Thursday, 11 October 2018

தமிழீழ அரசுருவாக்கத்தில் டயஸ்பறாவின் வகிபாகம்.

                தமிழீழ அரசுருவாக்கத்தில் டயஸ்பறாவின் வகிபாகம்.

   இத் தலைப்பின் கீழ் உரியாடுவதற்கு அதிகவிடயங்களுள்ளன. இதனால் இத்தலைப்பை 
இரு பகுதிகளாகப் பிரிக்கிறேன். முதற் பகுதி தமிழீழ டயஸ்பறா என்பது என்ன? இரண்டாவது பகுதி தமிழீழ அரசுருவாக்கத்தில் அவர்களின் வகிபாகம் என்ன? இவ் உரை முதலாவது பகுதியைப் பற்றிமட்டுமே பேசுகிறது. இரண்டாவது பகுதி கட்டுரை வடிவில் முன்வைக்கப்படும். இரண்டாவது பகுதிக்கான முன்னுரையாகவும் இதைக் கொள்ளலாம்.

.தமிழீழ டயஸ்பறா என்பது என்ன?

     டயச்பறா-விற்கு பொருத்தமான தமிழ்பதத்தை தெரிந்துகொள்ளாமல் இருக்கும் எனது நிலைக்கு முதலில் உங்களிடம் மன்னிப்புக்கேட்டுக் கொள்கிறேன். இப் பதம் முக்கியத்துவ மிக்கதொர் அரசியலணிசேர்க்கையைக் குறிக்கின்றது. ஆனால், புலம்பெயர்ந்தோரென்பது அரசியல் உள்ளடக்கமற்ற பதமாகும். அகதிகள் அரசியல் உள்ளடக்கப் பதந்தான், ஆனால் அவ் உள்ளடக்கம் டயஸ்பறாவின் உள்ளடக்கத்தைவிட குறைவானது. டயஸ்பறாவெனும் மக்கள்திரள், அகதிக ளெனும் அணியை தன்னுள் அடக்கியதாகும். தமக்கு மறுக்கப்படும் ஐ.நா சாசனப்படியான உரிமைகளுக்காகப் போராடுவதுவும், தம்மீது திணிக்கப்படும் கட்டாயப்படுத்தல்களுக்கும், ஓரங்கட்டல்களுக்கும் எதிராக போராடுவதுவுந்தான் அகதிகளின் பிரச்சனையாகும். டயஸ்பறாவின் பிரச்சனைகளில் இதுவும் ஒன்றாகும்.

    ஆனால், டயஸ்பறாவின் பிரதான குறிக்கோள் அதுவல்ல. தமதோ, தமது மூதாதையரினதோ தாய்த் தேச நலனுக்குக்காகப் போராடுவதே டயஸ்பறாவின் குறிக்கோளாகும். தாய்த் தேசநலனென்பது, புதிய தேசஅரசையும் அதை நிலை நிறுத்துவதற்கான புவிப்பரப்பையும் உருவாக்குவதாக இருக்கலாம் (எ.கா- முதலாம் உலக யுத்தத்திற்குப் பின்பான யூதர்கள்), தாம் வாழும் பிரதேசத்தில் தேசிய அரசை நிறுவுவதற்காக இருக்கலாம்(எ.கா-இன்றைய தமிழீழ டயஸ்பறா, இந்தியாவில் வாழும் திபெத்திய டயஸ்பறா), தமது தாய்நாட்டரசின் ஊடாகவோ, தனிநபர் முயற்சிகளினூடாகவோ தமது நாட்டின் பொருளாதாரத்தை வளர்ப்பதாக இருக்கலாம்(எ.கா-இந்திய டயஸ்பறா) தமது ‘தேசியவாத’ கருத்தோட்டத்தை வளர்ப்பதாக இருக்கலாம்(எ.கா- இந்துத்துவ டயஸ்பறா, வஹாபிஸ டயஸ்பறா), தமது தேசத்தின்/நாட்டின் சமூகக் கட்டமைப்பை மாற்றுவதாக இருக்கலாம்( 1950 களின் முன்னர் pro-socialist சீன டயஸ்பறா, தற்போது anti-socialist சீன டயஸ்பறா) எனப் பலவிதமான டயஸ்பறாக்களைக் குறிப்பிடலாம்.

