுத்த பக்கத்தில் மா.ஓ. உழபவனுக்கே நிலம் என்ற கோரிக்கையை முன் நிறுத்தினார். புதிய ஜனநாயகப் புரட்சியின் சாராம்சமே இதுதான். 50களின் பிற்பகுதியில்தான் நிலத்தில் கூட்டுடமைமுறை அறிமுகப்படுத்தப் பட்டது. அதுவும் அனைத்து நிலங்களுக்குமல்ல. தந்த்திரோபாய விடயங்களில் லெனினும் மாஓவும் வெவ்வேறுபட்டாலும் தத்தமது நாட்டுப் புரட்சியின் முதலாவது கட்டத்தை பூர்த்தி செய்வதில் இருவரும் வெற்றிபெற்றனர். போல்ஷ்லிஸத்தை மாஓ ஒரு வாய்ப்பாடாக ஏற்றுக் கொள்ளவில்லை.

               அதேபோல் பாட்டாளிவரக்க சர்வாதிகார அரசில் காலத்துக்குக் காலம் தோன்றும் சமூகப் பேரகங்காரவாத அதிகாரத்துவச் சமூகத் தட்டின் (Socio-chauvinist bureaucratic Social strata) அதிகாரத்தை அல்லது அதன் செல்வாக்கை எவ்விதம் அகற்றுவது, அதாவது அரசு இயந்திரத்தை சுத்தி செய்வது என்ற விடயத்தில் தோழர் ஸ்ராலினும், தோழர் மாஓவும் வேறுபட்டனர். தோழர் ஸ்ராலின் மேலிருந்து செலுத்தப்பட்டும் (கட்சியின்) ஊடாக ஒழுங்கு விதிகளிலேயே (அரசு அழுத்தம்) அதிக நாட்டங்காட்டினார்; ஆனால், மாஓ கீழிருந்து செலுத்தப்படும் அழுத்தங்களை முதன்மைப்படுத்தி மேலிருந்து செலுத்தப்படும் அழுத்தங்களை இரண்டாம் பட்சமாக்கினார். இதுதான் மகத்தான பாட்டாளிவர்க்கக் கலாச்சாரப் புரட்சியாகும். இது புதிய ஜனநாயகப் புரட்சியின் தொடர்ச்சியாகும். தனது தவறுகளால் சோவியத் சோஷலிஸ அரசு வீழ்ந்துவிட்டது, சீன சோஷலிஸ அரசு சுத்தி செய்யப்பட்டது. புரட்சி தொடர்கிறது.

                 எமது விவகாரத்திற்கு வருவோம். தெற்காசியா (இந்திய உபகண்ட) சமூகக் கட்டமைப்பு தனக்கே உரிய, வேறு எங்கும் காணப்படாத துல்லியமான தனித்துவ குணாம்சங்களைக் கொண்டது. அவைபற்றி தெளிவான புரிதலுடன்தான் தெற்காசிய மாக்ஸியர்கள் பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசின் அமைவுக்கு உகந்த முறையில் சமூகப் புரட்சியின்  தந்திரோபாயங்களை வகுத்துக் கொள்ளவேண்டும். தெற்காசியாவின் தந்திரோபாயம் அதற்கேஉரிய தனித்துவத்தைக் கொண்டது அது என்ன என்பதை விவாதிப்போம்.

             இப் பதிவானது, ஒரு மாத இடைவெளிக்குப் பின், 1/செப்டெம்பர்/2018இல் தொடரும், அதுவரை மாற்றுக் கருத்துக்களையும் உடன்படு கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன்.


No comments:

Post a Comment

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...