    டயஸ்பறாக்களை வரைவுஇலக்கணப் படுத்த (to define) முற்படுவோம். தமது தேசத் துக்கு/நாட்டுக்கு வெளியே, இன்னோர் நாட்டில்/தேசத்தில் அந் நாட்டின்/ தேசத்தின் அனுமதியுடானோ ஆனுமதியின்றியோ வாழ்ந்தவண்ணம், தமதோ அல்லது தமது மூதாதையரினதோ தேச/நாட்டு நலனுக்காக நேரடி அல்லது அல்-நேரடி (in-direct) சட்டபூர்வ நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசியல் உணர்வுள்ள மக்கள் திரளே டயஸ்பறா எனப்படுகிறது.   

     தமது மத-மைய தேசியவாதமான சியோனிஸக் கொள்கையை அமூல் படுத்துவதற்காக யூதர்களால் உலகளாவிய அளவில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் செயற்பாடுகள் த-டயஸ்பறா என அழைக்கப்பட்டது. அதே பதத்தை த வை நீக்கிவிட்டு பயன்படுத்துவது சரியானதாகப் படவில்லை. புதிய பதமொன்று ஆக்கப்படவேண்டும்.
Distanace Nationalism என்றோர் பதம் தற்போது அறிமுகமாகிவருகின்றது. இது மிகவும் பொருத்தப்பாடான பதமாகத் தெரிகிறது. ஆனால், இது பற்றி நான் இன்னும் கற்காததால் அப்பதத்தைத் தவிர்க்கிறேன்.

                        பிற்தளமும் டயஸ்பறாக்களும்:

     எம்மிடந்தான் ‘பிற்தளம்’ என்றோர் அருமையிலும் அருமையான பதம் உண்டே, அதைப் பயன்படுத்தினாலென்ன? எனக்கேட்கக்கூடும். இவ்வித கேள்வி இயல்பா னதே, ஆனால் நியாயமானதாகப் படவில்லை. ஏன்? தமிழீழ விடுதலைப் போராட்டக் களம் இலங்கையேயாகும். இப்போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக பயன்படுத்தப்படும் இலங்கைக்கு வெளியேயான பூகோளப்பரப்பு பின் தளமாகின்றது. ஏதோவோர் அரசின் கட்டுப்பாட்டின் கீழில்லாத  சுதந்திரமான பூகோளப்பரப்பொன்று இருக்கமுடியாது. சந்திர மண்டலங்கூட இவ்விதமில்லை. இதனால் இப்பரப்பினில் களமாடும் போராளிகளின் செயற்பாடுகள் ஒன்றில் வெளிப்படைத்தன்மை பெற்றதாக இருக்கவேண்டும் அல்லது முற்றிலும் தலைமறைவானதாக இருக்க வேண்டும்.

    வெளிப்படையான செயற்பாடுகள்:- அனுமதி வளங்கிய அவ்வரசின் அங்கிகாரம் இருந்தால் மாத்திரமே வெளிப்படையாகச் செயற்படமுடியும். இன்றைய நிலையில் தமிழீழ டயஸ்பறாவை ஏற்றுக்கொள்ளும் அனைத்து அரசுகளும் இலங்கையில் இரு தேசங்களின் இருத்தலுக்கு எதிரானவைகளாகவே இருக்கின் றன. அனைத்து அரசுகளும் இலங்கைத்தீவானது ஒரு நாட்டரசின் சர்வாதிகாரத்தின் கீழானதாக இருப்பதையே விரும்புகின்றன. இதனால் நாட்டரசு நிலையை நோக்கி வளர்ந்துசெல்லும் ஸ்ரீ லங்கா அரசுடன் நெருக்கமான நட்பைப் பேணும் அரசுகளாக மாத்திரமல்ல, அவ் அரசைப் பலப்படுத்துவதற்கு தம்மாலான பங்களிப்புகளை செய்துவரும் அரசுகளகாவுமுள்ளன. ஐ.நா சபைகூட இவ்விடயத்தில் இரட்டைவேடம் போடுகின்றது. இதனால் இன்றைய சூளலில் பிற்தளமென்பது சாத்தியமற்றுப்போயுள்ளது. டயஸ்பறாவின் செயற்பாட்டிற்கு எதுவித பங்களிப்பும் இன்றி உள்ள அமைப்புகளுக்கு இவ்வித பிற்தளம் ஒன்று கிடைக்கிறதானால், அதன் அர்த்தம் அனுமதி வளங்கிய அவ் அரசு, தேவை ஏற்படும்போது போடுதடியாகப் பயன்படுத்த அவ்வமைப்பை தக்கவைத்து வருகின்றது என்பதேயாகும்.

   தலைமறைவுச் செயற்பாடு:-இருந்தும் அமைப்புகள் முற்றிலும் தலைமறைவாகச் செயற்படுகின்றனவானால் அது வரவேற்க்கப்படக்கூடியதே. ஆனால், அவ் அமைப்பும் அதன் செயற்பாடுகளுந்தான் தலைமறைவானதாக இருக்க முடியுமே தவிர டயஸ்பறாவின் செயற்பாடுகளில் எதுவும் அவ்விதம் இருக்க முடியாது. அதாவது டயஸ்பறாவுக்கு அப் பூகோழப்பரப்பு பிற்தளமல்ல. அது ஒரு அமைப்பின் பிற்தளமேயாகும்.

    இவற்றிலிருந்து புரிவது பிற்தளமெனப்படுவது, குறிப்பிட்ட அமைப்புகளின் அரசிய-இராணுவ (politico-military tactical issue) நடைமுறை தந்திரோபாயப் பிரச்சனையே யாகும். ஆனால், டயஸ்பறவின் பிரச்சனையோ அதிகளவு சிவில் தன்மைபெற்ற அரசியல் மூலோபாயப்  பிரச்சனையாகும். டயஸ்பறா தாய்மண்ணில் செயற்படும் அரசியல் அமைப்புகளின் கிழைகளோ அல்லது நீட்சியோவல்ல அது ஒரு சுதந்திரமான சிவில் சமூகமாகும். டயஸ்பறாவைச் சேர்ந்தவர்கள் எந்த அமைப்பிலும் இருக்கலாம். அது அவர்களின் சுதந்திரம், அதுபோல் தாய் மண்ணில் செயற்படும் அமைப்புகள் டயஸ்பறாவிலிருந்து தமது அமைப்புக்கு ஆட்களைத் திரட்டலாம். அது அவர்களின் சுதந்திரம். ஆனால் இவ்வித நடவடிக்கைகள் டயஸ்பறாவின் சுய செயற்பாட்டை அழிக்கக்கூடியதாக இருக்கக் கூடாது. டயஸ்பறாவின் சிவில் சமூகத் தன்மை பாதிக்கப்படக்கூடாது.

    இலங்கையின் ஸ்தூலநிலையப் பொறுத்து, தாய்மண்ணில் செயற்படும் அமைப்பு களிடையே காலத்துக்குக் காலம் கருத்து வேறுபாடுகள் தோன்றுவதுவும், இதன் விளைவாக காலத்துக்குக்காலம் வெவ்வேறு அணிசேர்க்கைகள் தோன்றுவ துவும் ஒரு வழமையாகவுள்ளது. அவை தவிர்க்க முடியாத இயல்பானவைகளா கவும் இருக்கலாம், அர்த்தமற்ற கோஷ்டிப் பூசல்களாகவும் இருக்கலாம். எவ்விதமிருந்தாலும் இவ் அணிசேரல்கள் உள்ளது உள்ளபடியே டயஸ்பறாவில் பிரதிபலிக்கக் கூடாது. டயஸ்பறாவென்பது  ஒட்டுமொத்தமாக சுயாதீனம் மிக்க தொரு ஒரு சிவில் சமூகமேயாகும் என்ற நிலைக்குப் பங்கம் ஏற்படுத்தப்படக் கூடாது. இதனால்தான், டயஸ்பறாவின் சுயாதீனச் செயற்பாடுகளை இழக்கச் செய்யக்கூடிய பின் தளத்தினர் எனும் பதம் நிராகரிக்கப்படுகின்றது. தாம் வாழும் நாடுகள்தான் டயஸ்பறாவின் முற்தளமாகும். அது அவர்களின் பிற்தளமல்ல. அவர்களுக்கு பிற்தளம் என்று எதுவுமேயில்லை. சிவில் சமூகமான டயஸ்பறா தாம் வாழும் நாடுகளில் அந் நாட்டின் சட்டதிட்டத்திற்கு உட்பட்டே தமது செயற் பாடுகளை அமைத்துக் கொள்ளவேண்டும்.

    டயஸ்பறாபற்றிய வரைவு இலக்கணத்தில். தமதோ அல்லது தமது மூதாதைய ரினதோ தேச/நாட்டு நலனுக்காக நேரடி அல்லது அல்-நேரடி (in-direct) சட்டரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசியல் உணர்வுள்ள மக்கள் திரளே டயஸ்பிறா எனப்படுவர்.

 எனக் கூறப்படுவதன் அர்த்தம் தாம் வாழும் நாடுகளின்/தேசங்களின் சமூக இயக்கங்களுடன் தொடர்பற்றவர்களாக இருக்கவேண்டும் என்பதோ, அவற்றுடனான தொடர்புகள் மட்டுப்பட்டனவாக இருக்கவேண்டும் என்பதுவோ வல்ல. தொடர்புகள் இருக்கலாம், இல்லாதிருக்கலாம் அது ஒரு பொருட்டல்ல. ஆனால் இத் தொடர்புகள் டயஸ்பறாவின் நலனுக்கு பாதிப்பில்லாதிருக்கப் பார்த்துக்கொள்ளவேண்டும். மற்றும்படி டயஸ்பறா தாம் வாழும்பகுதிகளில் காணப்படும் அனைத்து இயக்கங்களுடனும் தொடர்புள்ளவர்களாக இருப்பதுவே சிறந்தது.

   தமிழீழ டயஸ்பறாக்களின் அரசியல் வேலைத்திட்டம் அவர்கள்வாழும் நாடுகளி னது/தேசங்களினது எல்லைகளுக்கு உட்பட்டதொன்றல்ல. இதனால். தமிழீழ டயஸ்பறாவானது உலகளாவிய சமூகத்தட்டாகின்றது. தொடரமுன் அவதானிக்க வேண்டிய வேறோர் விவகாரமும் உண்டு.

தமிழீழ டயஸ்பறாவின் சகோதர டயஸ்பறா:

    இலங்கைத் தீவில் இருந்து புலம்பெயர்ந்த தமிழ் பேசும் மக்கள் அனைவரும் தமிழீழத்தை ஏற்றுக்கொண்டவர்களாக இருப்பார்கள் என்பது நிச்சயமில்லை. பல்லின இணக்கமுடைய இலங்கையை விரும்புபவர்களும் இதில் இருப்பர். புலம் பெயர்ந்த மலையகத் தமிழர்களும், இஸ்லாமியர்களும் பல்லின இணக்கத்தை விரும்புவர்களாகவே உள்ளனர். இதனால் தமிழ் பேசும் மக்களின் டயஸ்பறா இரு கிழைகளைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. ஒன்று தமிழீழ டயஸ்பறா மற்றையது ஐக்கிய இலங்கை டயஸ்பறா. ஐக்கிய இலங்கை டயஸ்பறா சிங்கள வர்களையும் உள்ளடக்கியதாக இருக்கலாம். இவ்விரு டயஸ்பறாக்களும் இலங்கையில் நிலவும் தேசிய இன அடக்குமுறைகள் (ethnic) ஒழியவேண்டும் என்ற கருத்தில் ஒற்றுமையுடையவை, ஆனால் அதை எவ்விதம் ஒழிப்ப தென்பதில் வேறுபட்ட கருத்துக் கொண்டவர்கள். இதனால், தமிழீழ டயஸ்பறா, ஐக்கிய இலங்கை டயஸ்பறா ஆகிய இரு டயஸ்பறாக்களும் தனித்தனி வேலைத்திட்டங்களுடன் செயற்படும்.  அதேவேளை இவை இரண்டுக்கும் பொதுவான வேலைத்திட்டங்களும் சாத்தியம். இக்கட்டுரை தமிழீழ டயஸ்பறாவைப் பற்றியும், அதன் வகிபாகத்தையும் பற்றி மட்டுமே பேசுகிறது. ஐக்கிய இலங்கை டயஸ்பறாபற்றி தனியாகப் பேசிக்கொள்ளலாம்.

டயஸ்பறாவெனும் உலகளாவிய சமூகத்தட்டின் உட்கூறுகள்:-

    முதலில் சமூகத்தட்டு எனப்படுவது என்ன என்பதை நோக்குவோம். பல வர்க்கங் களை உள்ளடக்கிய ஒரு பொதுப்பிரிவே சமூகத்தட்டாகும். எ.கா:- விவசாயிகள். பணக்காரவிவசாயி, நடுத்தரவிவசாயி, ஏழைவிவசாயி, குத்தகைவிவசாயி, விவசாயக்கூலி ஆகிய வர்க்கப்பிரிவுகளை உள்ளடக்கிய, தொழில் அடிப்படையில் அமைந்த ஒரு பொதுப்பிரிவாகும். மாணவர்களும் ஒரு சமூகத்தட்டேயாகும். இது பல வர்க்கங்களினதும், பல தொழில் பிரிவினரதும் பிள்ளைகளை உள்ளடக்கிய, கற்பவர்கள் எனும் அடிப்படையில் அமைந்த ஒரு பொதுப்பிரிவாகும். இவ்விரு சமூகத்தட்டினரும் தத்தமெக்கென தனியான பொத்தம் பொதுவான அரசியல் குறிக்கோளையும் கொண்டவர்களாகும். டயஸ்பறாவும் பற்பல தொழில் பிரிவினரையும், அத்தொழில்பிரிவினரின் பற்பல வர்க்கங்களையும் உள்ளடக்கிய ஒரு மக்கள் திரளாகும். இவர்களிடையே காணப்படும் பொதுத்தன்மையெது? இவர்களுடைய பொத்தாம்பொது அரசியல் குறிக்கோள் எது? டயஸ்பறாக் களைப்பற்றிய வரைவுஇலக்கணத்தைப் புரிந்துகோண்டால போதுமானது. 

  சமுகத்தட்டென்றால் அதற்கென்று பொதுவான தொழில் குறிக்கோளொன்று இருக்கவேண்டும். டயஸ்பறாவின் பொதுத்தொழில் குறிக்கோள் என்ன? பொதுவான ஒரு தொழில்குறிக்கோளைக் கூறமுடியாதுள்ளது. இதனால்தான் டயஸ்பறாவை Distance Nationalism என அழைக்கும் கருத்து முன்வைக்கப்படுகிறது. அதாவது டயஸ்பறா தனியானதொரு தேசிய இனக் குழுமமாகக் (ethni group) கருதபடவேண்டும் என்பதாகும். இன்னும் விளக்கினால் தாய்நாட்டின் அரசியல் கட்டுமானம் டயஸ்பறாவையும் தனியானதோர் அரசியல் கட்டுமானமாக ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதாகும். இது பற்றி வேறோர் இடத்தில் விவாதிக்கலாம். அதுவரை டயஸ்பறாவை ஒரு உலகளாவிய சமூகத்தட்டு எனும் புரிதலுடன் தொடர்வோம். சமூகத்தட்டின் மற்றோர் குணாம்சம் அதன் தனித்துவமாகும். டயஸ்பறாவுக்கும் அத் தனித்துவம் உண்டு. தொடர்வோம்.
____________________________________________________________________________________
  பன்-தமிழிய (Pan-Tamilism) இயக்கத்தையும், டயஸ்பறாவையும் ஒன்றாகக் குளப்பிக்கொள்ளக்கூடாது. உலகத்தமிழர்கள் அனைவரினதும் பொதுவான நலன் கள்பற்றிப் பேசுவதே பன்-தமிழியமாகும். இது அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழர்களையும், அனைத்துப் புலம்பெயர்ந்த தமிழர்கள்களையும் உள்ளடக்கிய அணிசேரலாகும். உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளும், தமிழ் மொழியை கணணிக்குத் தகுந்த மொழியாக்குவதற்கான முயற்சிகளும் பன்-தமிழிய வேலைத்திட்டத்தில் சிலவாகும். தமிழன் இல்லாத நாடில்லை ஆனால் தமிழனுக்கென்றோர் நாடில்லை எனும் முழக்கம் இவ் இஸத்தின் அரசியல் வடிவமாகும்.  பன்-தமிழியம் பற்றிய ஆய்வுக்குரிய களம் இதுவல்ல, பன்-தமிழியத்தையும், டயஸ்பறாவையும் ஒன்றெனக் கருதக்கூடாதென்பதுடன் நிறுத்திக்கொள்வோம்.

    டயஸ்பறாவெனும் இவ் உலகளாவிய சமூகத்தட்டு, தனியொரு முழுமையாகவும், தனிமமாகவும் இருந்தாலும் இது ஒரு ஏகமல்ல. பற்பல சமூகக் குழுமங்களைச் சேர்ந்தவர்களினதும், வர்க்கத்தட்டைச் சேர்ந்தவர்களினதும் பிரிக்கவொண்ணாக் கூட்டாகும். இதன் அர்த்தம் இது பல்வேறு தனிநபர்களின் கூட்டு(அமைப்பு) என்பதல்ல. டயஸ்பறா ஒரு அமைப்பல்ல, அது அரசியல் உணர்வுள்ள தொடர்ந்து வளர்ந்துவரும் ஒரு மக்கள் திரளாகும். டயஸ்பறாவின் ஆக்கக்கூறுகளாக அமைந்துள்ள சமூகக் குழுமங்கள் எவையெவை என்பதை முதலில் நோக்குவோம். தாம் வாழும் நாட்டில் அவர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ள சமூக அந்தஸ்தின் அடைப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

)   இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள்.

  ஐரோப்பிய, அமெரிக்க, அவுஸ்ரேலிய அரசாங்கங்ளின் அழைப்பின் பேரில் குடியேறி  குடியுரிமை பெற்றவர்கள்.

   அரசியல் காரணங்களுக்காக சட்டரீதியாகக் குடியேறி குடியுரிமை பெற்றவர்கள்.

   அல்-அரசியல் காரணங்களுக்காக சட்டரீதியாகக் குடியேறி குடியுரிமை பெற்றவர்கள்.

  அரசியல் காரணங்களுக்காக சட்டவிரோதமாகக் குடியேறினாலும் குடியுரிமை பெற்றவர்கள். முன்னாள் அகதிகள்.

6 அரசியல் காரணங்களுக்காக சட்டவிரோதமாகக் குடியேறினாலும் தற்காலிக வதிவிட  உரிமை பெற்றவர்கள். அங்கிகரிக்கப்பட்ட அகதிகள்
.
7   அரசியல் காரணங்களுக்காக சட்டவிரோதமாகக் குடியேறி எந்த வதிவிட உரிமையும் பெறாதவர்கள். அங்கிகரிக்கப்படாத அகதிகள்.

  பற்பல ஊற்றுகளினதும், அருவிகளினதும், ஆறுகளினதும் சங்கமமே நதியாகிறது. இவை அனைத்தும் வேறுபாடின்றி, தமது அடையாளத்தை மறந்து நதியாகச் சங்கமித்தாலும் ஊற்றுகளும், அருவிகளும், ஆறுகளும் இருந்தது இருந்தபடியே ஓடிக்கொண்டிருக்கின்றன. அதேபோல்தான் டயஸ்பறாவும். அது முன்சொன்ன 7 சமூகக் குழுக்களின் சங்கமமாக இருந்தாலும் எழு சமூகக் குழுக்களும் இருந்தது இருந்தபடியேதான் இருக்கின்றன.
டயஸ்பறாவின் ஆக்கக் கூறுகளாக இருக்கும் வர்க்கத்தட்டுகள் எவையெவை என்பதை நோக்குவோம். டயஸ்பறா செயல்படும் நாடுகளின்/தேசங்களில் சமுகப்-பொருளாதாரக் கட்டுமானங்களைவைத்தே இப்பகுப்புகளை மேற்கொள்ள முடியும். இதனால் வர்க்கத்தட்டுகளை அடையாளப்படுத்துவது அவ்வளவு இலகுவான காரியமல்ல. டயஸ்பறா செயற்படும் நாடுகளின் சமூக-பொருளாதாரக் கட்டுமானத்தை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

1         ஏகபோக நிலையை அடைந்துவிட்ட முதலாளித்துவத்தின் ஆட்சிக்கு உள்பட்ட நாடுகள்.     எ+கா: அமெரிக்கா.
2  இன்னமும் ஏகபோக நிலையை அடையாவிட்டாலும் வளர்ச்சிபெற்ற முதலாளித்துவத்தின் ஆட்சிக்கு உள்பட்ட நாடுகள். எ+கா:ஜெர்மனி, பிரான்ஸ்
3    வளர்ந்துவரும் முதலாளித்துவத்தின் ஆட்சிக்கு உள்பட்ட நாடுகள். எ+கா: கிழக்கு ஐரோப்பிய நாடுகள்
4    குறைவிருத்தி முதலாளித்துவத்தின் ஆட்சிக்கு உள்பட்ட நாடுகள். எ+கா: இந்தியா
டயஸ்பறாவின் வர்க்க உள்ளடக்கம் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் வெளிவந்துள்ளனவா என்பது பற்றி நான் அறியேன். ஆனால் டயஸ்பறாவை முறையான உலகளாவிய சிவில் சமூகமாக வளர்த்தெடுக்க வேண்டுமானால் இவ்வித ஆய்வொன்று அவசியம். எவ்விதமோ மிகவும் அச்சத்துடன் ஆனாலும் எந்தத் தயக்கமும் இன்றி மிகவும் மேலெழுந்த முறையில் எனது கருத்தை முன்வைக்கின்றேன். ஒரு முடிவாகவல்ல ஒரு தொடக்கமாக.
டயஸ்பறாவின் வர்க்க உள்ளடக்கத்தை பொத்தம் பொதுவான மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

  அவையாவன :

   மிக நேர்சீராக ஒழுங்கமைந்த வர்க்கத் தொகுப்பு (complex).
2.       சிதைவடைந்த நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள வர்க்கத் தொகுப்பு.
3.       ஒட்டுண்ணி நிலைக்குள்ளாக்கப்பட்ட நடுத்தரவர்க்கத் தொகுப்பு.
 முதலாவது தொகுப்பு தானாக உருவாகியது. இரண்டாவதுவும் மூன்றாவதுவும் அவ்வித   நிலைக்கு உள்ளாக்கப்பட்டவை, என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.
1        மிக நேர்சீராக ஒழுங்கமைந்த வர்க்கத் தொகுப்பு (complex).

  உற்பத்தி, விநியோகம், நுகர்வு ஆகிய மூன்று பண்ட அடிப்படை சமூக நிகழ்வுப்போக்குகளுடனும் கொண்டுள்ள உறவுகளை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு நபர் எந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர் என்பதைக் கணித்துவிடமுடியாது. அவ்வித கணிப்பு முழுமையுடையதாகாது. அந் நபர் தனது வர்க்க நலனைப் பேணுவதற்கும், முன்னெடுத்துச் செல்வதற்கும் உரிய வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறாரா? அவ் வாய்ப்புகளைப் பயன்படுத்துகிறாரா என்பதுவும் கவனிக்கப்படவேண்டும். சமூக அமைப்புகள், சமூக இயக்கங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்பது பார்க்கப்படவேண்டும். இவ்வித நிலையில் அந்நபர் இருப்பாரானால், நேர்சீராக் ஒருங்கமைந்த வர்க்க நிலையில் உள்ளார் என்று அர்த்தமாகிறது. அப்போதுதான் அந்நபர் ஒரு வர்க்கமாக முழுமையடைகிறார். இவ்வித முழுமைகளின் தொகுப்பையே மிக நேர்சீராக ஒழுங்கமைந்த வர்க்கத் தொகுப்பு (complex) என அடையாளப்படுத்துகிறேன். மொத்த புலம்பெயர்ந்தோரில் இத்தொகுப்பின் பலம் எண்ணிக்கையளவில் மிகவும் குறைவானதே. ஆனால், டயஸ்பறாவின் அரசியல் திசைவழியைத் தீர்மானிப்பதில் இவர்கள்தான் முன்னணியில் திகழ்கிறார்கள். அமெரிக்க, பிரித்தானியா, நோர்வே, அவுஸ்ரேலியா தேசங்களே இவ்வகைத் தொகுப்பினரை அதிகளவில் கொண்டிருக்கும் முன்னணிநாடுகளாகும். இந்தியாவில் இத்தொகுப்பினரின் எண்ணிக்கை பூச்சியம்.
1.    சிதைவடைந்த நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள வர்க்கத் தொகுப்பு.

     வரவையும் செலவையும் சமநிலைப்படுத்தி வைக்கக்கூடியளவிற்கான வருவாய் இன்மை, அல்லது திட்டமிடப்படாத செலவுகளின் சுமை, தொழில் நிச்சயமின்மை, தொடர்ந்து தொழில் தேடவேண்டிய நிலை, குடும்ப உறவுகளைப் பேணக்கூடியளவிற்கான தங்கிடவசதியின்மை. வதிவிட அனுமதிக்காக நடத்தும் சலிப்பூட்டும் ‘போராட்டம்’, போலியான வாழ்க்கை, எவ்வளவு முயன்றாலும் உதிரி வர்க்க வாழ்க்கையில் இருந்து விடுபடமுடியாநிலை போன்ற பல்வேறு காரணங்களால்  அல்லல் படுவோரை அதிகமாகக் கொண்டதே இத் தொகுப்பாகும். மிகுந்த சிரமத்தின் மத்தியில் இவர்களில் ஒரு சாரார், உற்பத்தி, விநியோகம் ஆகிய இரு துறைகளிலும் ஒரு வர்க்கம் என்ற முறையில் ஈடுபடுவதில் வெற்றிபெற்றுள்ளதன் மூலம் உதிரி வர்க்க நிலையில் இருந்து விடுபடுவதில் வெற்றிபெற்றுள்ளார்கள். ஆனாலும் நேர்சீராக ஒழுங்கமைந்த வர்க்கம் என்ற நிலையை இவர்களால் அடையமுடியவில்லை. அம்முயற்சியில் அவர்களால் வெற்றிபெறமுடியவில்லை. தாம் வாழும் நாட்டின்/தேசத்தின் சமூக-கட்டமைப்புகளுடன் ஒரு இயல்பான அந்நியோன்ய உறவுநிலையை அவர்களால் ஏற்படுத்த முடியவில்லை. முன்னர் கூறியதுபோல் வர்க்க நலனுக்கான அமைப்புகளிலும், இயக்கங்களிலும் அவர்களால் இணையமுடியாதிருப்பதே இதற்கான காரணமாகும்.

No comments:

Post a Comment

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...